வழிப்போக்கர்கள் - பகுதி 10

மேகலா : பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஒரு மகா முனிவர் கிருஷ்ணா… பல தவங்களைப் புரிந்தவர்…

கிருஷ்ணர் : ஓ! உத்தங்கரைச் சொல்கிறாயா….. ஆமாம், உத்தங்கர்…., சிறந்த மஹரிஷி… நான் துவாரகை செல்லும் போது, பாலைவனப் பிரதேசத்தில் சுற்றித் திரிந்த உத்தங்கரைச் சந்தித்தேன். மீதிக் கதையை நீ சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…., கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். அதன் பின்னர், கிருஷ்ணர், துவாரகை சென்றார். செல்லும் வழியில், பாலைவனப் பிரதேசத்தைக் கடக்கும் பொழுது, உத்தங்கர் என்ற மகரிஷியை சந்தித்தார். உத்தங்கர், கிருஷ்ணரைப் பார்த்து, நலம் விசாரித்தார். அஸ்தினாபுரத்திலிருந்து வரும் கிருஷ்ணரிடம், ‘உங்கள் ஆலோசனையால், கௌரவர்களும், பாண்டவர்களும், தங்கள் பகையை மறந்து நட்போடு இருக்கிறார்களா… இரு குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் அரசாட்சி நடத்துகிறார்களா’ என்று கேட்க…, கிருஷ்ணர் நடந்ததைக் கூறினார். குருக்ஷேத்திரத்தில் இரு தரப்புக்கும் பெரிய யுத்தம் நடந்தது…. அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்…. பீஷ்மர், துரோணர், துரியோதனன் உட்பட கௌரவர்கள் அனைத்து தரப்பினரும் உயிரிழந்தார்கள் என்று…. சொல்ல, உத்தங்கருக்கு கடும் கோபம் ஏற்பட்டது…. ’ஏன் கிருஷ்ணா…. நீ அருகில் இருந்துமா…., இந்தப் போர் நடந்தது…. அப்போ, இந்தப் போருக்கு சூத்ரதாரியாய் நீ தான் இருந்திருக்கிறாய்… நீ நினைத்திருந்தால், இத்தனை பேரின் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்…. ஏன், இந்தப் போரையே தடுத்திருக்கலாம். போரைத் தடுத்து நிறுத்தாமல், இத்தனை பேரின் உயிரிழப்புக்கும் காரணமான உன்னை நான் சபிக்கப் போகிறேன்’ என்று ஆவேசப்பட…, கிருஷ்ணர் ரொம்ப கூலாக சொன்னார். ’என்னை யாராலும் சபிக்க முடியாது…. என்னை நீ சபிப்பதால்…., நீ இத்தனை நாள் செய்த தவம் தான் பலனில்லாமல் போகப் போகிறது. நீ தவம் செய்தது, உனக்கு பக்குவத்தைத் தரத்தானே தவிர, இப்படி உணர்ச்சிவசப் படுவதற்கல்ல…. நான் மனிதனாகப் பிறப்பெடுத்திருப்பதால், மனிதனாகத்தானே நடந்து கொள்ள முடியும், என்பது கூட அறியாதவனா நீ…. நான் தேவர்களிடையே பிறந்திருந்தால், தேவர்களைப் போல நடந்து கொள்வேன். இப்போ மனிதனாகப் பிறந்திருப்பதால், துரியோதனனிடம் தூது சென்று, போரை நிறுத்துமாறு வற்புறுத்தினேன்… விஸ்வரூபம் எடுத்துக் காட்டி மிரட்டியும் பார்த்தேன். பீஷ்மர், விதுரர் உட்பட நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், துரியோதனன் கேட்காமல் இத்தனை இழப்புக்களுக்கும் அவனே காரணமானான் என்று சொல்ல…., உத்தங்கர், நாம் பேசிக் கொண்டிருப்பது, ‘கிருஷ்ணர்’ என்னும் மகா புருஷரிடம்…, ‘மகாத்மா’ பரம் பொருளிடம் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தார். அதன் பின், அரசவையில் காட்டிய விஸ்வரூபத்தைக் காட்டுமாறு, கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டார். கிருஷ்ணருக்கு ரொம்ப பாவமாகப் போயிருச்சி… இருப்பினும், உத்தங்கருடைய மனநிலையை அவருக்கு உணர்த்த விரும்பினார். அஸ்தினாபுரத்தில் தூது வந்த சமயம் காட்டிய விஸ்வரூபத்தைக் காட்டினார். அதன் பின், ‘உத்தங்கா, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள்’ என்று கேட்டார். ‘எனக்கு வரம் எதுவும் வேண்டாம் கிருஷ்ணா; உன்னுடைய அருள் இருந்தால் போதும்’ என்று பம்மினார். தவம் இருந்து மேன்மையை அடைய விரும்புபவர்கள் எப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்…… உத்தங்கர் இன்னும் ‘அந்த நிலை’ என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்த கிருஷ்ணர், உத்தங்கரை, வரம் கேட்குமாறு கனிவோடு வற்புறுத்தினார். அப்போ, உத்தங்கர், ‘நான் பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது, எப்பொழுதெல்லாம் எனக்கு தாகம் எடுக்கிறதோ, கிருஷ்ணா, உன்னை நினைப்பேன். நீ, எனக்கு தண்ணீர் கிடைக்குமாறு அருள் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். கிருஷ்ணரும், ’அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, துவாரகை திரும்பினார். சில நாட்கள் கழிந்த பின், உத்தங்கருக்கு தாகம் மேலிட, கிருஷ்ணரை நினைத்தார். அப்போ, அங்கே, தன்னுடைய மேனியில் ஆடையில்லாத, அழுக்கேறிய உடம்புடனும், சடை முடியுடனும் ஒரு ‘சண்டாளன்’ வந்தான். அவன், நாற்றமடித்த மாமிசத்தை தோளில் சுமந்து வந்தான். ஒரு தோல் பையில் தண்ணீர் வைத்திருந்தான். அது ஒழுகிக் கொண்டிருந்தது. அவன், ‘என்ன முனிவரே, தாகம் எடுக்கிறதா….., தண்ணீர் வேண்டுமா’ என்று கேட்க, உத்தங்கருக்கு பெருத்த கோபம் வந்தது. கிருஷ்ணர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக நினைத்தார். அப்படி நினைத்தவுடன், சங்கு, சக்ராயுதத்துடன் கிருஷ்ணர் அவர் எதிரே தோன்றினார். உத்தங்கர், ‘கிருஷ்ணா…., நீ இப்படிச் செய்யலாமா…. நான் பல தவங்களைச் செய்த புனிதமானவன். நான் தண்ணீர் கேட்டதும், சண்டாளனை அனுப்பலாமா’ என்று குமுறினார். கிருஷ்ணர், சிரித்தவாறே, ‘நெசம்மா…, நான் இந்திரனிடம், உனக்கு தாகம் எடுத்தால், அமிர்தத்தைத்தான் தரச் சொல்லிக் கேட்டேன்… அவன் தான் சொன்னான், ‘உத்தங்கர் தூய்மையான மனமுடையவர் என்றால்…., சம நோக்கு பார்வை உடையவர் என்றால்…., நான் எந்த ரூபத்தில் சென்றாலும், என்னிடம் இருந்து தண்ணீர் என்ன…., அமிர்தத்தையே பெற்றுக் கொள்ளட்டும்…. மனிதர்களுக்குக் கொடுக்கக் கூடாத அமிர்தத்தைப் பெற உத்தங்கருக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்க்கலாம்…’ என்று சொல்லி விட்டான். நான் ரொம்ப நம்பிக்கையோடு இருந்தேன், நீ அமிர்தத்தைப் பெற்று விடுவாய் என்று…. உத்தங்கா…, தவம் புரிவது…, பிற உயிர்களிடம் அன்பு காட்டுவதற்காக; சம நோக்கு பார்வை அடைவதற்காக…; பெருமை கொள்வதற்காக அல்ல…. நீ இன்னும் பக்குவம் அடைய வேண்டும்’ என்று சொல்லி, ‘இருப்பினும், இந்தப் பாலைவனத்தில் தண்ணீர் தேவைப் படும் போதெல்லாம்…., வானம் கறுத்து, மழை மேகம் உண்டாகட்டும்… அந்த மழை மேகம், ‘உத்தங்க மேகம்’ என்றே அழைக்கப்படட்டும்’ என்று வரம் தந்தார்…. இது தான் வழிப்போக்கனாகிய உத்தங்கர் வரம் பெற்ற கதை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நல்லாசிகள் மேகலா… சூப்பர்… இன்று சரஸ்வதி பூஜை…. அன்னை உன்னை வாழ்த்தட்டும்….

மேகலா : நன்றி கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2