அழகு - பகுதி 2
மேகலா : நீ சொல்லும் போது தான் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா. குற்றாலத்தின் அழகே, அங்கு குதித்து ஓடும் அருவியும்…, நம் முகத்தில் தெறித்து வழியும் சாரலும் தானே…. அதை அனுபவிக்க ஒரு முறை தீபாவளியன்று குற்றாலம் சென்றிருந்தோம் கிருஷ்ணா. அது மழை பெய்யும் காலம். சும்மாவே குற்றாலம் ஊர் முழுவதும் சாரலால் நனைந்து காலுக்குள்ளும் ஈரம் நனைத்துக் கொண்டே இருக்கும். அன்று என்னவோ…, குற்றாலத்தின் சாரலா…, மழையின் சாரலா என்று தெரியாமல் தொடர்ந்து வானம் பொழிந்து கொண்டே இருந்தது. இந்தச் சாரலில் நனைந்து கொண்டே ஐந்தருவிக்குக் குளிக்கச் சென்றோம். எப்பவுமே ஐந்து அருவிகளாக பிரிந்து கொள்ளை அழகில் குதித்து கும்மாளமிடுமல்லவா…. அன்று…., அப்படியொரு நீர்வீழ்ச்சியை நீ பார்த்திருக்கவே மாட்டாய் கிருஷ்ணா. புதுப்புனலாய் பொங்கி வரும் நீர்வீழ்ச்சி ஓடி வரும் வேகத்தில், செம்மண் நிலப்பரப்பையும் கலந்து இழுத்து வந்து குழம்பாக்கி செம்புலனாய் குதித்து வந்தது…. அவ்வப்போது, சிறு சிறு கற்களும் தெறித்து விழுந்தது. ஐந்தருவி ஓரருவியாய் அடர்ந்து நின்று ஆக்ரோஷமாய், பெருத்த இரைச்சலோடு ஓடி வந்தது. கீழே நிற்பவர்களையெல்லாம், யாராயிருந்தாலும் அடித்து இழுத்துச் செல்லும் வேகத்தோடு ஓடி வந்தது. கீழே விழுந்த அருவி, அந்த இடம் முழுக்க பரவி ஓடி, திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த எங்களை ஒதுங்கி நிற்கக் கூட விடாமல் சுழித்து ஓடியது. அண்ணாந்து பார்த்தால் அடர்ந்து விழும் அருவியின் வேகம் எங்களை மிரட்டியது.
கிருஷ்ணர் : சரி…., குளித்தாயா…, இல்லையா….
மேகலா : எப்படி குளிப்பது கிருஷ்ணா… பாலாறு தான் பெருகி ஓடி வருதோ என்று நினைக்க வைக்கும் ஐந்தருவி…, அன்று கிட்ட நெருங்கவே முடியாதபடிக்கு செம்மண்ணருவியாய் பெருக்கெடுத்து குதித்து ஓடியது… மறக்க முடியாத அனுபவமாக இருந்தது கிருஷ்ணா… பழைய குற்றாலத்திற்கு சென்றோம். அங்கு நம்ம வீட்டு shower-ல குளிப்பது மாதிரி தானே இருக்கும். ஆனால், அன்று நாம நடந்து வரும் பாதையில் படிகள் கூட மறைந்து போகுமளவுக்கு அருவி நீர் பரவி ஓடி, நம்மை அருவி பக்கமே செல்ல முடியாத அளவுக்கு தடுத்து நிறுத்தியது. ஆக்ரோஷமான குற்றாலத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நல்ல வேளை மேகலா…. ஆக்ரோஷத்தை மட்டும் காட்டி ஆனந்தமாய் பரவி ஓடி விட்டது… ஆக்ரோஷத்தை செயலில் காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும்…
மேகலா : ஐயோ…. அம்மா…. நெனச்சுப் பார்க்கவே பயமா இருக்கு கிருஷ்ணா. ஆனால், நீ சொன்ன மாதிரி… நிமிர்ந்து திரிசடைகளை விரித்து நின்று அந்த பரம்பொருள் விஸ்வரூபம் காட்டியது மாதிரி தான் இருந்தது கிருஷ்ணா…. சாரலாய் நம்மை வசப்படுத்தும் அருவி…., ஆக்ரோஷமாய்த் துள்ளி வந்ததைப் பார்த்து, திகிலோட திகைத்து நின்ற காட்சி மறையாதது போல… இதே குற்றாலம், வெறும் பாறையாய், சூரிய ஒளியில் குளித்து, வெப்பத்தின் கதிர்களால் நம்மை வியர்வையில் குளிக்க வைத்ததையும் என்னால் மறக்க முடியாது. அப்படி ஒரு குற்றாலத்தைப் பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அருவியில் தண்ணீர் விழாமல் குற்றாலமா..? என்ன நீ பேசுற…?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இயற்கை என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே, எனக்கு மூலிகை மரங்களும்…, வனங்களும்…, அதில் ஒழுகி ஓடி வரும் நீரோடையும்…, காற்றும், சாரலுமாய் குற்றாலம் தான் ஞாபகத்துக்கு வரும். அதே போல, நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி புத்தகத்தில் படித்தால் கூட, அருவி என்றாலே குற்றால நீர்வீழ்ச்சி தான்…; வேறு எதுவும் பக்கத்தில் கூட வர முடியாது என்று ‘கர்வமாய்’ சொல்லுவேன். கோயில் என்றவுடனே…, நீர்வீழ்ச்சியின் சப்தங்களே வேத மந்திரங்களாக…, அதன் சாரலே…, அபிஷேகமாக ஆனந்தமாய் வீற்றிருக்கும் குற்றாலநாதர் கோயில் தான் மனதுக்குப் பிடித்தது என்று சொல்லுவேன். இதற்கெல்லாம் ஒரே காரணம், அருவியும், அதன் சாரலும் தான். அப்படிப்பட்ட குற்றாலம், வெறும் பாறையாய் நின்ற கோலத்தைப் பார்த்து…, ஒரு அழகு, அலங்கோலமாய் நின்றதாக உணர்ந்தேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! பணம் படைத்தவன், பணம் அத்தனையும் தொலைத்து இயலாமையில் நின்றால், எத்தனை வருத்தமாக இருக்குமோ…, அப்படியிருக்கு…, நீ சொல்லிய காட்சி… அழகு, அழகுபடுத்திக் கொள்ளும் போது, அல்லது இயற்கையா, இயல்பாய் இருந்தால், மேலும் அழகாகி விடும் இல்லையா. குற்றாலமும், அருவியும், சாரலுமாய் இருந்தால் தானே அழகு….
(தொடரும்)
Comments
Post a Comment