எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 10

மேகலா : இயற்கைக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்கும் போல கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படிச் சொல்ற…..

மேகலா : ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் கூட, மேய்ச்சலுக்கிடையில், புல்வெளியைப் பார்த்தவுடன், புல்லாங்குழல் வாசிப்பதில்லையா… இயற்கையை ஒட்டிய வேலையைப் பார்ப்பவர்கள், தங்கள் வேலைக்குத் துணையாக, இசையை அழைத்துக் கொள்வார்கள் போல…

கிருஷ்ணர் : சமயம் பார்த்து என்னையவே கலாய்க்கிறாயா…

மேகலா : நான் கலாய்க்கல கிருஷ்ணா… நெசம்மாதான் சொல்றேன் கிருஷ்ணா… கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்பவர்கள், ‘ஏலேலோ’, ‘ஐலசா’ என்று வார்த்தைகளைப் போட்டு,

‘ஏல ஏலோ ஏலேலேலோ’ – என்று பாடித் தங்கள் களைப்பை நீக்கிக் கொள்வதில்லையா… இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே, இது மீனவர் பாடியது; இது ஏற்றம் இறைக்கும் போது பாடியது என்று தெரிந்து கொள்ளுமளவுக்கு, அதன் இசையும் நம் மனதைக் கொள்ளை கொண்டு விடும். நாம் ஏற்கனவே ஒரு பாடல் பார்த்திருக்கோம்ல கிருஷ்ணா…..

‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு

கையுங்காலுந்தானே மிச்சம்….’ என்று பெண் அலுப்பாய் பாட, உடனே அவன் பாடுகிறான்…

காடு விளையட்டும் பொண்ணே நமக்கு

காலமிருக்குது பின்னே, காலமிருக்குது பின்னே’ 

என்று நம்பிக்கையோடு பாடுகிறான். ஒருவர் கேள்வி கேட்க, ஒருவர் பதில் சொல்ல, நம்பிக்கை தெறிக்கும் பாட்டு மட்டும் பிரமாதமாக வெளி வருது பார்த்தாயா கிருஷ்ணா…

இன்னொரு பொண்ணு பாடுது கேளு கிருஷ்ணா…

காடு கொடுத்த கனியிருக்கு,

கழனி வெளஞ்ச நெல்லிருக்கு

ஓடு திறந்த பஞ்சிருக்கு

உண்ண உடுத்த வகையிருக்கு’ 

இது திரைப்படப்பாடல் தான் கிருஷ்ணா…. இருந்தாலும், ஒரு விவசாயி, ஓயாது உழைப்பவன், வாழ்க்கையைப் பற்றி திருப்திப்படுபவர்கள் இப்படித்தானே கிருஷ்ணா பாடுவான்….

கிருஷ்ணர் : நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது என்றால், பஞ்சு மிட்டாயை சப்புக் கொட்டிய சின்னப்புள்ள மாதிரி பேசுற மேகலா…. இடையில், ‘ஏற்றம் இறைத்தல்’ என்று சொன்னாயே… ஏற்றம் இறைத்தல், நாற்று நடவு, உழுது போடுதல்…, இதெல்லாம் விவசாயம் சார்ந்த அழகான கிராமத்து தமிழ் வார்த்தை…. இதை இன்னும் நீ சொல்லவே ஆரம்பிக்கலையே….. நிலத்தை உழுவதனால்தானே ‘உழவன்’ என்ற பெயரே வந்திருக்கிறது. நிலத்தை உழுவதற்கு என்ன தேவை….

மேகலா : டிராக்டர்.. கிருஷ்ணா…

கிருஷ்ணர் : மூஞ்சியிலேயே குத்துவேன். நாம ’கிராமீயம்’ என்ற தலைப்பில் பேசுகிறோம், தெரியும்ல…..

மேகலா : கிருஷ்ணா… கலப்பையைக் கையில் ஏந்திய பலராமர், உன்னுடைய சகோதரன் என்பது கூட எனக்குத் தெரியும் கிருஷ்ணா… டிராக்டரும் இன்று கிராமத்தில் தான் உபயோகிக்கிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ‘கலப்பை’ தெரியுமா மேகலா உனக்கு…

மேகலா : கிருஷ்ணா… விவசாயம், எனக்குத் தெரியாது. பண்ணயம் பார்க்க விளைநிலங்கள் இல்லை என்றால் கூட, விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறை, அது பேசும் தமிழ்ச்சொல்; இதையெல்லாம் அனுபவிக்கப் பிடிக்கும் கிருஷ்ணா… கலப்பை, ஏர், நுகத்தடி, உழவு, நாற்று நடுதல், வரப்பு, வயக்காடு, ஏற்றம் இறைத்தல் என்ற இந்த சொற்களெல்லாமே இப்பொழுது புழக்கத்தில் இல்லை….; என்றாலும், ஒரு 50 வருஷங்களுக்கு முன்பு வரை, இவையெல்லாம் மனிதனின் உயிரோடு கலந்து விட்ட வார்த்தைகள் கிருஷ்ணா.

‘பட்டிக்காடா, பட்டணமா’ படத்தில் ஒரு காட்சி கிருஷ்ணா…. Hero, கிராமத்து பணக்காரர், அவரோட மனைவி London return; கிராமத்து வீட்டில், modern மனைவிக்கு வசதிகள் குறைச்சலாக இருக்கிறது என்று, தன் கணவரிடம் சண்டை போடுவார். கணவரும், தன் கணக்குப்பிள்ளையிடம், ‘அம்மா கேட்பதெல்லாம் செய்து கொடுங்கள்’ என்று கட்டளையிடுவார். Heroine-ம் கிராமத்து வீட்டை சகல வசதிகளையும் செய்து, modern ஆக்குவார். அந்த வீட்டின் வரவேற்பறையில், கலப்பையை கை நிறுத்தி வைத்தது மாதிரி நிறுத்தி வைத்திருப்பார்கள். Modern heroine, கலப்பை அசிங்கமாக இருக்கிறதென்று, அதை அகற்றி விட்டு, அங்கு கள்ளிச்செடி தொட்டியை வைப்பார். Hero வந்து பார்த்து விட்டு, பண்ணையாட்களைக் கண்டபடி திட்டி, ’இதை யார் செய்தது’ என்று கேட்பார். அதற்கு அவர்கள், மௌனமாக இருக்க, heroine, ‘ஐய, அது இங்கு அசிங்கமா இருக்குன்னு, நாந்தான் அதை வெளியில் போடச் சொல்லிட்டு, இந்தக் கள்ளிச்செடியை வைத்தேன்; பார்க்க அழகாயில்லை’ – என்பார். அதற்கு hero, ‘ஊருக்கே சோறு போடுற கலப்பையை வெளிய போடச் சொல்லிட்டு, சப்பாத்திக்கள்ளிய வைக்கச் சொல்றியே…’ என்று சத்தம் போடுவார். முன்னல்லாம், இங்க வந்தா பயபக்தி வரும்; இப்போ, பயம் மட்டும் தான் இருக்கு…. என்று சொல்லி, சப்பாத்திக் கள்ளிய தூக்கிப் போட்டுட்டு, கலப்பையை மறுபடியும் கம்பீரமா நிமிர்த்தி வைப்பார்.

இத எதுக்கு சொல்ல வரேண்ணா, 1974-லதான் இந்தப்படம் வந்தது. சுமார் ஐம்பது வருடத்திற்கு முன்பு வரைக்கும் கலப்பையோட பெருமை ஓரளவுக்கு தமிழர்கள் அறிந்துதான் வைத்திருந்தனர். ஆனால், இப்போ, உழுவதற்கு என்ன தேவை என்று உன் மாதிரி கேட்டால், சின்னப் பையன் கூட, ‘டிராக்டர்’ என்றுதான் சொல்வான் போல…. ஆனால், இன்று டிராக்டர் விவசாயிகளின் உயிர்மூச்சாகிப் போனதென்னவோ நிஜம்….

கிருஷ்ணர் : டிராக்டர் என்று சொன்னாக்கூட பரவாயில்லை… ‘உழுவது’ என்றால் என்னண்ணு தெரியாதே என்று சொல்லி விடுவார்களோ…. சரி, உன்னைக் கேட்கிறேன்…. உழுவதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2