ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 120

                                               தர்மங்களில் உயர்ந்தது

மேகலா : அடுத்த தினம் காலையில் புறப்பட்டு, தருமபுத்திரரும் மற்றவர்களும் பீஷ்மரை அடைந்தனர். அவரை வணங்கிய தருமபுத்திரர், பீஷ்மரைப் பார்த்துக் கேட்டார், ‘மனிதர்கள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருக்கும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவன், அவர்களுக்கெல்லாம் அதிபதி ஆவது எப்படி? மற்ற எல்லோரும் அவனை வணங்கி நிற்கும் நிலை எப்படி உருவாகிறது?’.

தனது இரண்டாவது நாள் விளக்கவுரையை பீஷ்மர் தொடங்கினார். ‘கிருத யுகத்தின் ஆரம்பத்தில், அரசனோ, ஆட்சி முறையோ, தண்டனை முறையோ கிடையாது. மக்களே தர்மம் தவறாமல் நடந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒருவரையொருவர் காப்பாற்றுபவராகவும், இருந்தார்கள். காலப் போக்கில், இந்த நிலை மாறியது. மனிதர்கள் ஆசைக்கு வசப்படலானார்கள். விவேகத்தை இழந்தார்கள். ஒருவரையொருவர் துன்புறுத்தவும், அழிக்கவும் தலைப்பட்டனர்.

’இந்த சீரழிவை சீர்ப்படுத்த தேவர்கள் கேட்டுக் கொண்டதால், பிரம்மா, ராஜதர்மத்திற்கான சாத்திரத்தை இயற்றினார். அதில், அறம், பொருள், இன்பம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. விவசாயம், வர்த்தகம் போன்ற தொழில்களை நடத்த வேண்டிய முறை, ஒற்றர்களை அமைக்கும் முறை, சமாதானம், சதி, சன்மானம், தண்டனை – ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வழிகள், வீண்செலவைத் தடுக்கும் வழிமுறைகள், அதிகாரிகளின் லட்சணங்கள், வெற்றிகளின் தன்மைகள், பாதுகாப்பு மற்றும் தண்டனை என்ற அடிப்படையில் ஆட்சி நடத்த வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய அந்த நூல், ‘தண்ட நீதி’ என்று பெயர் பெற்றது.

‘தண்ட நீதி’ உருவாகிய பிறகு, தேவர்கள், விஷ்ணுவிடம், மனிதர்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய பெருமைகள் பொருந்திய ஒருவனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்ற விஷ்ணு, தன் மனதிலிருந்து ‘விரஜன்’ எனும் மகனை உண்டு பண்ணினார். அவனையடுத்து, ‘கீர்த்திமான்’; அவன் மகன் ‘கர்த்தமன்’; அதன் பிறகு ‘அனங்கன்’, அவன் புதல்வன் ‘அதிவலன்’; அவன் மகன் ‘வேனன்’ ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அடுத்து அவன் மகன் ‘பிருது’ என்பவன் ‘பிருதுராஜன்’ என்ற பெயரோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். தண்ட நீதியையும், வேதங்களையும், தர்ம சாத்திரங்களையும் பிருதுராஜன் அறிந்திருந்தான். அவன் ஆட்சியில், மனிதர்கள் கவலையற்று வாழ்ந்தார்கள். நோய் நொடிகளும், திருடர் பயமும் இல்லாத ராஜ்யமாக அவன் ராஜ்யம் விளங்கிற்று. பயிர்கள் செழித்து வளர்ந்தன. மக்களையெல்லாம் மகிழ்வித்த காரணத்தால், ‘ராஜா’ என்ற பட்டத்தை அவன் பெற்றான். சான்றோர்களுடைய துன்பத்தை நீக்கியதால், ‘க்ஷத்திரியன்’ என்ற பெயரையும் பெற்றான். அவனால் காக்கப்பட்டதால், பூமிக்கு அவனுடைய பெயரை ஒட்டியே ‘பிருதிவி’ என்ற பெயர் வந்தது. அவனை மீறி யாரும் நடக்காமல் இருக்குமாறு, அவனுக்கு அருள் புரிந்த விஷ்ணு, தன்னுடைய அம்சத்தை அவனிடம் செலுத்தினார். அதன் காரணமாகத்தான், அரசர்களிடம் தெய்வாம்சம் இருக்கிறது என்ற உண்மை நிலை பெற்றது.

‘தருமபுத்திரா! தங்களுடைய நற்செயல்களுக்கான பலனைச் சொர்க்கத்தில் அனுபவித்து முடித்த சிறந்த மனிதர்கள், பூமியில் அரசர்களாகப் பிறக்கிறார்கள். இது விஷ்ணுவின் அருளால் நடப்பது. மனிதர் கூட்டம், அரசனுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. இதனால் தான் ராஜ நீதியானது மிக உயர்ந்த தர்மமாக இருக்கிறது’.

அதன் பிறகு பீஷ்மர், எல்லா வர்ணங்களுக்கும் பொதுவான தர்மங்கள், நான்கு வர்ணங்களுக்கும் உள்ள ஆச்ரமங்கள்; எப்படிப்பட்டவர்களை அரசன் விலக்க வேண்டும்; எப்படிப்பட்டவரை அரசன் நம்ப வேண்டும் போன்ற பல விவரங்களை தருமபுத்திரர் கேட்டுக் கொண்டதற்காக விரிவாக எடுத்துரைத்தார். பொதுவான தர்மமாகிய ‘எவரிடத்திலும் கோபம் இல்லாமை’, ‘உண்மை தவறாத பேச்சு’, ’நேர்மை’, ‘தன்னுடைய மனைவியிடத்தில் மட்டுமே சந்ததியை உண்டுபண்ணுவது’, ‘தூய்மையாக இருப்பது’, ‘எவருக்கும் துரோகம் இழைக்காமல் இருப்பது’, ‘தன்னைச் சார்ந்திருப்பவர்களைக் காப்பாற்றுவது’ என்று விளக்கிய பீஷ்மர், ஒவ்வொரு வர்ணத்தாரின் தர்மத்தையும் தெளிவாக விளக்கினார். பிராமண, வைசிய, சூத்திர தர்மங்களில் எவ்வளவு சிறப்பு இருந்தாலும், இவை எல்லாமே க்ஷத்திரியனின் ராஜ தர்மத்தைச் சார்ந்து நிற்பவையே. ஆகையால், அதை விட சிறந்ததொரு தர்மம் கிடையாது. பீஷ்மரின் உபதேசம் மேலும் தொடர்ந்தது.

பகைவனோடு நட்பு

மேகலா : ராஜ தர்மத்தின் மேன்மையை எடுத்துக் கூறிய பீஷ்மரிடம், தருமபுத்திரர், ‘பகைவர்களால் ஆபத்தை எதிர்நோக்கும் அரசன், எம்மாதிரி செயல்பட்டால், அதைத் தவிர்க்க முடியும்? பலம் குன்றிய ஒருவன், தன்னை விட பலவான்களால் அழிக்கப்படாமல் இருக்க, அவன் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்? எவனுடன் எப்போது சமாதானம் செய்து கொள்ள வேண்டும்? நட்பு நிலையை அடைந்துள்ள பகைவரிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இதையெல்லாம் எனக்கு விளக்குங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

பீஷ்மர் விளக்கத் தொடங்கினார். ‘பகைவன் நட்புநிலையை அடையலாம். அதே போல் நன்பனும் பகைமை நிலையை அடையலாம். தன் உயிரைக் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பகைவர்களுடன் கூட சமாதானம் செய்து கொள்ள வேண்டும். பகைவர்களுடன் எந்த நிலையிலும் சம்பந்தம் கிடையாது என்று தீர்மானித்துக் கொள்பவன், பயனை அடைய மாட்டான். எடுத்த செயலின் தன்மையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும், எதிரியுடன் சமாதானத்தையும், நண்பனுடன் விரோதத்தையும் எவன் செய்து கொள்கிறானோ, அவன் பயன் பெறுவான்.

நண்பர்களையும் அறிந்து கொள்ள வேண்டும்; பகைவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நண்பர்கள், சில சமயங்களில் பகைவர்களாகத் தெரியலாம். பகைவர்கள், சில சமயத்தில் நண்பர்களாகத் தெரியலாம். நண்பர்களுடன் ஏற்படக்கூடிய விரோதத்தையும், பகைவனோடு ஏற்படக்கூடிய சமாதானத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு அரசனின் ஆட்சியில் மக்கள் தர்மத்தின் பாதையிலேயே சென்றால், அம்மக்களின் புண்ணியத்தில் நான்கில் ஒரு பங்கு அரசனைச் சென்று அடையும். அதே போல, தர்மம் தவறி நடக்கும் மக்களுடைய பாவத்தை அரசனே பெறுவான்.

ஒற்றர்கள் மூலமாக நாட்டின் நடப்பை அறிந்து கொண்டு, யார் யாருக்கு நன்மை புரிய வேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும். கெட்ட நடத்தையுள்ளவர்களை அழித்து விட வேண்டும். விரோதிகளிடமிருந்து செல்வத்தை அபகரிப்பதும், தேவையானவர்களுக்கு செல்வத்தைப் பொழிவதும் அரசனின் கடமை.

ஆறு விஷயங்களில் அரசன் கவனமாய் இருக்க வேண்டும். எதிரியுடன் சமாதானம் செய்து கொள்வது; எதிரியை எதிர்ப்பது; எதிரியுடன் போர் புரிவது; எதிரிக்குப் பயத்தை உண்டுபண்ணுவது; கோட்டையைப் பாதுகாப்பது முதலியவற்றில் அரசன் கவனமாய் இருக்க வேண்டும். அத்துடன் விவசாயம், வர்த்தகம், பொக்கிஷம், வரி வசூலிக்கும் இடம் போன்றவற்றையும் அரசன் மிகவும் அக்கறையுடன் கவனித்து வர வேண்டும்.

அநியாயமாக வரி வசூலிப்பவன், அந்தச் செல்வத்தின் மூலமாகவே அழிவைத் தேடிக் கொள்வான். குரோதமும், ஆத்திரமுமின்றி தன்னுடைய கடமைகளை அரசன் செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் அரசன் மக்களின் பால் அன்பைக் கை விட்டு விடக் கூடாது. மக்களைத் துன்புறுத்தாத வகையில் அதிகாரம் செலுத்துபவனாக அரசன் நடந்து கொள்ள வேண்டும். தீர விசாரிக்காமல் யாருக்கும், எந்தத் தண்டனையும் கொடுக்கக் கூடாது. தன்னுடைய முடிவுகளைப் பகிரங்கப்படுத்தக் கூடாது. தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாமர்த்தியத்தைக் காட்டுவதற்கும் கூட, நல்ல நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். காரணமில்லாத கோபத்தை அரசன் தவிர்க்க வேண்டும். உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். கர்வத்தைத் தவிர்த்துப் பணிவுடன் தெய்வங்களை வணங்க வேண்டும்.

மேற்கூறிய குணங்களைக் கடைப் பிடிக்கும் அரசன், கீழுலகில் புகழையும், மேலுலகில் நற்கதியையும் அடைகிறான்.

(தொடரும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2