ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 124
தொடரும் பீஷ்மரின் உபதேசம்
மேகலா : தர்ம நியாயங்கள் பற்றியும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் பீஷ்மர் அளித்து வந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்த தருமபுத்திரர், ‘மூத்தவரே! நன்மையை உபதேசிக்கும் தகுதி உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. உங்களைப் போல் அறிவுள்ளவர் இந்த உலகில் வேறு எவரும் இல்லை. ஆகையால் தான் உமது சொல்லை மிகவும் ஆர்வத்துடன் இங்கே கிருஷ்ணரும் கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இங்கு உங்கள் பேச்சைக் கேட்க அரசர்கள் பலரும் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் புண்ணியம் கிட்டக் கூடிய ஒரு பழைய வரலாற்றை எங்களுக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
‘யுதிஷ்டிரா! பரமசிவனுக்கும் உமையவளுக்கும் இடையே நடந்த ஒரு அற்புதமான உரையாடலில், ராஜதர்மம் உட்பட பல தர்மங்கள் பற்றி பரமசிவர் விளக்கங்களைக் கூறினார். உமையவளும் பெண்களுக்கான தர்மங்களை விவரித்தார். பரமசிவனார், பிரம்மச்சர்யம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம் முதலிய நிலைகளின் தர்மங்களைப் பற்றி விளக்கமளித்தார். ‘குருவுக்குப் பணிவிடை செய்வது’ பிரம்மச்சாரியின் முதல் கடன்; அவன் பிக்ஷை எடுத்தே உண்ண வேண்டும்; வேதம் ஓதுவது அவனுடைய தர்மம். கிரஹஸ்தாச்ரமத்தில் ஈடுபட்டுள்ளவன் மிகவும் மேலானவன்; சோம்பல் இல்லாமை, தானம் செய்வது, விருந்தாளிகளை உபசரிப்பது, வேண்டியவர்களுக்கு உணவளிப்பது, மனதினாலும், செயலினாலும் எல்லோருக்கும் ஆதரவாக இருப்பது – ஆகியவை கிரஹஸ்தனின் தர்மங்கள். இவ்வாறு இல்லற தர்மத்தை நடத்துபவன், மிகவும் மேலான உலகங்களை அடைகிறான்.
‘வானப்ரஸ்தன், தரையில் படுக்க வேண்டும்; மரவுரி தரிக்க வேண்டும்; புலன்களை அடக்குவதும், பொறுமையும், பரிசுத்தமும் அவனுக்கு விதிக்கப்பட்ட தர்மங்கள்.
‘சந்நியாசியானவன், வீட்டை விட்டு விலக வேண்டும்; பொருளில்லாமை, முயற்சியில்லாமை, தியானத்தை விடாமை, பொறுமை, தயை ஆகியவை சந்நியாசியின் தர்மங்கள் என்று மகேஸ்வரர் விளக்கமளித்தார்.
அரசனுடைய ஒழுக்கம் என்பதாக பரமசிவனார் கூறியதாவது: ‘வம்ச பரம்பரையினாலோ, அல்லது தானே முயற்சியனால் பெற்றதாலோ, ஒருவனுக்கு அரசு பதவி கிட்டினால், அவன் அதற்குரிய குணங்களைத் தன்னிடம் பொருத்திக் கொள்ள வேண்டும். தன்னிடம் பணிபுரிபவர்களையும் நற்குணங்கள் கொண்டவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மக்களுக்கு, நற்குணங்களைப் புகட்ட வேண்டும். எல்லாவிதமான கல்விகளையும் கற்று, அரசன் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கமும், கல்வியும் உடையவர்களை மந்திரிகளாக அரசன் நியமித்துக் கொள்ள வேண்டும். ‘விரும்பத்தக்க நாடு, எதிரிகளால் வெல்ல முடியாத நகரம், நெருக்கடி காலத்தில் பாதுகப்பு தரும் பொக்கிஷம், அரசனிடம் திறமையான படை, அறிவுள்ள மந்திரிகள், பயன் தரும் ஆலோசனை, தன்னை அண்டியவர்களைப் பாதுகாக்கும் அரசன்’ – இவை யாவும் ஒரு ராஜ்யத்தின் அங்கங்கள். அரசனுடைய உரிமைகள், தர்மங்கள் எல்லாம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவையே.
‘குற்றத்தை விசாரிக்கும் அரசன், நன்றாக விசாரித்து, உண்மையைக் கண்டுபிடித்து, அதைப் பற்றித் தன் அறிவினாலும், சாத்திரம் தெரிந்த மனிதர்களின் யோசனையினாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, குற்றவாளிக்குத் தண்டனை விதிப்பது அரசனின் கடமை.
‘ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, அரசன், செயலை ஆரம்பிக்கும் வழி, யார் செய்யப் போகிறார், எவ்வளவு செலவாகும், அதற்கான காலம் எல்லாவற்றையும் ஆலோசித்தே காரியத்தில் ஈடுபட வேண்டும்.
‘கடுமையான சொற்களை அரசன் பேசக் கூடாது. அற்ப மனிதர்களோடு நட்பு கொள்ளக் கூடாது. பணியாட்களை நன்றாக நடத்த வேண்டும்.
தேசத்திற்கு நெருக்கடியான காலத்திற்கான செலவுக்காக, அரசனுடைய பொக்கிஷம் சேமிக்கப்பட வேண்டும். அரசனால் காப்பாற்றப்படுவது மக்களின் உரிமை. மக்களைக் காப்பது அரசனின் கடமை என்பதை நினைவில் கொண்டு, அநாவசியமான யுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நியாயத்தைச் செய்து கொண்டு, மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ராஜ்யம் – நீதியின் பாற்பட்டது.
‘தன் செல்வத்தை வைத்துக் கொண்டே எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு, ஒரு அரசனால் ஆளப்படுகிற ராஜ்யம், செல்வத்தின்பாற்பட்ட ராஜ்யம் – என்ற இந்த தர்மத்தில், நீதியின்பாற்பட்டு அரசாளும் மன்னன் நல்லுலகம் எய்துகிறான். செல்வத்தின்பாற்பட்டு அரசாளும் மன்னன் கெட்ட முடிவை அடைகிறான். இதில் சந்தேகமில்ல’ என்று பரமசிவனார் விளக்கமளித்தார்.
உமா மாகேஸ்வர உரையாடல் பற்றிய விவரங்களை நாரதர் எடுத்துரைத்தவாறே பீஷ்மர் மேலும் சொன்னார்.
‘தர்மத்தின் சூட்சுமத்தை எடுத்துரைக்குமாறு உமையவள் கேட்டுக் கொள்ள, மகேஸ்வரர், ‘கொல்லாமை தான் மிகவும் முக்கியமான தர்மம்’ என்று கூறுகிறார். தர்ம சாத்திரங்கள் எல்லாவற்றினுடைய சூட்சுமமும் அதுதான். தேவதைகளைப் பூஜிக்கலாம்; தர்மத்தைக் கடைப்பிடிக்கலாம்; பணிவுடன் இருக்கலாம்; வேதம் ஓதலாம்; யாகம் செய்யலாம் – இவை அனைத்திலும் கொல்லாமை தான் மிகச் சிறந்த தர்மமாகும்’ என்று பரமேஸ்வரர் கூறியவுடன், உமையவள், ‘அப்படியானால், அரசர்கள் அந்தத் தர்மத்தைக் கை விட்டவர்கள் அல்லவா?’ என்று கேட்டாள்.
அதற்கு பரமசிவனார், ‘கொல்லாமலேயே இருப்பவன் என்று இப்பூவுலகில் எவனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வீதியில் நடந்து போகும் போது, கால் பட்டு சிறிய ஜீவராசிகள் கொல்லப்படலாம். பல பிராணிகள், மற்ற பிராணிகளைக் கொன்றுதான் உயிர் வாழ்கின்றன.
‘யுத்த தர்மத்தை ஒட்டி போர் வீரர்கள் சண்டையிடும் போது, இரு தரப்பிலும் யார் இறந்தாலும் கொன்ற பாவம், அவர்களில் யாரையும் அடைவதில்லை. வீரர்கள் ஒருவரையொருவர் கொல்வது, கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல; நாட்டைக் காப்பதற்காக புரியப்படும் யுத்தம்; தன் தர்மத்தைக் காப்பற்றுகிற செயல் ஆகும். யுத்த தர்மத்தை மீறாமல் போரிடுபவன், மாபெரும் யாகத்தை முறை தவறாமல் நடத்திய புண்ணியத்தைப் பெற்று நல்லுலகம் எய்துகிறான். அரசன் மேலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?
‘நாடு முழுவதும், தடாகங்களை அரசன் நிறுவ வேண்டும். மக்களுக்குத் தேவையான அத்தனை பணிகளையும் அரசன் செய்து முடிக்க வேண்டும். குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மறுபடியும் குற்றம் செய்வதற்கு மக்கள் பயப்பட வேண்டும். அந்த அளவு அரசன் நடுநிலையோடு இருக்க வேண்டும். கோபம் கொள்ள வேண்டிய நேரத்தில் கோபத்தையும், தயை காட்ட வேண்டிய நேரத்தில் தயையும் காட்டுபவனே சிறந்த அரசனாக இருக்க முடியும். அலட்சியமும், அஜாக்ரதையும் அரசனால் கை விடப்பட வேண்டிய முக்கியமான குணங்கள் என்று விரிவாக எடுத்துக் கூறினார்.
பரமசிவனாருக்கும், உமையவளுக்குமிடையே மேலும் நடந்த உரையாடல் அடுத்த பகுதியில்….
(தொடரும்.)
Comments
Post a Comment