எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 1

கிருஷ்ணர் : மேகலா! என்ன topic-ல பேசலாம். நீ தான் topic சொல்லணும். சரி…. நீ ’கிராமீயம்’ என்று எதை நினைக்கிறாய்…. பாமரத்தனத்தையா…., வெள்ளந்தித் தனத்தையா….?

மேகலா : கிருஷ்ணா…, கிராமீயம் என்று மக்களுடைய தன்மையைக் குறித்துக் கேட்கிறாயா… இல்லை கிராமீய வாழ்க்கை முறையைக் கேட்கிறாயா….? எனக்குக் கொஞ்சம் புரியலயே கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : பேசணும்ணு ஆரம்பிச்சாச்சு…. ‘கிராமீயம்’…., ‘மண்வாசனை’…. வாழ்க்கை முறை எல்லாம் தான் பேசலாமே…. தலைப்பு, ‘கிராமீயம்’. நீ எதையெல்லாம் கிராமீயத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாயோ, எல்லாவற்றையும் பேசலாம்.

மேகலா : Oh! எனக்குப் பிடிச்ச title கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ இப்போ சமீபத்துல, ‘களத்துமேடு’ என்ற தலைப்புல ஒரு சின்ன script’ எழுதியிருந்தாய் அல்லவா….. அந்த ‘களத்துமேடு’ என்ற சொல், எனக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சி மேகலா…. அந்த நினைவாகவே இருந்தேனா, உன்னைப் பார்த்ததும், ‘களத்துமேடு’, ‘கிராமீயம்’, ‘வயக்காடு’, ’வயல் வரப்பு’ என்றெல்லாம் பேசணும்னு தோணுச்சி…

மேகலா : ‘களத்துமேடு’ உனக்குப் பிடிக்குமா கிருஷ்ணா….. அழகான தெள்ளுதமிழ் வார்த்தை….

கிருஷ்ணர் : இங்க பாரும்மா…. நாங்கெல்லாம் கிராமத்துக்காரங்க…. எங்களுக்கு, களத்துமேடு, வயக்காடு இதெல்லாம் எங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை….. எங்களுக்கு பொய்யான வாழ்க்கை வாழத் தெரியாது…., எங்கள் உள்ளம் போல…. வானமும் என்றும் பொய்த்தது கிடையாது. பசுமையும், செழிப்பும், எங்கள் ஊரில் மட்டும் கிடையாது; எங்கள் இல்லங்களிலும் செழிப்பே நிறைந்திருக்கும். எங்கள் கிராமத்திற்குள் நுழையும் போதே, அந்த மண்வாசனை, நாசியை நிறைத்து, உன் உள்ளம் நிறைக்கும். அங்கு மேயும் ஆடுகளும், மாடுகளும், உன் கண்களைக் கவிதையாக்கும்…. வண்டி மாடுகள் செல்லும் பாதையின் இருமருங்கிலும், அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்களிடையில் காற்று தவழ்ந்து வருவதைப் பார்க்கப் பார்க்க, மனசுக்குள் உற்சாகம் கரை புரண்டோடும். வண்டி மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் வண்டி ஓடும் போது அசைந்து அசைந்து ஒலிக்கும் ஓசையில்… நீ நம்பினாலும் நம்பு…. நம்பாவிட்டாலும் பரவாயில்லை…. அன்றைய வேலைக்கான சுறுசுறுப்பே, அந்த மணியோசையில் இருக்கிறதாக எனக்குப் படுகிறது மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. நீ, ‘கிராமீயம்’ என்ற ‘topic’-ஐ ஏன் கொடுத்தாய் என்று இப்பப் புரிகிறது. எத்தனை ரசனையோடு பேசுகிறாய்…?

கிருஷ்ணர் : இது ரசனை மட்டுமல்ல மேகலா… இதுதான் கிராமீய வாழ்க்கை முறை. அதை நான் எடுத்துச் சொல்லச் சொல்ல, அது உனக்கு ரசனையாகத் தெரிகிறது. சரி… இப்ப உன் turn… நீ ரசிப்பதை எனக்குச் சொல்லு…..

மேகலா : கிருஷ்ணா…. கிராமம்… வயல்வெளி…. தோப்பு…. துரவு…. வரப்பு என்ற சொற்களையெல்லாம் பேசும் போது… அதில் கலந்திருக்கும் எளிமை, இயற்கையின் கம்பீரம், நான் மட்டுமல்ல, யாருக்குமே கிராமத்தை ரசிக்காமல் இருக்க முடியாது…. ஒளவையின் இந்தப் பாட்டு உனக்கு ஞாபகம் இருக்குதா கிருஷ்ணா… ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்’ – என்ற இந்தப் பாடல் மூலம், ஒரு கோன் உயர்வதற்கு, ஏன் நாடு வளம் பெறுவதற்கே, வரப்பு உயர வேண்டும்; கிராமம் செழிக்க வேண்டும் என்ற உண்மையை அழகாய் எடுத்துரைக்கிறார், பார்த்தாயா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எவ்வளவு அழகாக, எத்தனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். ஒரு நாடு வளம் பெறுவதற்கு, கிராமம் தான் உயிர்நாடி என்பது அவ்வைப்பாட்டிக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே…. நாம் கிராமத்தின் அழகைப் பேசுவோம். கிராமத்தான் அறிவை அலசுவோம். வெள்ளந்திச் சிரிப்பும், வெள்ளை மனசும் நம் உள்ளம் கவர்ந்ததா என்று பார்ப்போம்…. மேகலா…, நீ மீன் பிடிச்சிருக்கியா…? அதுவும்…, வாய்க்கால் வரப்புல துண்டு போட்டு பிடிச்சிருக்கியா…?

மேகலா : எங்க கிருஷ்ணா… நான் கிராமத்துலயும் வாழல; நகரத்துலயும் வாழல…. மீன் ஓடும் வாய்க்கால் வரப்பையோ, நீரோடையவோ நான் எங்க பார்க்க….

கிருஷ்ணர் : வாய்க்கால் வரப்புலயும், நீரோடையிலயும் மீன் பிடிச்சததேயில்லணு சொல்ற நீயா கிராமத்தின் அழகைச் சொல்லப் போற… தப்பான ஆளு கிட்ட ‘கிராமீயம்’ பற்றிக் கேட்டுட்டோமோ…

மேகலா : ஏன் கிருஷ்ணா! அப்படிச் சொல்லுற…. வாய்க்கா வரப்பு இருந்தாதான் கிராமமா… எங்க ஊரு சிவகாசி என்றா நினைச்ச…. ‘பூலாவூரணி’ என்ற அழகிய கிராமம். இப்போ, 3 மாசத்துக்கு முன்னாடி கூட நான் பூலாவூரணிக்குச் சென்றிருந்தேன். எங்க ‘ஐயாமா’ வீடு இன்னும் அங்க இருக்கு தெரியுமா? ஊருக்குள் நுழைந்ததும் முதலில் காளியம்மன் கோயில் இருக்கும். அதை ஒட்டிப் போகும் தெருவில் தான் எங்க ‘ஐயாமா’ வீடு…. அடுத்து மூன்று வீடு தள்ளி எங்க சின்ன ‘ஐயாமா’ வீடு…. அங்கிருந்து 10, 15 step வச்சா, எங்க குலதெய்வம் கோயில் இருக்கு கிருஷ்ணா. நான் இப்ப சொன்ன வீடுகளோடு சேர்த்து, இன்னும் 50, 60 வீடுகள் இருக்கலாம்… இதுதான் எங்க ’பூலாவூரணி’….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2