வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 3

மேகலா : ‘அபிராமி பட்டர்’, திருக்கடையூரில் கோலோச்சும் அபிராமி கோயிலுக்கு வந்து விட்டால், அவர் பார்வை மொத்தமும், அன்னையை மட்டுமே பார்க்கும். அந்த நேரத்தில் அவருக்கு வெளி உலகமே மறந்து விடும். அன்று அமாவாசை நாள். அபிராமி பட்டர், அன்னையின் கோயிலுக்கு வந்து, பூசாரி, அன்னையை அலங்காரம் செய்வதைப் பார்த்து மெய் மறந்து நின்றார். வழக்கம் போல, வெளி உலகமே மறந்து போக, ஒரு மோனத் தவத்தில் இருப்பது மாதிரி, அன்னையைத் தரிசித்துக் கொண்டிருந்தார். அன்னையின் அழகு அப்படி…. சாதாரண மக்களையே மெய் மறக்கச் செய்யும் அன்னையின் அழகும், கம்பீரமும், பட்டரை மோனத் தவத்தில் மூழ்கச் செய்ததில் வியப்பொன்றுமில்லை.

அந்த நேரத்தில், கோயிலுக்கு, அன்னையை வழிபட, தஞ்சையை ஆண்ட ‘சரபோஜி மன்னரும்’ வந்திருந்தார். மன்னரைப் பார்த்த மக்கள், மன்னருக்கு வழி விட்டு பணிவுடன் ஒதுங்கி நின்றார்கள். மன்னரும், அபிராமி அன்னையை வழிபட சன்னதிக்கு வந்தார். அங்கு, தன்னையே மறந்து, அன்னையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அபிராமி பட்டரைப் பார்த்து, ‘மன்னர் வந்திருக்கிறார் என்று தெரிந்தும், விலகி நிற்காமல், எதுவும் பேசாமல், அன்னையையே பார்த்துக் கொண்டிருக்கிறாரே…, இவர் யார்’ என்று கோயில் பூசாரியிடம் கேட்டார். அதற்கு பூசாரி, ‘இவர் அபிராமி பட்டர்; அபிராமியைக் காணும் தோறும் மெய் மறந்து போய் விடுவார். மற்றும் கோள்நிலை அறிந்தவர். மக்களுடைய பல கேள்விகளுக்கு பதில் சொல்லுவார். அது அன்னையின் அருளால் பலித்து விடும். அதனால், மக்களுக்கு அவர் பால் அன்பு அதிகம்’ என்று சொன்னார்.

மன்னரோ, ‘மக்களை மதிக்கத் தெரிந்த அபிராமி பட்டர், மன்னன் வந்தது தெரிந்தும், வணங்கத் தெரியவில்லையே’ என்று கேட்டார். பூசாரியும், பட்டரிடம், ‘பட்டரே, மன்னர் வந்திருக்கிறார்’ என்று சொல்லவும், பட்டரும் எதேச்சையாக திரும்பிப் பார்த்தார். மன்னன், அபிராமி பட்டரிடம், ‘இன்று என்ன திதி’ என்று கேட்க, நிலவை நிகர்த்த அன்னையின் முக அழகில் மெய் மறந்து நின்றதாலோ என்னவோ, ‘இன்று பௌர்ணமி’ என்று கூறி விட்டு, மறுபடியும் மோனத் தவத்தில் மூழ்கி விட்டார்.

’அமாவாசை திதியான இன்று, பௌர்ணமி என்று கூறி பட்டர் என்னைக் கேலிக்குள்ளாக்குகிறார். ’அமாவாசை நாளான இன்று வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்ற வேண்டும். அப்படித் தோன்றாவிட்டால், பட்டர் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்’ என்று திடமாகச் சொன்னார். அங்கிருந்த மக்கள் அனைவரும், அபிராமி பட்டர் மீது உள்ள அன்பால், அரசன் கட்டளையை நினைத்தும், வரப் போகும் அபாயத்தை நினைத்தும் திகைத்துப் போனார்கள்.

மாலை நேரம் வந்தது. அபிராமி பட்டர் ஊருக்கு நடுவில் இருக்கும் மக்கள் மன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். ஊர் மக்கள் அனைவரும், என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்புடன் அங்கு கூடினார்கள். அனைவரும், பட்டரிடம், ‘இன்று அமாவாசை நாள்…. மன்னரிடம் பௌர்ணமி என்று சொல்லியது தவறல்லவா…. இன்று அமாவாசை நாள் தான் என்று சொல்லி விடுங்கள்; தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் நல்லது நினைக்கும் உங்களுக்கு தண்டனை கிடைப்பது அந்த அன்னைக்கே பொறுக்காது’ என்று வேண்டிக் கொண்டனர். அதற்கு அபிராமி பட்டரோ, ‘நான் தண்டனை பெறுவதை அந்த அன்னையே விரும்ப மாட்டாள் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், என் நாவிலிருந்து வாக்காக வருவது அந்த அன்னை அபிராமியே என்பது உண்மையானால், என்னை இன்று பௌர்ணமி திதி என்று சொல்லச் செய்த அந்த அன்னையே பௌர்ணமி நிலவைக் காட்டுவாள்’ என்று உறுதியாகச் சொன்னார்.

கிருஷ்ணர் : ஒரு பொய்யான தகவலைச் சொல்லி விட்டு, அன்னையையே உதவிக்குக் கூப்பிட்டாரே, அங்குதான் அபிராமி பட்டர் நிற்கிறார். சரி, மேலே சொல்லு….

மேகலா : சரபோஜி மன்னரும் மக்கள் மன்றத்திற்கு வந்து, தன் இருக்கையில் அமர்ந்தார். அபிராமி பட்டர், சிறை பிடிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டார். மன்னர், அவரை, ‘இன்று அமாவாசை என்று ஒத்துக் கொள்ளும். தண்டனையிலிருந்து விடுபடுவீர்’ என்றார். அபிராமி பட்டரோ, ‘மாலை மயங்கட்டும்; இருள் வரட்டும்; பௌர்ணமி நிலவும் வந்து விடும்’ என்று கித்தாய்ப்பாகச் சொன்னார்.

இரவு வந்தது. நிலவின் மங்கிய வெளிச்சம் கூட இல்லாத வானம் மிரட்டியது. மக்களெல்லாரும் தவித்துப் புழுங்கினார்கள். மன்னன், கர்வத்தால் கண்கள் சிவந்து, பட்டரை தண்டனைக்குள்ளாக்கத் தயாரானான். அபிராமி பட்டர், அந்த நேரத்தில் பாடியதுதான் ‘அபிராமி அந்தாதி’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! அன்னை பாடலைக் கேட்டுத்தான் ஓடி வந்தாளா…?

மேகலா : ‘மணியே, மணியின் ஒளியே….’ என்று பாடவும், அன்னை வானத்தில் தோன்றி, தன் காதுத் தோட்டை ஆகாயத்தில் வீசியெறிந்து, பௌர்ணமி நிலவாய் ‘தக தக’வென ஒளிரச் செய்தாள். அந்த அதிசயத்தை மக்கள் பார்த்தனர். குலவை போட்டு, ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். மன்னன் பார்த்தான்; அபிராமி பட்டரின் காலில் விழுந்து வணங்கினான். அபிராமி பட்டர் நிலவைப் பார்த்தார். நிலவின் ஒளியில், அன்னையின் முகத்தைப் பார்த்தார். மெய் சிலிர்த்து நின்றார். பொய்யை மெய்யாக்கிய அன்னையோ, வெள்ளமாய் அருளைப் பொழிந்த மகிழ்ச்சியில் கோயிலுக்குள் குடிபுகுந்தாள் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2