கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 7

மேகலா : கல்யாணத்துக்கென்று சில சடங்குகள் இருக்குல; அதை ஐயர் வைத்துத்தான் செய்வார்கள். இது normal கல்யாணம்…. அதில், அக்னி வளர்ப்பது…, அக்னியை வலம் வருவது….., கன்னிகாதானம் பண்ணுவது…., அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது….., மந்திரம் ஓதுவது…., அட்சதை போடுவது என்று எல்லாச் சடங்குகளும் முறையாக நடக்கும். இதனுடன், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் போது நடக்கும் கலாட்டாக்கள் என்று ஆங்காங்கே நகைச்சுவை கலாட்டாக்கள் உண்டு….. சிலர், ‘கல்யாணத்தில், எந்தச் சடங்குகளும் எங்களுக்குத் தேவையில்லை; கல்யாணத்தை நடத்திக் கொடுப்பதற்கு ஒரு பெரியவர்…., அவர் ‘கருப்புச் சட்டைக்காரராக’ இருந்தால் கூடப் பரவாயில்லை; கட்டுவதற்கு தாலி மட்டும் இருந்தால் போதும்’ என்று நினைத்து விடுவார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இது என்ன புது கலாட்டாவா இருக்கு மேகலா….

மேகலா : வைதிகச் சடங்குகளை, ‘மூட நம்பிக்கை’ என்று நம்பும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கு கிருஷ்ணா…. எல்லாச் சடங்குகளும், சடங்கு அல்லாத வழிமுறைகளும்…., ஏன், மூட நம்பிக்கை கூட, மனிதர்களின் நம்பிக்கையினாலும், விருப்பத்தினால் மட்டுமே நடைபெறுகின்றன. இதில், வைதிகச் சடங்குகளையே மூட நம்பிக்கை என்று கூறுபவர்கள், தங்களுக்குத் தோன்றும் வழிமுறைகளை, ‘இது தான் சிறந்த கல்யாணம்’ என்று எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை….. இவர்கள் கூறும் காரணங்கள், கல்யாண மேடையில், தீயை வளர்த்து, புகையை மூட்டி, மந்திரம் சொல்லி கல்யாணம் நடத்துவதற்கு ரொம்ப நேரம் ஆகுமல்லவா….., தாலியை எடுத்தோமா, பையனிடம் கொடுத்தோமா, தாலியைக் கட்டுனோமா…., என்று சீக்கிரமாக கல்யாணத்தை முடிச்சிட்டோம்ல…., என்று பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், இவர்கள் கல்யாணம் நடத்தி வைப்பதற்காக கூட்டி வருபவர்…., பெரும்பாலும் ஊர்ப்பெரியவர், அல்லது அரசியல்வாதியாகத்தான் இருப்பார்கள்….

கிருஷ்ணர் : ‘அரசியல்வாதி’யா…, நீ சொல்வதைப் பார்க்கும் போது, இவர்களுக்கு அடிப்படையில் ஒரு பழக்கம் இருக்கு…… ‘அறிந்தோ, அறியாமலோ, தாலியை, மனம் நிறைந்த பெரியவர் எடுத்துக் கொடுத்துத்தான், மாப்பிள்ளை கையில் கொடுக்க வேண்டும்’ என்று நம்புகிறார்கள். இதில் எங்கிருந்து அரசியல்வாதி வந்தாங்க…..

மேகலா : கிருஷ்ணா….., ‘பாத்தியா, நாங்க எப்படி கல்யாணம் நடத்துகிறோம்’ என்று காட்டுவதற்காகவே இவர்கள் அலப்பறையைக் கூட்டுவார்கள். கல்யாணம் நடத்தும் பெரியவர்கள்…., தாலியைக் கையிலே வாங்கிக் கொண்டு, மணமக்களை வாழ்த்துவதாக, மைக்கைப் பிடித்து, பிரசங்கமே நடத்துவார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏ…, யப்பா….,, இந்த கலாட்டா பெரும் கலாட்டாவா இருக்கும் போலயே…. நீ சொன்னதுதான் உண்மை மேகலா….. அவரவர் விருப்பப்படிதான் கல்யாணம் நடத்துகிறார்கள். அதற்கான காரணத்தை, இதுதான் நியாயம் என்றும் சொல்லுகிறார்கள். அடிப்படையில், எல்லாமே சுவாரஸ்யமானதுதான். மூட நம்பிக்கை, அறிவார்ந்த நம்பிக்கை எல்லாமே சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது….

மேகலா : ஆனால், பெரும்பாலானவர்கள், வைதிகச் சடங்குகளோடு கல்யாணம் நடத்துவதைத்தான் விரும்புகிறார்கள் கிருஷ்ணா. அவரவர்க்கு, ஆண் பிள்ளை ஒன்று, பெண் பிள்ளை ஒன்று என்று இருப்பதால், தங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணங்களை, எல்லாச் சடங்குகளையும் முறைப்படி நடத்தி, கலாட்டாக்களையும் கொண்டாடி அனுபவிக்கவே ஆசைப்படுகின்றனர். அதிலும், ‘அருந்ததி’ என்றால் யார் என்றே தெரியாது. பொண்ணும், மாப்பிள்ளையும் கூட, ஐயர் காட்டிய திசையில் அண்ணாந்து பார்த்து, வாழ்க்கையில் இதுவரை பார்த்தே அறியாத, இனிமேலும் பார்க்கவே போகாத, ‘அம்மி மிதித்து, மெட்டி அணிந்து…., அடேயப்பா…., அந்த ஒரு நாள் ஐயர் சொன்னதுக்கெல்லாம்…., தலையாட்டும் கலாட்டாதான், இருப்பதிலேயே தலைசிறந்த கலாட்டா….

கிருஷ்ணர் : Oh! ஆமாம்….. உங்க அப்பா, கல்யாண மேடையில் ஒரு மாநாடையே கொண்டு வந்தார் என்று சொன்னாயே…., அப்போ…., அவர் நடத்தியது, சுயமரியாதை கல்யாணமா….. ஓஹ்ஹோஹ்ஹோ…. நீ வைதிகச் சடங்குகளை வரிந்து கட்டிப் புகழும் போதே யோசிச்சேன்…., அம்மணி என்ன ஒரேயடியாக புகழ்கிறாளே என்று…. உன்னோட கல்யாணம் எந்த அமைச்சர் முன்னிலையில் நடந்தது……

மேகலா : ஊர்ப்பெரியவர் முன்னிலையில் கிருஷ்ணா…. ஆனால், நான் என் பிள்ளைகளுக்கு…, வைதிகச் சடங்குகளை முறைப்படி நடத்திக் கொடுக்கும் ஐயரை வைத்துத்தான் கல்யாணம் நடத்தினேன் கிருஷ்ணா…. நீ என்னவோ என்னை கிண்டல் பண்ணுகிறாயே….

கிருஷ்ணர் : சரி, அது இருக்கட்டும்…. இந்த மாதிரி சுயமரியாதை கல்யாணங்களில், நாதஸ்வரம், மேளம் முதலான மங்கள இசையாவது கேட்குமா….?

மேகலா : வாத்தியங்கள் ஓசை இல்லாமல் கல்யாணம் கிடையாது கிருஷ்ணா…. அதிலும், தாலியை வைத்திருக்கும் தட்டை எடுத்து, வந்துள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க கொண்டு செல்லும் நேரத்திலிருந்து மங்கள இசையை, உச்சஸ்தாயியில் வாசிச்சிக்கிட்டே இருப்பாங்க. அதிலும், ஒருவர் மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் தன்மைக்கேற்ப, வாத்தியக்காரங்களுக்கு கைகளால் signal காட்டிக்கிட்டே இருப்பார்…..

கிருஷ்ணர் : எதுக்கு….? அவங்க வாசிச்சிக்கிட்டே தான இருக்காங்க…

மேகலா : Signal காட்டினால், மங்கள ஓசை, உச்சஸ்தாயியில் வாசிக்கப்பட வேண்டும்…. ‘இப்போ, தாலி கட்டுறங்க’ – என்று சொல்வதாக அர்த்தம்… ‘இப்போ, மாலை மாத்துறாங்க’ என்று ஒவ்வொரு signal-க்கும் நாதஸ்வர party, மங்கள இசையை உச்சஸ்தாயியில் உற்சாகப்படுத்தி, மூச்சு முட்டிப் போவார்கள்….

கிருஷ்ணர் : ஏன், மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வாசிக்க மாட்டாங்களா…..?

மேகலா : நீ வேற கிருஷ்ணா…. நாதஸ்வர பார்ட்டி, திருமண மேடையில் இருக்க மாட்டாங்கல்ல…., இன்னொரு மேடையில் தனியாக வாசிச்சிக்கிட்டு இருப்பாங்க…. அவங்களுக்கு மேடையில் நடப்பது தெரியாது…. அவங்க பாட்டுக்கு, ‘ஆயிரங்கண் போதாது, வண்ணக்கிளியே….’ என்ற சினிமாப் பாட்டை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருப்பார்கள். அதற்காகத்தான் இந்த signal…. இன்னும் ஒண்ணு…., மணமக்களைச் சுற்றி கேமராக்கள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். மிச்சமுள்ள இடத்தில் உறவினர்கள் நெருக்கிக் கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு வந்திருப்போர், திரையைப் பார்த்துத்தான், தாலி கட்டுவதைப் பார்ப்பார்கள்….

கிருஷ்ணர் : இது என்னம்மா…., புதுக் கதையா இருக்கு…. துஷ்யந்தனுக்கும், சகுந்தலைக்கும் நடந்த கந்தர்வ விவாகத்தில்…., ‘வானம், பூமி, காற்று, நதி…. என்று ஐம்பூதங்களின் சாட்சியாக உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று துஷ்யந்தன் கூறுவதாக மகாபாரதம் கூறுகிறது. இங்கு கேமராக்கள் சாட்சியாகத்தான் கல்யாணம் நடக்கிறது போல….. எனக்கென்னவோ, இதுதான் பெரிய்ய கலாட்டாவாகத் தெரிகிறது…..

(தொடரும்)




Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2