ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 105
துரியோதனன் உயிர் துறந்தான்
மேகலா : அஸ்வத்தாமா, தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட திருஷ்டத்யும்னனின் தலைமுடியைத் தனது இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அவனைத் தரையில் போட்டுத் தேய்த்தான். அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்த திருஷ்டத்யும்னனால், அஸ்வத்தாமாவின் திடீர் தாக்குதலை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அஸ்வத்தாமா, தனது வில்லினுடைய நாணை அறுத்து திருஷ்டத்யும்னனின் கழுத்திலே நாண் கயிற்றை இறுக்கி, அவன் கழுத்திலும் மார்பிலும் அவனை மிதித்து, ஒரு அற்ப மிருகத்தைக் கொல்வது போல, அவனைக் கொன்றான்.
அப்போது திருஷ்டத்யும்னன் எழுப்பிய பயங்கரமான சப்தத்தைக் கேட்டு, பாசறையில் உறங்கிக் கொண்டிருந்த காவல்காரர்களும், பெண்களும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, அங்கு நிகழ்ந்த கோரமான காட்சியைக் கண்டு அலறினார்கள். பலர் மயங்கி விழுந்தார்கள். அப்போது விழித்த வீரர்கள், அஸ்வத்தாமாவை எதிர்த்தார்கள். அவர்களையெல்லாம் அவன் அலட்சியமாக வெட்டி எறிந்தான். அப்பொழுது தெறித்த ரத்தத்தால் நனைக்கப்பட்ட அஸ்வத்தாமா, மனிதர்களை மீறிய ஒரு பிறவி போலேயே காட்சியளித்தான்.
தன்னை எதிர்த்து வந்த திரௌபதியின் மகன்களையெல்லாம் அஸ்வத்தாமா தனது கத்தியினாலேயே வெட்டி வீழ்த்தினான். அதைப் போலவே தன்னை எதிர்த்துச் சண்டையிட வந்த சிகண்டியை, தனது கத்தியால் இரண்டு துண்டாக்கினான்.
இவனுடைய கோர தாண்டவத்தைக் கண்டு, ஒன்றும் புரியாமல், யுத்த வீரர்கள் விட்டில் பூச்சிகள் விளக்கில் போய் விழுவது போல, அஸ்வத்தாமாவை எதிர்த்து நின்று உயிரிழந்தார்கள். பயந்து ஓடிய யானைகளும், குதிரைகளும் பல வீரர்களை மிதித்துக் கொண்டு ஓடியதாலும், பல வீரர்கள் உயிரிழந்தார்கள்.
இந்த கொடூரத்திலிருந்து எப்படியோ தப்பித்து வெளியே ஓட முயன்றவர்களை, வாயிலைக் காத்து நின்ற கிருபரும், கிருதவர்மாவும் வாயிற்படியிலேயே நிற்க வைத்துக் கொன்றார்கள். அத்தோடு நிற்காமல் பாசறையின் பல இடங்களில் தீ வைத்தார்கள். பாண்டவர்கள் வேறு இடத்திற்குச் சென்று விட்டதால், பாண்டவர்களின் துணை இல்லாததால், தங்களுக்கு இந்தக் கதி நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டே, பல வீரர்கள் மடிந்தார்கள்.
‘பாஞ்சாலர்களை அழிப்பேன்’ என்று துரியோதனனிடம் சபதம் செய்த அஸ்வத்தாமா, பாஞ்சாலர்களை மட்டுமல்லாமல், பாண்டவர்கள் படையையே நாசம் செய்தான். அந்தத் திருப்தியோடு பாசறையை விட்டு வெளியேற, கிருபரும், கிருதவர்மாவும் அவனோடு சேர்ந்து மகிழ்ந்தார்கள்.
மூவரும், துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவர்கள் நடத்திய கோர தாண்டவத்தைச் சொல்வதற்காக புறப்பட்டார்கள்.
துரியோதனன் அடிபட்டு வீழ்ந்திருந்த இடத்தை, அஸ்வத்தாமா, கிருபர், கிருதவர்மா ஆகிய மூவரும் சென்று அடைந்தார்கள். தொடைகள் முறிந்து, வாயிலில் இருந்து ரத்தத்தைக் கக்கிக் கொண்டு, மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்த துரியோதனனை, ஓநாய் போன்ற விலங்குகள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் பார்த்த அஸ்வத்தாமாவும், மற்ற இருவரும் அவனை நெருங்கி, அணைத்துக் கொண்டு அழுது புலம்பினார்கள்.
அவனது வாயிலிருந்து வழிந்த ரத்தத்தைத் தனது கைகளால் துடைத்த கிருபர் அழுது கொண்டே பேசலுற்றார். ‘பதினோரு அக்ஷௌஹிணி படைக்குத் தலைவனான இந்த துரியோதன மன்னன் இப்பொழுது ரத்தத்தில் நனைக்கப்பட்டு பூமியில் படுத்திருக்கிறான். இது பற்றி தெய்வத்துக்கே வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லையே. அவனுடைய கதாயுதம் அவனை விட்டுப் பிரியாமல் இருக்கும் மனைவி போல அவன் அருகிலேயே இருக்கிறது. நூற்றுக்கணக்கான அரசர்கள் எவனிடம் அச்சமுற்று, அவனிடம் வணங்கி நின்றார்களோ, அவன் இப்பொழுது புழுதியைக் கவ்விக் கொண்டு இருக்கிறான். மாமிசத்திற்காக அலையும் மிருகங்கள் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வேன்?”
இவ்வாறு பெரும் துக்கத்துடன் கிருபர் பேசிய பிறகு, அஸ்வத்தாமா துரியோதனனைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான். ‘துரியோதனா! குற்றமற்றவனே! குடிமக்களைக் காப்பாற்றுகின்றவனே! உனக்கு நேரிட்டிருக்கிற கதியைப் பார்க்கும் பொழுது, காலத்தை வெல்ல மனிதனால் முடியாது என்பதைத் தவிர, வேறு ஒன்றையும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
‘அற்ப மதி படைத்த பீமன், மாபெரும் வீரனாகிய உனக்கு இந்த கதியை எவ்வாறு ஏற்படுத்தினான்? மந்த புத்தி உடைய பீமன், உன் தலையைத் தன் காலால் உதைத்த போது, அதைப் பார்த்துக் கொண்டு நின்றானே அந்த தருமபுத்திரன்; அவனைப் போல நிந்திக்கப்படத்தக்கவன் உலகத்தில் வேறு எவனாவது உண்டா? அரசனே! நீ வீரத்தினால் வீழ்த்தப்படவில்லை; கபடத்தினால் வீழ்த்தப்பட்டாய். இந்த வெற்றியை அவர்களால் வெளியே சொல்ல முடியுமா? கீழ்த்தரமான தந்திரத்தினால் பெற்ற வெற்றியை, வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவிக்கப் போகிற அவர்களுடைய நிலையை விட, வீரனாகப் போர் புரிந்து, இப்பொழுது சொர்க்கத்தை அடையப் போகிற உன்னுடைய நிலை மேலானது.
‘உன் காதுகளுக்கு இன்பம் தரக்கூடிய செய்திகளைச் சொல்கிறேன் கேள். பாண்டவர் தரப்பில், பாண்டவ சகோதரர்கள், கிருஷ்ணன், சாத்யகி ஆகிய ஏழு பேரைத் தவிர மற்ற எல்லோரும் மடிந்தார்கள். திரௌபதியின் மக்கள் என்னால் கொல்லப்பட்டார்கள். திருஷ்டத்யும்னனும், அவனுடைய மகன்களும், பாஞ்சாலர்களும் கொல்லப்பட்டார்கள். பாஞ்சாலர்களின் பாசறையே என்னால் நாசம் செய்யப்பட்டு விட்டது. பாண்டவர்கள் தங்கள் மகன்களை இழந்தவர்களானார்கள். துரியோதனா! நீ இறப்பதற்கு முன்பாக இந்த செய்தியை உன்னிடம் சொல்லி விட்டேன்’.
அஸ்வத்தாமாவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மகிழ்வெய்தினான். ‘உம்மால் எனக்காகச் செய்யப்பட்ட இந்தச் செயலை, பீஷ்மர் செய்யவில்லை; கர்ணன் செய்யவில்லை; உமது தந்தை துரோணரும் செய்யவில்லை. ஆனால், நீரோ, கிருபருடனும் கிருதவர்மாவுடனும் கூடி, இந்த மாபெரும் சாதனையைப் புரிந்திருக்கிறீர். உங்கள் சாதனைக்கு என் பாராட்டுக்கள்’ என்று மனமகிழ்ந்து பாராட்டிய துரியோதனன், அந்த நேரத்திலேயே அவர்களுக்கு பெரும் துக்கத்தை உண்டாக்கும் விதமாக உயிர் துறந்தான்.
அவனுடைய உடல் பூமியில் சாய்ந்தது. அவனோ சொர்க்கத்தை அடைந்தான்.
கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பெரும் துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, அந்த இடத்தை விட்டு அகன்று, நகரத்தை அடைய தீர்மானித்தார்கள்.
இவ்வாறு திருதராஷ்டிரனுக்குச் செய்திகளைக் கூறிக் கொண்டிருந்த சஞ்சயன் சொன்னான், ‘அரசனே! நீர் கொண்ட கெட்ட எண்ணத்தினாலும், எடுத்த தவறான முடிவினாலும், பாண்டவர் படைக்கும், நமது படைக்கும் பேரழிவைத் தேடித் தந்த இந்தக் கொடூரம், இப்படியாக நடந்து முடிந்தது. வேந்தனே! உம்முடைய மகன் துரியோதனன் சொர்க்கத்தை அடைந்தவுடன், வியாஸ முனிவரால் எனக்கு அளிக்கப்பட்டிருந்த ஞான திருஷ்டியையும் நான் இழந்தேன்’.
திருதராஷ்டிர மன்னன் பெரும் மனக் கவலையில் ஆழ்ந்தான்.
(தொடரும்…..)
Comments
Post a Comment