எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 13

மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா…. ‘பஞ்ச் டயலாக்’ மாதிரி, பழமொழியை உருவாக்கி, அதன் மூலம் எத்தனையோ தகவல்களை அடுத்த தலைமுறையினருக்கு சொல்லியிருக்கிறார்கள் கிருஷ்ணா.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ – என்று ஒரு விவசாயி, விதைப்புக்கான காலத்தை சொல்லி வைத்தால், அது அழகான பழமொழி ஆகிப் போச்சு பார்த்தாயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சொல்லு மேகலா… இது மாதிரி கிராம மக்கள் சொல்லி வச்ச பழமொழிகளைச் சொல்லு… அதக் கேட்டாலே, கிராமத்தான், psychological-ஆக, practical-ஆக, technical-ஆக எத்தனை ஞானமுள்ளவனாக இருந்திருக்கிறான் என்று தெரிந்து விடும்….

ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ – என்று யார் சொன்னார்களோ…. ஆனால், அதில் பல்லுக்கான மருத்துவம் அடங்கியிருக்கிறது. எவ்வளவு அசால்ட்டாக சொல்லியிருக்கிறார்கள் பார்.

மேகலா : கிருஷ்ணா! நீ psychological என்று சொன்னாயா…. எனக்கு உடனே,

சின்னப்புள்ளைக வெள்ளாம, வீடு வந்து சேராது’ – என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருது. இன்றைய காலத்தில், சின்னப்புள்ளைக கையில், தைரியமாய், IT சம்பந்தப்பட்ட நுணுக்கமான project-ஐ கொடுக்கச் சொல்லுகிறார்கள். ஆனாலும், மிகப் பெரிய பொறுப்புகளை, சின்னப்புள்ளைக கையில் கொடுப்பது என்னைக்குமே risk-தான், என்று எக்காலத்திலும் மக்கள் தயங்கத்தானே செய்வார்கள். நம் முன்னோர்களில், ‘சின்னப்புள்ளைங்க விளையாட்டுத்தனமாத்தான் வேலைகளைக் கையாளுவார்கள்’ என்று நினைச்ச ஒரு குறும்புக்கார மனுஷன், அல்லது அனுபவப்பட்ட மனுஷன்,

‘சின்னப்புள்ளைங்க வெள்ளாம வீடு வந்து சேராது’ – என்று மனசு நொந்து சொல்லியிருக்காரு பார்த்தியா கிருஷ்ணா… கிருஷ்ணா, இந்தப் பழமொழியக் கேளேன்…

கிருஷ்ணர் : என்ன, சொல்லு…. சொல்லு…. நீ என்ன சொல்லப் போறேன்னு கேட்க ஆவலா இருக்கு மேகலா….

மேகலா : ‘சுக்குக்கு மிஞ்சின மருந்தும் கிடையாது; சுப்ரமணிக்கு மிஞ்சின கடவுளும் கிடையாது’

கிருஷ்ணர் : ஆஹா…. எவ்வளவு அற்புதமான பழமொழி மேகலா…. ‘சுக்கு’, மகத்துவமான மருத்துவ குணம் கொண்டது… இந்த பழமொழியைச் சொன்னவன், சுப்ரமண்யன் என்ற முருகன் மீது கொண்ட பக்தி மகத்துவமானது. நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரவல்ல ‘சுக்கும்’, அதர்மத்தை எதிர்த்து வீழ்த்திய ‘சுப்ரமண்யனும்’ கை மீது பலன் கொடுப்பார்கள் என்று அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

மேகலா : இப்படித்தான் கிருஷ்ணா…. இயற்கையோடு ஒன்றிய எளிய வாழ்க்கை வாழும் கிராமத்தானின் அறிவு இப்படித்தான், போகிற போக்கில, உடலுக்கு மருந்தாய் இருக்கும் ஒரு பொருளை குறிப்பிடும் போது, மனதுக்கு மருந்தாய் இருப்பதையும் சேர்த்து, அசால்ட்டாகச் சொல்லி விடுவார்கள். இது வேதமா, கவிதையா என்று நாம் ஆராய்ந்து, ஆராய்ந்து வியந்து போக வேண்டியதுதான்…

கிருஷ்ணர் : அதானே… காற்றின் தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தெரிந்தவன், நடத்திரங்களைக் கணக்கெடுத்து, திசைகளை அறியத் தெரிந்தவன், ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்றெல்லாம் பாடத் தெரிந்த, கோள்நிலை அறிந்தவன்….., இப்படியெல்லாம் வானியல் அறிவு தெரிந்த கிராமவாசி, ‘நாளந்தா பல்கலைக்கழகத்திலா’ படித்திருந்தான். தன் வாழ்க்கையை ஆழ்ந்து படித்து வந்த அறிவு…. அடேயப்பா…. சரி, இன்னும் சில பழமொழிகளைச் சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா! உனக்கு ஒரு பாட்டு தெரியுமா, கிருஷ்ணா…

‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று

ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’

ஒரு விவசாயி, தன் விளைநிலங்களில் விளைந்த நெற்கதிர்களில், நெல்மணிகளை நாற்றிலிருந்து பிரிக்க, கதிர்களை களத்து மேட்டில் பரப்பி வைத்து, அதன் மீது மாடுகளை ஓட்டி பிரித்து எடுப்பார்கள் இல்லையா….

கிருஷ்ணர் : ஆம்மாம்…. அதற்கான பாட்டா இது…? தன் ஊர்ப் பெருமையை புலவர் நெஞ்சு நிமிர்ந்து சொல்கிறார் பார். ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பதால், இந்தப் புலவர் சோழ நாட்டுப் புலவராக இருப்பார்….

மேகலா : யானையால் மிதிக்கப்பட்டு பிரித்தெடுத்த நெல்மணிகளை, தூசி தும்பு இல்லாமல் பிரித்தெடுக்கணும் இல்லையா…. அந்த வேலையை, காற்று அடிக்கும் போது, குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல்குவியலிலிருந்து, நெல்மணிகளை, சொளவில் அள்ளி அப்படியே, சிறிது சிறிதாக அசைத்து தூற்றி விடுவார்கள்….. அப்போ, தூசியெல்லாம் அடிக்கிற காற்றில் பறந்து சற்று தூரத்தில் விழும்…. நெல்மணிகள் இன்னொரு குவியலில் குவிந்து விடும். இதைக் காற்று அடிக்கும் போது செய்தால் தான், நெல்மணிகள் சுத்தமாக பிரிந்து வரும். இதைப் பார்த்த விவசாயி சொன்னதுதான்,

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’

நல்ல காலம் இருக்கும் போது, வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் போது அதைத் தவற விட்டால், இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா…. என்று எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது கிருஷ்ணா… கிராமத்து விவசாயிகள் எத்தனை தெளிவாக யோசித்திருக்கிறார்கள் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1