அழகு - பகுதி 1
கிருஷ்ணர் : என்ன மேகலா…. உன்ன ஆளையே காணோம்…. கிராம வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, நேரம் போவது தெரியாம பேசினோமே…. இன்னும் உனக்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லையா….
மேகலா : அது ஒரு காரணம் தான் கிருஷ்ணா. இருந்தாலும், பூஜா விடுமுறைக்குப் பிறகே, ஹரி வந்ததும்…, அடுத்து தீபாவளி வந்தது…. மறுபடியும் ஹரி வந்தான்…. சஷ்டி விரதம் இருக்கக் கூட முடியவில்லை… அடுத்து இதோ, மகாதீபம் கூட முடிவடைந்து விட்டது. ரொம்ப…. நாள் gap விட்டதால், என்ன தலைப்பில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உனக்கு ரொம்ப நல்லா எழுதக் கூடியதான தலைப்பாகச் சொல்லு…. பேசலாம்…. சரி…. இப்பவும் கேட்கிறேன், உனக்கு ரொம்பப் பிடித்தது என்று எதை நீ நினைக்கிறாய்…?
மேகலா : ‘அழகு’ – அது எங்கெல்லாம் இருக்குதோ, அதை ரசிக்கப் பிடிக்கும்….. ரசிப்பதை எழுதுவது பிடிக்கும்… இப்படி…. நமக்குப் பிடித்தவர்களோடு அரட்டை அடிப்பது ரொம்பப் பிடிக்கும்…
கிருஷ்ணர் : Oh! அப்படியா….. உனக்குப் பிடித்தது என்று பட்டியல் போட வேண்டாம்… ‘அழகு’ என்ற தலைப்பில், உன் பார்வையின் அழகைப் பேசுவோம்…
மேகலா : பேசலாம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…, ‘அழகு’… இந்தத் தலைப்பில் நீ பேசப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் மேகலா…. ஒன்று ஞாபகத்தில் வைத்துக் கொள். ‘அழகு’ என்பது, பார்ப்பவர் மனதைப் பொறுத்தது…. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது, இன்னொருவருக்கு அழகாய்த் தெரியாமல் இருக்கலாம். உனக்கு அழகாய்த் தெரிவதை, எனக்கும் அழகாய்த் தெரியும்படி சொல்ல வேண்டியது உன் பொறுப்பு…. சரியா….
மேகலா : Ok கிருஷ்ணா! பார்ப்பவர் மனதைப் பொறுத்துத்தான், அழகு பிரகாசமாகத் தெரியும் என்று சொல்லிட்டயா… எனக்கு நினைவெல்லாம் எங்கெங்கேயே போய் விட்டது.
‘கருப்பு தான் அழகு
காந்தல் தான் ருசி’
– என்ற பழமொழி உனக்குத் தெரியுமா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! இதுக்குக் கூட பழமொழி இருக்கா மேகலா…. சூப்பர்….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. குழந்தை பிறப்பதற்கு முன்…, அம்மா, பாலில் குங்குமப் பூ போட்டு தினமும் குடிப்பாள். குழந்தை நிறமாகப் பிறக்கணுமாம்…. குழந்தை கருப்பாகப் பிறந்து விட்டால், அந்தக் கண்ணனே பிள்ளையாகப் பிறந்து விட்டான் என்று கொண்டாடுவாள்.
கிருஷ்ணர் : Oh! கருப்பாகப் பிறந்தால் மட்டும், கண்ணனே பிறந்தான் என்பாளாமா… அப்போ, வேற வழியில்லாமதான் கருப்பை ரசிப்பாங்களோ….
மேகலா : கிருஷ்ணா, ஒரு திரைப்படத்தில், தனுஷ் பேசும் வசனம் என்ன தெரியுமா?
‘சிலர பாத்தா பிடிக்கும், என்னை மாதிரி ஆள, பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்’
கிருஷ்ணா : வாவ்! இந்த வசனம் நல்லாயிருக்கே; நல்ல positive approach…. பார்ப்பதற்கு அழகான தோற்றம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை….. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ள மனிதன், எந்த வேலையைச் செய்தாலும், அந்தச் செயல், மிக அழகாக வெளிப்படும். சரி…, ‘அழகு’ என்பதில் உன்னுடைய கண்ணோட்டம் என்ன மேகலா…?
மேகலா : கிருஷ்ணா… எந்த அழகும்…, அமைதியாக ஜொலிக்கும் போது, நம்மை ரசிக்க வைக்கும்…, கவிதை எழுத வைக்கும். அதே அழகுக்கும் இன்னொரு முகம் இருக்கு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ என்ன சொல்ல வர்ற…, எனக்குப் புரியலயே….
மேகலா : அகல் விளக்கில் திரி போட்டு, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் போது…., பூஜையறையே தெய்வீக அழகில் நம்மை சிலிர்க்க வைக்கும். அழகாய் இருப்பதனால், அந்தச் சுடரை நாம் கையால் தொட முடியுமா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : தொட்டால் சுட்டு விடுமே….
மேகலா : அதைத்தான் நானும் சொல்கிறேன். அழகின் இன்னொரு பக்கம் ஆபத்தும் இருக்கிறதே….. ‘அழகு’ என்ற தலைப்பில் பேசப் போகிறோம் என்றவுடனேயே, எனக்கு மனதில் தோன்றியது, ‘மழை’ தான் கிருஷ்ணா… ‘தூரல் மழை’…, ‘சாரல் மழை’…, ‘அடர்ந்த மழை’….., ‘இடியுடன் கூடிய மழை’…., ‘ஆலங்கட்டி மழை’…., ‘ஊசித்தூறலாய் நெருக்கியடிக்கும் மழை’…. எந்த மழையென்றாலும், அது மகிழ்ச்சி தரக்கூடியதுதானே. மனசுக்குப் பிடிச்சாலே, அழகுதானே கிருஷ்ணா…. அதே மழை, நாள் முழுக்க தொடர்ந்து பெய்து நம்மை வெளி வேலைகளைச் செய்ய விடாமல் முடக்கிப் போடும் போது, மெள்ள ஒரு ’எரிச்சல்’ எட்டிப் பார்க்கும். அதே மழை, குளம் நிறைந்து, ஏரி நிறைந்து, எந்தக் குட்டையும் மிச்சம் மீதி இல்லாமல் நிறைந்த பின்னே, நதியும் பெருகி ஓட ஆரம்பித்து, அந்த வெள்ளம், வயற்பரப்பை நிரப்பி, பயிர்களை அழித்து நாசம் பண்ணி, அதுவும் போதாதென்று, ஊருக்குள்ளும் புகுந்து, வீட்டுக்குள்ளும் புகுந்து, மக்களையெல்லாம் தவிக்கச் செய்து…., அப்பப்பா…. தூரலும் சாரலுமாய் நம்மை நனையச் செய்யும் அழகான மழைதான்…., புயலும் வெள்ளமுமாய் நம்மைத் தவிக்கவும் வைக்கும்….
கிருஷ்ணர் : இயற்கையின் அமைப்பே அப்படித்தானே மேகலா… அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கத்தான் செய்யும்…. அழகு ஆக்ரோஷமாய் மாறும் போது, யாரால் தான் ரசிக்க முடியும் சொல்லு….
(தொடரும்)
Comments
Post a Comment