வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 9 (நிறைவுப் பகுதி)

மேகலா : மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு, திருவாதவூராரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்பதில் மிகுந்த கவலை உண்டானது. காவலாளிகளை அனுப்பி, ‘திருவாதவூரார் குதிரை வாங்கினாரா; வாங்கியிருந்தால் அழைத்து வருமாறு’ கூறியனுப்பினான். காவலாளிகளும், மன்னனின் செய்தியை சுமந்து கொண்டு, வழியில் திருப்பெருந்துறையில் இறங்கி, கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கு, தற்செயலாக திருவாதவூராரை சந்தித்தனர். மன்னன், அவர் மீது கோபம் கொண்டுள்ளதாக தெரிவித்து, குதிரைகளை எங்கே என்று கேட்டனர். அச்சமயத்தில், இறையனார் அசரீரியாகக் குரல் கொடுத்தார். ‘ஆவணி மாதம் மூலநட்சத்திரத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லியனுப்பு’ என்றார்.

கிருஷ்ணர் : பொய்யி….

மேகலா : அப்பச் சொன்னது…, தன்னுடைய பக்தனுக்காக ஆறுதல் பொய்… திருவாதவூராரும், நம்மைக் காப்பாற்றும் இறையனாரே பார்த்துக் கொள்வார் என்று நிம்மதியானார். காவலாளிகளிடம், ‘இன்னும் மூன்று நாட்களில் குதிரைகள் மதுரை வந்து சேரும் என்று மன்னனிடம் சொல்லுங்கள்’ என்றார். காவலாளிகளும் மதுரை சென்று மன்னனிடம் அப்படிக் கூற, மன்னனும் நிம்மதியானான்.

அந்த சமயத்தில் இறையனாரும், ‘நீ முன்னாடி போ; நான் குதிரையோடு வருகிறேன்’ என்று திருவாதவூராரிடம் சொல்ல, அவரும் இறையனாரின் பேச்சை நம்பி, மதுரை வந்து சேர்கிறார். மன்னனிடம், ‘இன்னும் மூன்று நாட்களில் குதிரைகள் வந்து சேரும்’ என்று சொன்னார். மன்னனும், அவர் வார்த்தையை நம்பி, பரிசுப் பொருட்களைக் கொடுத்து மகிழ்ச்சியுற்றான்.

மூன்று நாட்களாகியும் குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தனனுக்குக் கோபம் வந்து, திருவாதவூராரைத் தண்டனைக்கு உள்ளாக்கினான். திருவாதவூராரின் மன உளைச்சலைக் காணப் பொறுக்காத இறையனார், காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, தானும் குதிரைச் சேவகனாக உடையணிந்து, குதிரைகளை வழிநடத்தி வந்தார். அரண்மனை வாசலில் வந்து நின்ற கண்களைக் கவரும் சிறப்பு வாய்ந்த குதிரைகளைக் காண மக்கள் திரண்டு வந்தனர். குதிரைச் சேவகன், குதிரைகளின் சிறப்புக்களை எடுத்துக் கூறிய விதம், மன்னனின் மனம் கவர்ந்தது. அதனால் குதிரைச் சேவகனுக்கும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து, குதிரைகளை லாயத்தில் கட்டச் சொன்னான்.

லாயத்தில் கட்டப்பட்ட குதிரைகள் நள்ளிரவில், நரிகளாக மாறி, ஊளையிட்டுக் கொண்டே மதுரை வீதியில் ஓடின. மக்களெல்லாம் பயந்தார்கள். மன்னனோ, கடும் கோபம் கொண்டு, திருவாதவூராரை இழுத்து வரச் சொல்லி தண்டனைக்குள்ளாக்கினான். தன் மீது பக்தி கொண்ட திருவாதவூராரைக் காப்பாற்ற நினைத்த இறையனாரும், வைகையை வெள்ளப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். மதுரை வீதியெல்லாம், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட மன்னனும், போர்க்கால நடவடிக்கையாக, வைகைக் கரையை அடைக்க, வீட்டுக்கொரு ஆள் பொறுப்பு மேற்கொண்டு கரை அடைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டான்.

அவரவர், தங்கள் தங்கள் பகுதிக்கான கரையடைக்க முயலும் போது, பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் வந்தி என்னும் கிழவிக்கு, கூலிக்கு கரையடைக்க ஆள் கிடைக்காமல் இறைவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். அந்த வேளையில், இறையனாரும், ‘கூலிக்கு ஆள் கொள்வாருண்டோ’ என்று கேட்டுக் கொண்டே அந்த வழியாக வந்தார். கிழவி, ‘தனக்கு யாரும் இல்லை; உடைந்த கரையை அடைத்துக் கொடுப்பாயா’ என்று கூலியாளாக வந்த இறையனாரிடம் கேட்டாள். ‘கூலியாக என்ன கொடுப்பாய்?’ என்று கேட்டார். கிழவியும், ‘உதிர்ந்த பிட்டைத் தருகிறேன்’ என்று சொல்லிக் கொடுத்தாள். இறையனாரும், உதிர்ந்த பிட்டை விரும்பி சாப்பிட்டு, கரையடைக்கக் கிளம்பினார். கரையடைக்கும் போது, கரையடைப்பதைத் தவிர, எல்லாச் சேட்டைகளும் பண்ணினார். காவலாளிகள், மன்னனிடம் கூலியாளின் விளையாட்டுத்தனத்தைப் போட்டுக் கொடுத்தனர். மன்னனும், தன் பிரம்பால் கூலியாளாகிய இறையனாரை அடித்தான். அந்த அடி எல்லா ஜீவராசிகளின் மீதும் பட்டது. தன் மீது பிரம்படி பட்டதும், தன் கையிலிருந்த கூடை மண்ணை வைகை நதிக் கரையில் போட்டு, கரையடைக்கச் செய்து மறைந்தும் போனார்.

இந்தக் காட்சியை நேரடியாகக் கண்ட மன்னன், அதிசயமும், அதிர்ச்சியுமாகி, சிலையாகிப் போனான். இறையனார், அன்னை மீனாட்சியம்மையாருடன், ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து, ‘என் பக்தனாகிய திருவாதவூரன், விரும்பிய பணியை மேற்கொள்ளட்டும். மன்னனே! அறம் சார்ந்த உன் பணியும் சிறந்து விளங்கட்டும்’ என்று அருள் கூறி மறைந்து போனார்.

கிருஷ்ணர் : வாங்காத குதிரைகள் வரப் போவதாகச் சொன்ன பொய்யை மெய்ப்பிக்க, எத்தனை நாடகம்….! எத்தனை திருவிளையாடல்…. இதில், பிட்டு வாங்கி உண்டு…., பிரம்படி பட்டு…. அப்பப்பா…, ஒரேயொரு பக்தனுக்காக, எத்தனை கலவரம் நடத்தி….. அடேயப்பா…. சும்மா சொல்லவில்லை…., இவரைத் ’தாயுமானவன்’ என்று…. ‘பொய்யின்னாலும் பொய்யி’, அசகாயப் பொய்…. இறையனார் சொன்ன பொய்……. Great பொய்….

மேகலா : கிருஷ்ணா…. ஒரு great request…. இந்த ‘பொய்’ய மூட்டை கட்டி வச்சிருவோமா….

கிருஷ்ணர் : ஏம்மா…. ‘பொய்யை’ explain பண்ண சம்பவங்களே இல்லாமல் போச்சோ…

மேகலா : அப்படியெல்லாம் இல்ல கிருஷ்ணா…. நம்ம கண்ணு முன்னாடியே பல விஷயங்கள் நடந்து நம்மைக் கடந்து போகுது…. அதையெல்லாம் review பண்ன முடியாம…. மறந்து போயிருவோமோனு பயமா இருக்கு கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! அப்படீங்கறயா… நீ சொல்றதும் சரியாகத்தான் படுது…. ‘பொய்’ய எப்ப வேணாலும் பேசிக்கலாம். OK. இந்த topic-அ இத்தோட முடிச்சிக்கலாம். அடுத்து எதப் பத்திப் பேசலாம்…. அதை நாளை முடிவு பண்ணலாம்….

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1