கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 2

மேகலா : கிருஷ்ணா…., நம்ம பாரத தேசத்தில், தேசத்தால் ஒன்றுபட்டிருந்தாலும், மொழியால், திசையால், இனங்களால் மக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றனர். ஒவ்வொரு இனத்திலும், கலாச்சார ரீதியாக திருமணங்கள் ஏகதேசம் ஒரே மாதிரி நடந்தாலும், வசதி வாய்ப்புக்களாலும், மனவிருப்பத்திற்கேற்றபடியும், கல்யாணங்கள் பிரம்மாண்டமாகவும், எளிமையாகவும், சுருக்கமாகவும், விரிவாகவும் நடந்து விடுகின்றன. இந்த ‘மாப்பிள்ளை அழைப்பை’ எடுத்துக்கோயேன். எங்க ஊரில், அந்தக் காலங்களில், ‘மாப்பிள்ளை அழைப்பு’ என்பது, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில்தான் நடக்கும். இதற்கு, ‘பட்டினப் பிரவேசம்’ என்று பெயர். திருமணம் முடிந்ததும், பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து பட்டினப் பிரவேசம் செல்வார்கள். அசடு வழிந்து கொண்டு மாப்பிள்ளையும், குனிந்த தலை நிமிராமல் பொண்ணும், கல்யாணத்துக்கு வந்த குஞ்சும் குளுமானுமாக பத்துப் பன்னிரெண்டு சின்னப் பிள்ளைகள் – அதிலும் குறிப்பாக, ‘பொண்ணோட தம்பி’, உரிமையாக மாப்பிள்ளை மடியில் உட்கார்ந்து வருவான். இதே மாப்பிள்ளை அழைப்பு, பிறகு திறந்த காரில் நடக்க ஆரம்பித்தது. வண்டிதான் மாறியது…., ஆனால், காட்சி என்னவோ…., அதே அசடு வழியும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை மடியில் குழந்தைகள் என்று வேடிக்கையான கலாட்டா…., கல்யாணத்தை கலகலப்பாக்கி விடும். இந்த மாப்பிள்ளை அழைப்பு நடக்கும் போது, உற்றார் உறவினரெல்லாம் உடன் செல்ல, உச்சி வெயில் சூரியன் கூட மிரண்டு விடுவான் என்றால் பாத்துக்கோயேன்….. அந்தக் காலங்களில், இரவு நேர ஊர்வலத்தில் ‘பெட்ரோமாக்ஸ் லைட்’ இல்லாத கல்யாணமே கிடையாது கிருஷ்ணா…. எங்க ஊரில் ஒரு சைக்கிள் கடையில்தான் இந்த லைட்டை வாடகைக்கு வைத்திருப்பார்கள். ஆளுயர பெட்ரோமாக்ஸ் லைட்டைத் தலைச் சுமையாய் சுமந்து செல்லும் போது, கல்யாணம் களைகட்டி விடும்ல….

கிருஷ்ணர் : ஓஹோ…., ரொம்ப interesting ஆக இருக்கு மேகலா…. நீ சொன்ன மாதிரி, ‘மாப்பிள்ளை அழைப்பு’ என்ற இந்த கல்யாண ஊர்வலம், பாரதம் முழுவதுக்கும், அந்தந்த area மக்களின் கலாச்சாரப்படி நடக்கத்தான் செய்கின்றன. உனக்குத் தெரியுமா….., ‘ஜானவாசம்’, ‘மாப்பிள்ளை அழைப்பு’, ‘கல்யாண ஊர்வலம்’ என்று அழைக்கப்படும் இந்த ‘பட்டினப் பிரவேசம்’ ஏன் நடத்தப்பட்டது என்று…..

மேகலா : ‘இதுதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. எல்லோரும் பாத்துக்கோங்க…. எங்க பொண்ணுக்கு, இந்த மாப்பிள்ளையைக் கட்டி வச்சுட்டோம்… வேற யாரும் ‘பிட்’ட போட்ராதீங்க’ என்று சொல்வதற்காகன்னு நினைக்கிறேன் கிருஷ்ணா…. சில கல்யாணங்களில் மாப்பிள்ளைக்கு கன்னத்தில் திருஷ்டி பொட்டெல்லாம் வச்சிருப்பாங்க…. ‘விசிறி மடிப்பு தலைப்பாகை’, சில கல்யாணங்களில்…. என்று வேடிக்கையாக அலங்காரம் பண்ணி, மாப்பிள்ளையை அடுத்து யாரும் book பண்ணாதபடி பாத்துக்குவாங்க…..

கிருஷ்ணர் : Oh! அப்படீன்னா…., அந்தப் பையன், பல பொண்ணுங்களை, பொண்ணு பார்க்க சென்றிருப்பாரோ….

மேகலா : இருக்கலாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தின் உள்ளர்த்தம் வேடிக்கையாக இருக்கு மேகலா….

மேகலா : இதுவே பெரிய கலாட்டா… இன்னும், இன்று அதையே இன்னும் பெரிய கலாட்டாவாக செஞ்சு, அலப்பறையை கூட்டுறாங்க கிருஷ்ணா….. மாப்பிள்ளை ‘ஜானவாசம்’ வரும் போது, மணப்பெண் திருமண மண்டபத்தின் வாயிலில் நின்று, மாப்பிள்ளையை பார்ப்பாள். Friends எல்லாம், மணப்பெண், மாப்பிள்ளையை மறைந்து நின்று பார்ப்பதை பையனிடம் சொல்லுவார்கள். பையன் ஆர்வ மிகுதியில், மணப்பெண்ணை காரிலிருந்து எட்டிப் பார்ப்பான். உடனே, மணப்பெண்ணின் friends, பொண்ணை மறைத்து போக்குக் காட்டுவார்கள். இந்த கலாட்டாவில், திருமண மண்டபமே கலகலத்து விடும். இது ஒரு ஐயர் வீட்டு கல்யாணத்தில் நான் ரசிச்ச கலாட்டா…. எங்க பக்கத்துல, கல்யாண மண்டபத்திற்கு ஊர்வலமாக வரும் மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் கிருஷ்ணா…. ஆரத்தி என்பது, ஒண்ணு ரெண்டு இல்ல கிருஷ்ணா…. வசதிக்குத் தகுந்தபடி 20க்கு மேல எடுப்பாங்க. ஆரத்தி எடுப்பவர்கள், அவரவர் கற்பனைப்படி, design, design-ஆக தயார் பண்ணி வந்து ஆரத்தி எடுப்பார்கள். பூரண கும்பம், கண் திருஷ்டி ஆரத்தி என்பது regular; மற்றதெல்லாம் அவரவர் கற்பனைக்குத் தகுந்த மாதிரி இருக்கும். நான் ஒரு கல்யாணத்தில், கற்பக விருட்சமும், தங்கக் காசுகளும் நிறைந்த ஆரத்தி எடுத்தேன். முளைப்பாரியெல்லாம் ஆரத்தியாக எடுக்கிறார்கள். இந்த ஆரத்தித் தட்டை design பண்ணி கொடுப்பதற்கே, சில கற்பனை வளம் பெற்றவர்கள் தயார் பண்ணிக் கொடுக்கிறார்கள்…..

கிருஷ்ணர் : Oh! இப்படியொரு business-ஆ…., interesting….

மேகலா : இந்த ஆரத்தி எடுப்பதற்கு சில குசும்பு பிடித்த மணப்பெண், தானும் வந்து மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க வருவாள்….

கிருஷ்ணர் : பெண், பையனைப் பார்த்து வெட்கப்பட்டு வளைந்து நெளிவாளா….

மேகலா : நீ வேற கிருஷ்ணா…, இதெல்லாம் சின்னப்பிள்ளைங்க சமாச்சாரம்…. வெட்கமாவது, ஒண்ணாவது….. ஆரத்தி எடுத்து, பையனுக்கு குங்குமம் வைக்க வருவாள்.

கிருஷ்ணர் : பையனின் friends, பையனை இழுத்து போக்கு காட்டுவார்கள்…, நல்ல தமாஷ் தான்….

மேகலா : இதை விட ஒரு தமாஷ் இருக்கு கிருஷ்ணா…. ஆரத்தி எடுப்பவர்களுக்கு, பையன் gift கொடுப்பார். முக்கியமான பூரண கும்ப ஆரத்தி, பொண்ணோட சகோதரி அல்லது பொண்ணோட அத்தை தான் எடுப்பாங்க. அப்போ, gift மட்டும் பத்தாது; பெருசா demand பண்ணுவார்கள். கேட்டதைக் கொடுக்காவிட்டால், பையனை உள்ளே விட மாட்டார்கள். Friends, எல்லோரையும் விலக்கி, பையனைக் கடத்தியே கொண்டு சென்று விடுவார்கள். அந்த நேர கலாட்டாவில், கல்யாண வீடே அமளிதுமளியாகி விடும்.

கிருஷ்ணர் : Oh! என்ன கல்யாணமடா இது….! கலாட்டா பண்ணுவதற்கென்றே கல்யாணம் நடத்துவாங்க போல…. சரி…, எனக்கொரு கேள்வி…. உங்க பக்கத்துக் கல்யாணங்களில் ஊர்வலம் வரும் போது, ‘சீர் தட்டு’ கொண்டு வருவாங்களா…. அதன் அர்த்தம் என்ன….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1