கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 4
மேகலா : இல்லையா பின்ன….கிருஷ்ணா…, அவரவர் ஆசைப்படிதான் கலாட்டாக்களும் அரங்கேறுகின்றன என்றாலும்…., பணக்கார சந்தோஷம் வேற, பட்ஜெட் சந்தோஷம் வேற….
கிருஷ்ணர் : என்ன…., பட்ஜெட் சந்தோஷமா….?
மேகலா : கிருஷ்ணா…. சந்தோஷமாய் இருக்கணுமின்னு தீர்மானம் செய்த பின், பாட்டு, கச்சேரி, dance என்று எல்லா சந்தோஷங்களையும் கல்யாண மண்டபத்திற்கே கொண்டு வந்திருவாங்க கிருஷ்ணா. அதிலும், பணக்காரங்க, பாட்டு, கச்சேரி என்றாலே, Vijay channel ‘Super Singer’-ஐ வரவழைக்கலாமா…., அல்லது famous troupe ‘லக்ஷ்மண் ஸ்ருதியை’ வரவழைக்கலாமா என்று பணக்காரத்தனமா யோசிப்பார்கள். ஆனா, கலாட்டாவும், சந்தோஷமும், எங்க ஜாலிக்காகவே படைக்கப்பட்டது என்பது போல, நம்ம பட்ஜெட் கல்யாணம், உற்றார், உறவினர் புடை சூழ, வீடே கலகலத்துப் போகுமளவுக்கு, டான்ஸாகட்டும், அந்தாக்ஷரி என்னும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியாகட்டும், fun games என்று குடும்பமாய் உட்கார்ந்து, ‘ரம்மி சீட்டு’ விளையாடுவதாகட்டும், பைசா செலவில்லாமல், கொண்டாடி மகிழ்ந்து போவார்கள்….. அந்தக் காலங்களில், டான்ஸ் கச்சேரிலாம் கிடையாது. கல்யாணம்னா, இரவு சீட்டுக்கச்சேரி உண்டு. பழைய ‘பேசும் தெய்வம்’ சினிமால கூட சிவாஜி கணேசன், கல்யாணத்திற்கு வந்தவர், friends-களைப் பார்த்த சந்தோஷத்தில் சீட்டு விளையாட உட்காருவார். அவரோட அக்கா வீட்டுக்காரர், ‘நீங்கெல்லாம் ஒண்ணு சேர்ந்தா, சீட்டு விளையாடுவீங்கன்னுதான், எல்லா ஏற்பாடுகளும் பண்ணியிருக்கேன்’ என்பார். சீட்டு விளையாடும் கவனுத்துல பிள்ளைய தொலச்சிடுவார்….
கிருஷ்ணர் : ஆக, என்னதான் கல்யாணம், காட்சி என்று செலவுகள் நம்மை பயமுறுத்தினாலும், மனுஷங்க, கலாட்டா என்றால், அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடத்தான் செய்வார்கள்.
மேகலா : என்ன இருந்தாலும், இது கல்யாணச் செலவு தானே கிருஷ்ணா…. அதிலும், தன் மகள் அல்லது மகனுக்கான சந்தோஷ எதிர்காலம் சம்பந்தப்பட்டது. பட்ஜெட் போடும் போது, கலாட்டாக்களையும் சேர்த்தேதான் திட்டம் போடுவார்கள். அதிலும், உறவுக்காரங்க அத்தனை பேரையும் ஒண்ணா பார்க்கிறாங்கல்ல கிருஷ்ணா….., டான்ஸ்…, ஆட்டம்……., பாட்டம்னு தூள் கிளப்பிருவாங்க….
கிருஷ்ணர் : உறவுக்காரங்கெல்லாம் சேர்ந்து கொண்டாடுவாங்கன்னு சொல்றயே…., பொண்ணும், மாப்பிள்ளையும் கலாட்டாவில் கலந்துக்க மாட்டாங்களா…
மேகலா : அவங்க இல்லாமலா கிருஷ்ணா…. இருந்தாலும், இன்னும் ஒரு சேட்டை இருக்கு கிருஷ்ணா…. உற்றாரெல்லாம் மேடையை ஆக்ரமித்துக்குக் கொண்டிருக்கும் போது, பொண்ணும், பையனும் தனியா ஒரு photo shoot நடத்திக் கொண்டிருப்பார்கள் கிருஷ்ணா. அதிலும், இவர்கள் அலப்பறையை யாரும் கண்டுக்கவே மாட்டார்கள். அவங்க ஒரு தனி உலகத்தில இருப்பாங்க… அவங்களைப் பொறுத்த மாட்டில் இது ஒரு thrilling and sweet கலாட்டாக்கள்….
கிருஷ்ணர் : ஏன் மேகலா…. உங்க பக்கத்துக் கல்யாணத்துல ‘காசி யாத்திரை’லாம் கிடையாதா மேகலா…
மேகலா : எங்க பக்கத்துக் கல்யாணங்கள்ள, காசி யாத்திரை கிடையாது கிருஷ்ணா…. அதற்குப் பதிலாகத்தான், ‘மாப்பிள்ளை வரவேற்பு’ என்று, திருஷ்டி சுத்திப் போடுதல், திருஷ்டி சுத்தியவங்களுக்கு gift கொடுத்து, பணம் demand பண்ணுதல், friends கொடுக்காமல் ரகளை பண்ணுதல் என்ற கலாட்டா நடைபெறும் என்று சொன்னேனல்லவா… இந்த கலாட்டா தான், கல்யாணங்களில் நினைவில் நிற்கும் ‘கலாட்டா’ கிருஷ்ணா. நீ சொல்லும் ‘காசி யாத்திரை’யை, நான் எங்களோட friend கீதாக்கா வீட்டு கல்யாணங்கள்ள பாத்திருக்கேன் கிருஷ்ணா…. இந்த சடங்குகளையெல்லாம் உருவாக்கியவர் யாரோ…, அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுற…..
மேகலா : முறையாக நடக்கும் திருமணத்தில் ஏகப்பட்ட வைதிகச் சடங்குகள் நடக்கும் இல்லையா…. அப்படிப்பட்ட சடங்குகளுக்கு நடுவில், ‘காசி யாத்திரை’ என்னும் சுவாரஸ்யமான கலாட்டாவையும் சடங்காக வைத்து விட்டால்…., காலம் காலமாக மக்களும் அதை சுவாரஸ்யமாகக் கொண்டாடுவார்கள் என்று நினைத்திருப்பார் போல கிருஷ்ணா. மாப்பிள்ளைக்கு, ‘இந்த உலக வாழ்க்கை வேண்டாம், துறவு மேற்கொள்ளலாம்’ என்று தோன்றுகிறதாம். உடனே, ரொம்ப எளிமையான dress போட்டுக் கொண்டு, விசிறி, குடையை எடுத்துக் கொண்டு, மரத்தால் ஆன பாதுகை, அதாவது செருப்பு அணிந்து காசிக்கு புறப்பட்டே விடுகிறான். அப்போது, அங்கே சூழ்ந்து நிற்கும் சொந்தக்காரங்க எல்லாரும் பரபரப்பாகிறார்கள். திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சியைக் காட்டிலும், கல்யாண மண்டபத்தில் மொத்த உறவினர்களும், பொண்ணைப் பெற்றவரிடம், ‘உங்க மாப்பிள்ளை சந்நியாசம் வாங்கி காசிக்குப் புறப்பட்டுட்டான்; அவனை அழைச்சு வாங்க’ என்று உற்சாகமாய் குரல் கொடுக்கிறார்கள். அவரும் ஓடி வந்து, பையனிடம், ‘மாப்பிள்ளை, நான் என் பொண்ணை உங்களுக்கு கன்னிகாதானம் பண்ணுகிறேன்; சீர் செனத்தி செய்கிறேன்; இருவரும், கணவன் மனைவியாக சிறப்பாக வாழ வேண்டும்’ என்று கூறி சமாதானப்படுத்தி அழைத்து வர வேண்டும். இந்த நிகழ்ச்சி நடப்பதற்குள், உறவினர்களிடையே நடக்கும் கலாட்டாக்களினால், கல்யாண வீடே கலகலத்துப் போய் விடும். இந்தக் கல்யாணங்களில் நடக்கும் இன்னொரு நிகழ்ச்சியும் ஏகப்பட்ட கலாட்டாவோடு நடக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : அப்படியா…..! எனக்குத் தெரியாமல் என்ன நிகழ்ச்சி…..?
மேகலா : பொண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றும் நிகழ்ச்சி கிருஷ்ணா…. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயும், பொண்ணு மாலை மாற்ற வரும் போது, நண்பர்களெல்லோரும் பையனை பின்பக்கம் இழுத்து கலாட்டா பண்ணுவார்கள். ஆனால், ஐயர் வீட்டுக் கல்யாணத்தில் தான், இந்த நிகழ்ச்சி, கலாட்டாக்களிலேயே உச்சம் தொடும் கலகலப்பாக இருக்கும் கிருஷ்ணா…. பொண்ணோட மாமா, பொண்ணைத் தூக்கிக் கொள்வார்….., பையனோட மாமா, பையனைத் தூக்கிக் கொள்வார். இருவரும் அங்கும் இங்கும் அசைந்து மாலை போடுவதற்கு ஏதுவாகவும், விளையாட்டுக் காட்டியும் நகர்ந்து, உறவினர்களின் சந்தோஷம் கரை புரண்டு ஓடும்… இந்த விளையாட்டு, North Indian கல்யாணங்களிலும் உண்டு போல கிருஷ்ணா…. சமீபத்தில், Cadbury’s Chocolate-ன் விளம்பரத்தில், மணமகனை உறவினர் ஒருவர் தூக்க…., மணமகளுக்கு மாலை போட முடியாமல் போகும்…. அவள் உடனே chocolate-ஐச் சாப்பிடுவாள். உடனே அவள் உடம்பு லேசாகி, காற்றில் மிதக்கும். மாப்பிள்ளையை விட உயரத்திற்குச் செல்ல, மாலையைப் போட்டு விடுவாள்…..
கிருஷ்ணர் : உற்றார், உறவினர்கள் கூடி நின்றாலே போதும்…. அதிலும், ‘கல்யாண வீடு’ என்றால், கேட்கவும் வேணுமா; சந்தோஷம் மட்டுமல்ல…., கேலி, கிண்டல், கும்மாளம் என்று மனிதர்களின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேணும்…..
மேகலா : கிருஷ்ணா…., உனக்கு ஒரு பழமொழி தெரியுமா…. ‘சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று போகுமா’ – என்ற இந்த பழமொழியைக் கேட்டிருக்கிறாயா…..
கிருஷ்ணர் : என்ன…. இதை வைத்து ஏதாவது கலாட்டாவை வடிவமைச்சிருக்காங்களா…
(தொடரும்)
Comments
Post a Comment