ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 110

 பீமன் தப்பித்தான்

மேகலா : தான் பெற்ற நூறு மகன்களும் கொல்லப்பட்ட நிலையில், திருதராஷ்டிர மன்னன், கிளைகள் எல்லாம் வெட்டப்பட்ட மரம் போல் ஆனான். பெரும் சோகத்தில் மூழ்கி விட்ட அந்த மன்னனை, சஞ்சயன், விதுரர், வியாசர் முதலானோர், மரணத்தின் தன்மையையும், துக்கத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்லி தேற்றினார்கள்.

தன்னுடைய இறுதிக் காலத்தில், தனக்குத் துணையாகவும், தன் பிதுர் கடன்களை செலுத்துவதற்கும் ஒரு மகன் கூட உயிருடன் இல்லை என்ற நினைப்பு, திருதராஷ்டிரனை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. ‘மகன்களையும், மந்திரிமார்களையும், உறவினர்களையும் இழந்து விட்ட நான், தன்னந்தனியாக இந்த பூமியில் அலைய வேண்டியது தான். ஏற்கனவே கண்களை இழந்தவனாகிய நான், இப்போது, ராஜ்ஜியத்தையும் இழந்தேன்; மகன்களையும் இழந்தேன்; உறவினர்களையும் இழந்தேன். இனி நான் இழக்க வேண்டியது ஏது மீதியிருக்கிறது? பரசுராமர், நாரதர், கிருஷ்ணன், பீஷ்மர் போன்றவர்கள் கூறிய நல்லுபதேசங்களை நான் கேட்கவில்லை. அதற்கான பலனை இன்று அடைந்திருக்கிறேன். இதற்கு முந்தைய பிறவிகளில் நான் ஏதோ பெரும் பாவத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட துக்கம் எனக்கு வந்து சேர்ந்திருக்காது. பாண்டவர்கள் இங்கு வரட்டும். மேலுலகம் செல்லத் தயாராகி விட்ட என்னை அந்த சகோதரர்கள் பார்க்கட்டும்’ என்று கூறினான். அதைக் கேட்ட சஞ்சயன், திருதராஷ்டிரனைத் தேற்றி, ‘அறிவு என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, நீர் இந்தத் துக்கத்தை வீழ்த்தி விடும். மனத் தளர்ச்சியினால் நற்பயன் எதுவும் கிட்டாது’ என்று கூறினான். வியாசரும், விதுரரும் திருதராஷ்டிர மன்னனை ஆசுவாசப்படுத்தி, மனதைப் பண்படுத்தினர்.

வியாசர், ‘திருதராஷ்டிரா! என்னுடைய ஆலோசனையை ஏற்று, புண்ணிய காரியங்களில் மனதைச் செலுத்தி எஞ்சியிருக்கும் நாட்களை நீ கழித்தாய் என்றால், உனக்கு உலகில் புகழ் உண்டாகும். புத்திர சோகம் என்ற நெருப்பை அறிவு என்ற நீரினால் அணைத்து விடுவாயாக!’

இவ்வாறு வியாசர் கூறிய பிறகு, திருதராஷ்டிரன், ‘பெரியவரே! உமது கட்டளையை நான் ஏற்கிறேன். உயிர் விடும் எண்ணத்தைத் துறக்கிறேன். துக்கத்தில் மூழ்காமல் இருக்கவும் முயற்சிப்பேன்’ என்று கூறினான். வியாசர் அங்கிருந்து அகன்றார்.

திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி போன்றவர்களை அழைத்து வரச் சொல்லி விட்டு போர்க்களம் நோக்கிச் சென்றான். அவர்கள் யுத்த பூமியை நெருங்கிய போது, அவனைச் சந்திக்கும் எண்ணம் கொண்ட யுதிஷ்டிரர், திரௌபதி முதலானோருடன் அங்கு வந்து சேர்ந்தார். யுத்த பூமிக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண்கள் கூட்டம் யுதிஷ்டிரரைப் பார்த்துக் கதறியது. ‘போர்க்களத்தில் எல்லோரையும் கொன்று விட்டு, இந்த ராஜ்ஜியத்தில் நீங்கள் காணப் போகும் சுகம் என்ன? எல்லோரையும் இழந்து, இந்த அரச பதவியினால் நீர் அடையப் போவதுதான் என்ன?’ என்று அந்தப் பெண்கள் கூட்டம் அலறியது. அவர்களுக்குப் பதிலேதும் கூறாமல் யுதிஷ்டிரர், திருதராஷ்டிரனை அணுகி, அவனை வணங்கினார். அதன் பின்னர் யுதிஷ்டிரரோடு அங்கு வந்திருந்த மற்ற பாண்டவ சகோதரர்களும் திருதராஷ்டிரனை வணங்கி நின்றார்கள். திருதராஷ்டிரன் மனதில் சற்றும் அன்பில்லாமலேயே, தருமபுத்திரனைத் தழுவிக் கொண்டான்.

இதன் பிறகு, பீமனைத் தழுவிக் கொள்ள திருதராஷ்டிரன் விரும்பிய போது, கிருஷ்ணர், திருதராஷ்டிரனுடைய கோபம் என்கிற நெருப்பு, பீமனைப் பொசுக்கி விடும் என்பதை உணர்ந்து, திருதராஷ்டிரனை நெருங்கிய பீமனை விலக்கி, இரும்பாலான பீமன் போன்ற உருவத்தைத் திருதராஷ்டிரன் அருகில் வைக்க, திருதராஷ்டிரன் அதைக் கட்டிக் கொண்டான். பீமனை அழித்து விடும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிர மன்னன், கோபத்துடன் அந்த இரும்பு உருவத்தை இறுக்கித் தழுவ, அது நொறுங்கியது. பதினாயிரம் யானைகளுக்கும் இணையான பலமுள்ள அந்த அரசன் பிடியில் சிக்கிய பீமன் போன்ற அந்த உருவம் நொறுங்கிக் கீழே விழ, திருதராஷ்டிரனும் தன்னுடைய முயற்சியின் காரணமாக வாயினின்று ரத்தத்தைக் கக்கி கீழே விழுந்தான். சஞ்சயன் அவனைத் தூக்கி நிறுத்தினான். அப்பொழுது, பீமன் இறந்து விட்டான் என்று நினைத்து விட்ட திருதராஷ்டிரன், ‘பீமா! பீமா! உன்னைக் கொன்று விட்டேனே!’ என்று கத்தினான்.

திருதராஷ்டிரனுக்குக் கோபம் நீங்கி விட்டது என்றும், இப்பொழுது துக்கமே அவனுக்கு மிகுந்திருக்கிறது என்றும் புரிந்து கொண்ட கிருஷ்ணர், அவனைப் பார்த்துச் சொன்னார், ‘திருதராஷ்டிர மன்னரே! நீர் துக்கப்பட வேண்டிய அவசியமில்லை. பீமன் உம்மால் கொல்லப்படவில்லை. நீர் நொறுக்கியது இரும்பினால் செய்யப்பட்ட பீமனின் உருவமே! துரியோதனன் ‘கதை’ யுத்தத்தில் பயிற்சி பெறுவதற்காக செய்து வைத்திருந்த இந்த இரும்பு உருவத்தை நான் தான் உம்மிடம் வைத்தேன். அரசே! புத்திர சோகத்தின் காரணமாக நீர் நிலை தடுமாறி விட்டீர்! அதனால் பீமசேனனைக் கொல்ல விரும்பினீர். இந்த எண்ணம் உமக்குத் தகுதியானதல்ல. இதனால், இறந்த உமது மகன்கள், உயிரோடு திரும்பி வந்து விடப் போவதில்லை. நடந்தவற்றை ஏற்று, நடக்கப் போவதில் கவனம் செலுத்துங்கள். கோபத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்.

’இப்பொழுது நிகழ்ந்திருக்கும் நாசத்தைத் தடுப்பதற்காகத்தான், நானும், பீஷ்மரும், துரோணரும், விதுரரும், சஞ்சயனும் உமக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். ஆனால் நீர் தான் கேட்கவில்லை. துரியோதனனுடைய கெட்ட எண்ணத்திற்கு நீர் துணை போனீர். அதனால் விளைந்த நாசத்திற்கு இப்பொழுது பீமனைக் காரணமாக நினைக்கிறீர். திரௌபதிக்கு உமது சபையில் இழைக்கப்பட்ட அநீதிக்குக் காரணமான துரியோதனனைத்தான் பீமன் கொன்றான். இதில் பீமன் மீது என்ன குற்றம் இருக்கிறது?’

இவ்வாறு கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட திருதராஷ்டிரன், ‘கிருஷ்ணா! நீ சொல்வதெல்லாம் உண்மை தான். என் மகன் மீது நான் கொண்ட பாசம் என்னைத் தர்மத்தின் பாதையில் இருந்து விலக்கி விட்டது. நல்ல வேளையாக இப்பொழுது பீமன் உன்னால் காப்பாற்றப்பட்டான். கிருஷ்ணா! நான் இப்பொழுது என்னுடைய கோபத்தை விட்டு விட்டேன். மனதாரப் பாசத்தைக் கொட்டித் தழுவ விரும்புகிறேன். பாண்டவர்களிடம் அன்பு செலுத்தவே விரும்புகிறேன்’ என்றான்.

அதன் பின்னர், திருதராஷ்டிர மன்னன், பீமன் உட்பட பாண்டவ சகோதரர்கள் அனைவரையும் தழுவிக் கொண்டு, நல்ல வார்த்தைகளைப் பேசி, அவர்களுக்கு விடை கொடுக்க, அவர்கள் புறப்பட்டுச் சென்று காந்தாரியை அடைந்தார்கள்.

காந்தாரியுடனான அவர்கள் சம்பாஷணை எப்படிச் சென்றது என்ற விவரத்தை அடுத்த பகுதில் காண்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1