நீங்க..., நல்லவரா..., கெட்டவரா....? - பகுதி 4
கிருஷ்ணர் : மேகலா…. அரசியல்வாதியாகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இன்னும் ஒரு நல்லவரை, சுதந்திரப் போராட்டத் தியாகியைப் பற்றிப் பேசலாம் மேகலா….
மேகலா : நாம் இதுவரை இவரைப் பற்றிப் பேசியது மட்டுமில்லை கிருஷ்ணா…, யோசித்தது கூட இல்லை கிருஷ்ணா…. இவரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும், இவர் செய்த ஒரு காரியம், நிச்சயம் இவர் நல்லவர் தான் என்று நமக்குச் சொல்லி விடும்.
கிருஷ்ணர் : ‘ஒரு காரியமா….’? ‘நல்லவர்’ என்று சொல்லுமா? யார் அவர்….?
மேகலா : சர்தார்…..
கிருஷ்ணர் : வல்லபாய் பட்டேல்…. நான் தான் முதலில் சொன்னேன்…
மேகலா : யார் வேண்டுமானாலும் சொல்லலாம் கிருஷ்ணா! என்னைக் கேட்டால், எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும்….. ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’ ஒரு வல்லவர், திறமைசாலிஎன்று…
கிருஷ்ணர் : சரி…. விளக்கமாகச் சொல்லு மேகலா….
மேகலா : கிருஷ்ணா! நம்முடைய பாரத நாடு, பல மாநிலங்களாக, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், ஒருங்கிணைக்கப்பட்ட பாரத தேசமாக விரிவு படுத்தப்பட்டு பெருமையாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமே, சர்தார் வல்லபாய் பட்டேலின் சாதுர்யமும், சாமர்த்தியமும் தான் காரணம் கிருஷ்ணா.
கிருஷ்ணர் : அப்படி என்ன பிரமாதமாகச் செய்து விட்டார்….?
மேகலா : கிருஷ்ணா… சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியா, நவாப்களாலும், நிஜாம்களாலும், ஜமீன்களாலும் தானே ஆளப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, இயல்பாக எல்லா மாநிலங்களும், இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜாம்கள், நவாப்களின் கஜானாக்கள் அரசுடைமையாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், கணக்கிலடங்காத பணமும், காணக் கிடைக்காத சொத்துக்களும், அரசுடைமையாக்கப் படுவதை விரும்பாத நிஜாம்களும், நவாப்களும், அவரவர்க்குப் பிரியமான நாடுகளுக்குத் தப்பியோட முயற்சிக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியா எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, தன்னுடைய சமஸ்தானத்தைப் பாகிஸ்தானோடு இணைத்துக் கொள்ளலாம் என்று இங்கிருந்தபடியே நினைத்த நவாப்கள், அரசாங்கத்திற்கு ஒரு சவாலாகவே இருந்தனர்.
கிருஷ்ணர் : பின் எப்படி பிளவுபட இருந்த இந்தியா, ஒன்று பட்டது…?
மேகலா : பாராளுமன்றத்தில் ஒரே கசா முசா… முடியரசான நவாப்களை, குடியரசுத் திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். எதிர்கால இந்தியாவில், மதம் சார்ந்த பிரிவினைகள் வர விடாமல் தடுக்க வேண்டும். இத்தனையும் சுமுகமாக நடக்க வேண்டும். சுமுகமாக நடக்கவில்லையென்றால், அதிரடியாகவேனும் நடந்தே தீர வேண்டும்.
கிருஷ்ணர் : அதிரடியாகவா….? அப்படீன்னா…?
மேகலா : தலைமைப்பண்பு strong-ஆக இருப்பவரால் மட்டும் தான், இந்த வேலையைச் செய்து காட்ட முடியும். ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட, ‘சர்தார்’ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ‘வல்லபாய் பட்டேல்’ இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதாக முன்வந்தார். நாட்டின் மீது அக்கறை என்பது மட்டுமல்ல கிருஷ்ணா; ‘எதிர்கால இந்தியா’ வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக உருவாக வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டதினால் தானே, அவரால் துணிந்து இந்த வேலையைச் செய்ய நினைக்க முடிந்தது. அவரை, ‘சர்தார்’ என்று எல்லோரும் அறிவர். இந்தியாவை ஒருங்கிணைக்க அவரால் மட்டுமே முடியும் என்று நம்பினார்கள். ‘சர்தார்’ என்றால் என்ன கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : ‘சர்தார்’ – என்றால்,,,,,, ‘தாதா’ மாதிரியா….?
மேகலா : ‘தாதா’ – ண்ணா….?
கிருஷ்ணர் : Godfather….. மாதிரியா….. அவர், சுதந்திரப் போராட்ட வீரர் தானே மேகலா…?
மேகலா : ஆம் கிருஷ்ணா…. இருந்தாலும், அஹிம்சை பேசப்பட்ட சமயத்தில், ‘இரும்பு மனிதர்’ என்று பெயரெடுத்தவர்…. ‘மதச் சார்பின்மை’ என்று பிரகடனப்படுத்திய வேளையில், மதங்களைக் காரணம் காட்டி, இந்தியாவைப் பிரிக்க நினைத்தவர்களிடம், ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்தியவர். யார் எவரை எப்படி மடக்க முடியுமோ, அப்படி மடக்கியவர். பிரிவினைவாதிகளைத் தன் வழிக்குக் கொண்டு வந்தவர். இப்பச் சொல்லு…., இவர் நல்லவரா…, கெட்டவரா…. என்று.
கிருஷ்ணர் : யார் இந்த வேலையை எடுத்துச் செய்திருந்தாலும், இதைத்தானே செய்திருப்பார்கள். இவர் மட்டும் என்ன special…?
மேகலா : ஐயோ…. என்ன கிருஷ்ணா நீ…. சின்னப் புள்ள மாதிரி பேசுற…. ‘அஹிம்சை’யை காந்தி மட்டும் தான் பேச முடியும். தன்னலமற்ற கர்மத்தை, கர்மவீரர் காமராஜர் மட்டுமே செய்ய முடியும். அது போல தேச ஒருங்கிணைப்பை, ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’ மட்டுமே செய்ய முடியும்….. இது தெரியாதவனா நீ… என்னிடம் சின்னப் புள்ள மாதிரி நடிக்கிற….
கிருஷ்ணர் : காந்தி, காமராஜர் வரிசையில் நீ பட்டேலையும் சேர்த்திருக்கிறாய். ஒரு தேசம் நலம் பெற, சில தந்திரங்களைக் கையாளுவது, மகாபாரதக் காலத்திலேயே நாம் பார்த்திருக்கிறோமே. தர்மம் ஜெயிப்பதற்கு, அதர்மத்தை சற்று ஆட்டம் காண வைக்கலாம்; இதில் தப்பில்லை. நல்லவர்களுக்கு மட்டும் தான், தன் தேசம் நலம் பெற சில சூட்சுமங்களைக் கையாளும் முறை தெரியும். ஒரு சிலர் மட்டும் நல்லா வாழுவதற்காக, தான் பிறந்த மண்ணை அடமானம் வைக்கத் துணிபவர்கள் எல்லாம், வல்லவர்கலாக இருக்கலாம்; ஆனால், அவர்கள் நல்லவர்களா…? வல்லவர்கள் பல பேர் இருக்கலாம் மேகலா…. வல்லமையோடு நல்ல உள்ளமும் சேர்ந்து இருப்பவர்களை, காலம் கடந்து போனாலும், சரித்திரம் அவர்கள் பக்கத்தைப் புரட்டிக் காட்டும். சந்தேகமில்லாமல், தேசத்தின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் ‘நல்லவர்களே’….
(தொடரும்)
Comments
Post a Comment