ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 134

கிருஷ்ணர் : எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களுடைய இறை நம்பிக்கை, யாரையும் காயப்படுத்தாதது. இறை நம்பிக்கை என்பது, மனதுக்குள் அன்பை மலர வைப்பது என்ற உணர்வினைத் தர வேண்டும். ‘மகாபாரதம்’ – நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. மகாத்மாவும், டாக்டர் கலாமும், நல்ல குறிக்கோளுடன் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எப்பொழுதெல்லாம் உங்களுக்கு ’மனச்சோர்வு’ ஏற்படுகிறதோ; எப்பொழுதெல்லாம் ‘அவநம்பிக்கை’ தலை தூக்குகிறதோ, இதோ, இந்த வாசகத்தை நினைவு கூறுங்கள்.

‘எப்பொழுதெல்லாம் தர்மம் மலிந்து போய்

அதர்மம் தலை தூக்குகிறதோ,

அப்பொழுதெல்லாம் என்னை நான்

பிறப்பித்துக் கொள்கிறேன்’

‘நல்லவரைக் காப்பதற்கும்

தீயவரை ஒடுக்குவதற்கும்,

தர்மத்தை நிலைநாட்டுவதற்கும்

யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’

நினைத்த கணத்தில், ஓடோடி வருவேன், எந்தக் காரியமும் வெற்றி அடைவதற்கு, திறமை, முயற்சி, அத்தோடு தெய்வ அருளும் இருக்க வேண்டும். அதே போல, வெற்றி கொள்வதற்கு, கடவுள் கை கொடுத்தால் போதும் என்பது மட்டும் கிடையாது. நம்முடைய உழைப்பும், அறிவும், நேர்மையும், உண்மையும் இருந்தால், நம்மைத் தேடி வரும் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது!

மேகலா : என்ன கிருஷ்ணா… அவ்வளவுதானா….?

கிருஷ்ணர் : வேறு என்ன சொல்ல வேண்டும்….?

மேகலா : இவ்வளவு பெரிய இதிகாசத்திற்கு…. ஸ்ரீ கிருஷ்ணர் பேசுவது இத்துனூண்டு தானா…? நான் ஒத்துக்கவே மாட்டேன்…

கிருஷ்ணர் : சரி…. சொல்லலாம்…. நீ கேள்விகளைக் கேள்….. பதில் சொல்லுகிறேன்.

மேகலா : இந்த மகாபாரதத்தைப் பற்றிக் கூறு கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இவையெல்லாம் மக்களை வழிநடத்துவதற்காகவே படைக்கப்பட்டவை மேகலா…. அதிலும், இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், இராமரும், கிருஷ்ணரும் மக்களிடையே பிறந்து, மக்களோடு வாழ்ந்து, சுக துக்கங்களை அனுபவித்து, மனிதர்களுக்கான வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இதிகாசங்கள் மக்களுக்குச் சொல்லுவதெல்லாம் சத்தியமானது. நீ, மகாபாரதத்தைப் பற்றிக் கூறச் சொல்லுகிறாய். முழுதாக இந்தக் கதையை எழுதி முடித்திருப்பவள் நீ. உனக்கு, கிருஷ்ணனாகிய நான், ‘மறுபடியும் மகாபாரதத்தைச் சொல்லு’ என்கிறாய்…. அந்த அளவுக்கு, வாசிப்பவரை மகாபாரத உலகத்திற்கே அழைத்துச் செல்லும் சக்தி அதற்கு இருக்கிறது. இந்த மகாபாரதத்தில், ஆரம்பத்தில் ‘யயாதி’ முதற்கொண்டு, குருக்ஷேத்திரத்தில் போர் முடிந்த பின்னே பீஷ்மர் வரையிலும் நிறையப் பேர் தர்மத்தை எடுத்துரைக்கிறார்கள். நீதியை, நியாயத்தை வலியுறுத்துகிறார்கள். மனிதர்களுக்குத் தேவையான தத்துவத்தை, யதார்த்தத்தை வரையறுக்கிறார்கள். இதை எழுதிய வியாசரே, வேதத்தைத் தொகுத்தவர் என்பதால், இந்த மகாபாரதத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. இதை வாசிப்பவர்களும், பிறத்தியார் சொல்லக் கேட்பவர்களும், விவாதம் பண்ணி தெளிவு பெறுபவர்களும் பாவத்தைத் தொலைப்பார்கள்; மேன்மை அடைவார்கள்; வாழ்க்கையில் நல்ல கதி அடைவார்கள்.

மேகலா : கிருஷ்ணா! இந்த மகாபாரதம் அத்தனை சக்தி வாய்ந்ததா…..? மகாபாரதம் வாசித்தவுடன் மேன்மை அடைந்து விடலாமா?

கிருஷ்ணர் : மகாபாரதம் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் உடையவர்கள்; ஈடுபாட்டுடன் வாசிப்பவர்கள்; ஒருமனதுடன் வாசிப்பவர்களுக்கும், உபதேசத்தைக் கேட்க விருப்பம் உள்ளவர்களுக்கும், வாழ்க்கையின் நுணுக்கங்கள் தெரிய வரும். யயாதியின் கதையை வாசித்த பின், ஆசை முடிவில்லாதது; ஆசையைத் துறத்தலே, மனிதன் பக்குவமடைவதற்கான வழி என்பது புரியும். ‘புரு’வின் தியாகம், தந்தைக்கு இளமையை நிறைந்த மனதோடு வழங்குதல் பலன் எதிர்பாராது செய்த இந்தத் தியாகச் செயலால், ராஜ்ஜியத்தையே ஆளும் நிலைக்கு அவனை உயர்த்துகிறது. இப்படி ஆங்காங்கே கூறப்பட்ட தியாகங்களும், வாழ்க்கை தர்மங்களும், நம் மனதில் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்; அது நமக்கு மேன்மையைத் தானே கொடுக்கும்…

இந்தக் கதையைப் படிப்பவர்கள் கேட்கலாம்; யயாதி கூறிய நீதியும், தர்ம நியாயங்கள் மட்டுமா இருக்கிறது. இந்த சமுதாயத்திற்குப் பொருந்தாத திருமணங்கள், ரகசியங்களும் இருக்கிறது; பழி வாங்கும் தன்மையும் கூறப்பட்டிருக்கிறது. பொறாமை, பேராசை என்ற குணநலன்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் இருக்கிறது. இவற்றால் மக்கள் மனக்குழப்பம் அடையலாம்; அல்லது, இதையே பின்பற்றும் அபாயம் வரலாம் என்று கூட நினைக்கலாம்…

ஒன்றைப் புரிந்து கொள் மேகலா…, உலகம் என்பது எல்லாக் குணங்களையும் தாங்கிய மனிதர்களை உள்ளடக்கியதே. இந்த உலகத்தில் வாழ வேண்டிய மனிதர்கள், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ, தன்னை மேம்படுத்திக் கொள்ளவோ, இந்த உலகத்தில் யாராவது ஒருவரைத் தன்னுடைய வழிகாட்டியாக அமைத்துக் கொள்வது உண்டு. தவறான முன்னுதாரணம் கூட, மக்களுக்குப் பாடமாக அமையும். மகாபாரதமும் அதைத்தான் செய்கிறது. வியாசர், மகாபாரதத்தின் கதாபாத்திரங்களை, தன் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், அதன் போக்கையும், அந்த காதாபாத்திரம் தவறு செய்யும் சம்பவத்தையும் மறைக்காமல் எடுத்துச் சொல்லுகிறார். அர்ஜுனன் வீரன் என்பதற்காக, அவனுடைய மனத்தளர்ச்சியை மறைக்கவில்லை. துரியோதனன், அரசன் என்பதற்காகவும், கௌரவர் என்பதற்காகவும், அவன் பொறாமையை மறைக்கவில்லை; மிகைப்படுத்தவுமில்லை. வாசிப்பவர்கள், வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று நினைக்கிறார். தர்மம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், தர்மத்தை எடுத்துச் சொல்பவர் எதையும் ஒளிக்காமல், நேர்பட எடுத்துச் சொல்ல வேண்டும்…. அதில் வியாசர் வென்று விட்டார் என்றே நினைக்கிறேன். உனக்கு மட்டும் ஏதோ கோபம் இருக்கிறது என்று சொன்னாயே…, அந்தக் கோபம் என்னவென்று சொல். அதைத் தீர்க்காவிட்டால், என் தலை வெடித்து விடும் போலயே…. என்ன கோபம்…, சொல்லு…..

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் ‘இந்த ‘மகாபாரதத் தொடர்’ நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1