எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 16
கிருஷ்ணர் : அடுத்து என்ன…. அவர்களுடைய நடையைப் பார்க்கலாமா….
மேகலா : நடையா…. நடவடிக்கையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : விடிய விடிய படித்த பின்னும், சீதைக்கு ராமன் சித்தப்பாண்ணு சொன்ன கதையா இருக்கு… இவ்வளவு நேரமும் கிராமத்து மக்களின் எளிய பழக்க வழக்கம், வாழ்க்கை முறை பற்றித்தானே பேசி வருகிறோம். அதுவே நடவடிக்கைகள் தானே… நாம பேசப் போவது நடையைப் பற்றி….
மேகலா :
‘தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா’
கிருஷ்ணர் : ‘தடம் பாத்து நடை நடந்து’ – ‘வாவ்’…. எப்படிப்பட்ட வார்த்தை… நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்பதை, எப்படி அழகாக, ‘தடம் பாத்து நடை நடந்து’ என்று கவிஞர் சொல்லியிருக்கிறார்…., பார்த்தாயா மேகலா….
மேகலா : Oh! நீ தடம் பாத்து நடப்பதைச் சொல்லுகிறாயா…. நான் நடப்பதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைத்தேன்….
கிருஷ்ணர் : நீ தானே பாட்டுப் பாடினாய்…. சரி, சரி…, நீ எந்த நடையைச் சொல்லப் போகிறாய்…
மேகலா : இது உடம்பு இளைப்பதற்காகப் போகும் walking இல்ல கிருஷ்ணா…. கிராமத்து மக்கள், transport பரபரப்பு இல்லாத காலத்தில், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு, மாட்டு வண்டியைக் கூட எதிர்பாராமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் நடந்தே சென்று விடுவார்கள். அதிலும், பலர் காலுக்கு செருப்பு கூட அணியாமல் போகப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…. செருப்பு அணிந்தாலும், அது சுமார் 3 வருஷத்திற்கு மேலே தேயாத material-ஆக இருக்கும். அதைச் சுமப்பதற்கே தனி பலம் வேண்டும் கிருஷ்ணா…. ஆனாலும், செருப்பு இல்லாமல் நடப்பதையும் இயல்பாகவேதான் எடுத்துப்பாங்க கிருஷ்ணா…. அதிலும், எங்க ஐயாமா, புரட்டாசி சனிக்கிழமைக்கு விரதம் இருந்து, பூலாவூரணியிலிருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே தான் செல்வார்கள். திரும்ப வந்து தான் விரதம் முடிப்பார்கள். கிராமத்து மக்களுக்கு பஸ் தேவையில்லை; சொகுசு கார் தேவையில்லை…., தன் காலே தனக்குதவி என்றிருப்பார்கள். ரொம்ப தூரம் இருக்கிறதே என்று மலைக்க மாட்டார்கள். அள்ளி முடிஞ்ச கொண்டை, ‘மேக்கப்பே’ இல்லாத மஞ்சள் முகம்…., ‘மேட்சே’ இல்லாத blouse…., எங்க ஐயாமைக்கு அது கூடத் தேவையில்லை! பின் கொசுவம் வைத்துக் கட்டிய, ‘அதுவும் கணுக்கால் தெரியுமளவுக்கு’ கட்டிய நெகமம் சேலை…. வீட்டை ‘டபுள்’ பூட்டு போடணும் என்ற அவசியமில்லை…. நாலு வாளி தண்ணி இறைச்சு குளிச்சமா…., கிளம்பினமா…. நடந்தே சென்று பெருமாளைக் கும்பிட்டமா…., திரும்ப வந்து, வீட்டின் பின்புறத்தில வளர்ந்து நிற்கும் வாழை மரத்தில் இளங்குருத்து வாழையிலையை பறிச்சமா…., நீர் தெளித்து, கேப்பக்கழியை வச்சமா…, சாப்பிட்டமா…, என்று வாழ்ந்த எளிமையான காலம்…. நடந்து சென்று பெருமாளை வழிபட்டது, மனக்குறையாக நினைக்கத் தெரியாது…. தவமிருந்து சென்று சேவித்த பெருமையும், திருப்தியும் தான் முகத்தில் தெரியும் கிருஷ்ணா… பக்தியில் கூட இது ‘கிராமத்து பக்தி’….
கிருஷ்ணர் : Oh! இது என்னம்மா, கிராமத்து பக்தி…. புதுசா இருக்கு…..
மேகலா : ஆமா கிருஷ்ணா….. கோயிலுக்குப் போகணுமே…. கார் இல்லையா…., auto-வைக் கூப்பிடுவோமா…., யாராவது கூட வர்ராங்களா என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…, புரட்டாசி மாதம் பிறந்துருச்சா…, non-veg சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடு…. சனிக்கிழமை பிறந்துருச்சா, நடந்தே பெருமாள் கோயில் சென்று, நெற்றி நிறைய நாமத்தைப் போட்டு, பெருமாளை சேவித்த பின்…, நடந்தே வீடு திரும்புவது என்பது மாபெரும் தவம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அதான், ‘கிராமத்து பக்தி’ என்றேன். ‘தடம் பாத்து நடை நடந்து’ – என்ற வார்த்தையை சிலாகித்துப் பேசினாயே… இந்த பக்தியும் அப்படித்தான் கிருஷ்ணா…. அவங்க அம்மாவோ…. வீட்டிலுள்ள பெரியவங்களோ கடைப்பிடிச்சதை அவங்களும் கடைப்பிடிக்கிறாங்க…..
கிருஷ்ணர் : வெள்ளந்தியான மக்கள்…. ஆமாம், கிராமத்து பக்தின்னு நீ சொன்னவுடன் தான் எனக்கு கிராமத்து மக்களின் பக்தியைப் பற்றிப் பேசலாமோ என்று தோணுது…. ஆமாம் மேகலா…. உனக்கு ‘முளைப்பாரி’ தெரியுமா…?
(தொடரும்)
Comments
Post a Comment