வழிப்போக்கர்கள் - பகுதி 9

மேகலா : கிருஷ்ணா…., நீ கேள்வி கேட்ட பின் தான், பிரமிக்கத்தக்க சம்பவம்…, வியப்பூட்டும் சம்பவம் என்பதெல்லாம் நினைவுக்கு வந்து, என்னை சிலிர்க்க வைக்கிறது கிருஷ்ணா…. திருமங்கையாழ்வார் கதையை நினைத்துப் பார்க்கவும், எழுதி மகிழவும் நீ எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறாய் கிருஷ்ணா. உன் மனம் கவர்ந்த திருமங்கையாழ்வாரை, கலியனை, அந்தக் கொள்ளைக்காரனை, வழிப்போக்கர்களைக் கதற வைத்த கலியனையே மெய் விதிர்க்கச் செய்த உன் அற்புதமான திருவிளையாடலை….

கிருஷ்ணர் : Build-up-லாம் போதும்…. கதையச் சொல்லு…

மேகலா : சோழப் பேரரசின் தளபதி கலியன் சிறந்த வீரர். கலியனின் வீரத்தை மெச்சிய சோழ மன்னன், அவரை, திருமங்கை என்னும் சோழ நாட்டின் குறுநிலப் பகுதிக்கு மன்னனாக்கி விடுகிறார். கலியன், குமுதவல்லி என்ற பெண்ணை மணம் செய்ய விரும்பி, குமுதவல்லியின் தந்தையிடம் பெண் கேட்டுச் செல்கிறார். குமுதவல்லியோ, ரங்கநாதரை வழிபடும் அடியவர் ஒருவரையே திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகிறார். அந்தப் பெண்ணின் மீது எழுந்த காதலால், கலியன், பெருமாள் மீது பெரும் பக்தி கொண்டு, ஆழ்வாராகவே மாறி விடுகிறார். காதல் மனைவி கேட்டுக் கொண்டதற்கிணங்க, தினந்தோறும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து வருகிறார். நாளடைவில், கஜானா காலியாகிறது. இருந்தாலும், திருமங்கை மன்னன், அன்னதானத்தை மட்டும் நிறுத்தவேயில்லை. பணத்தட்டுப்பாடு அவரைப் பாடாய்ப் படுத்த, அன்னதானத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, வழிப்போக்கர்களிடம் கொள்ளையடித்தாவது காரியம் சாதிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, கொள்ளையடித்தும் வருகிறார். ஸ்ரீரங்கநாதர் பார்த்தார்…. தன்னுடைய பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்குவது, சிறந்த காரியம் தான். அதற்காக, ஒருவருடைய துன்பத்தில், இன்னொருவருக்கு பசிக்கு உணவளிப்பது பாவ காரியம் அல்லவா… இதை எப்படியாவது தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். பெருமாளும், பெருமாட்டியும், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் போல நகையணிந்து கொண்டு, உற்றார் உறவினர்களோடு, காட்டு வழியில் நடந்து வந்தார்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கல்யாண கோஷ்டி ஒன்று, காட்டு வழியில் நடந்து போவதைக் கேள்விப்பட்ட திருமங்கை மன்னன், தன் கூட்டாளிகளுடன் அங்கு வந்து சேர்ந்தான். அப்போது, புதுமணத் தம்பதிகள், காண்போரைக் கிறங்கடிக்கும் அழகில், தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த கந்தர்வத் தம்பதிகளோ என்று வியந்து பார்க்க வைக்கும் பேரழகில் நடந்து வந்தார்கள். அவர்கள் உடம்பில் எல்லாப் பாகங்களிலும் நகைகளை அணிந்து கொண்டு, ஒரு நகைக் கடையே நடந்து வருகிறதோ என்று வியக்குமளவுக்கு நடந்து வந்தனர். கலியனின் மனக்கணக்கு சொன்னது…, ’ஒரு மாதத்திற்கு அன்னதானத்திற்கு பஞ்சமில்லை’ என்று. அந்தப் புது மணத் தம்பதி முன், உறுமிய குரலும், உருவிய வாளுடனும், கலியன் தோன்றி, ஒரு துண்டை விரித்துப் போட்டு, ‘ம்…. சீக்கிரம்…. உங்கள் நகைகளைக் கழற்றி இதில் போடுங்கள். போட மறுத்தால், இந்தக் கத்திக்கு இரையாவீர்கள்’ என்றதும், ‘பிராட்டி’ மிகவும் பயந்தவராக, ‘பெருமான்’ பின்னால் ஒளிந்து கொண்டார். பெருமானோ, மிகவும் பயந்து போய், தன் உடம்பில் இருந்த அனைத்து நகைகளையும் கழற்றி வைக்கத் துவங்கினார்…. பெருமாட்டியும்…, தன்னுடைய நகைகளைக் கழட்டினார். கலியன் அவசரப்படுத்தினார். ‘சீக்கிரம்…, சீக்கிரம்…. ஒன்று கூட ஒளித்து வைக்காதீர்கள்…’ மணமகன் சொன்னார்…, ‘எல்லாம் கழற்றியாச்சு…, என் விரல் மெட்டி தான் கழற்ற முடியவில்லை’ என்றதும், கலியன் சொன்னார்…., ‘நான் கழற்றுகிறேன்’ – என்று சொல்லி, பெருமானின் திருவடியைத் தீண்ட, ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தைத் தொட்ட சிலிர்ப்பு, கலியனின் உடம்பில் பரவியது; விதிர்த்துப் போனார். அண்ணாந்து மணமகனின் முகத்தைப் பார்க்க…, அவரோ, அப்பாவியாய் முகத்தை வைத்திருக்க…, கலியன், ஒரு கணத்தில் சுதாரித்துக் கொண்டு, மெட்டியை விட்டு விட்டு, நகைகளையெல்லாம் மூட்டை கட்ட ஆரம்பித்தார்…. அவசர அவசரமாக மூட்டையைத் தூக்கிச் செல்ல முயற்சித்…. தும், அவரால், தூக்க முடியவில்லை. யுத்த களத்தில், ஒரு குட்டி யானையைத் தன் ஒற்றைக் கையால் அனாயாசமாகத் தூக்கி வீசும் கலியனுக்கு, இந்த நகை மூட்டையைத் தூக்க முடியவில்லை…. அப்போ, நம்ம பெருமாள் நக்கலடித்தார் கிருஷ்ணா…. ‘என்ன கலியா…, மூட்டை கனக்கிறதா…., அது என்ன பாவ மூட்டையா…., நகை மூட்டைதானே….’ என்று கேட்க…, ‘பொளேர்’னு அறை விட்ட மாதிரி இருந்தது கலியனுக்கு…. தன்னை அறியாமல் மெய் நடுங்கியது. கண்கள் கசிந்து நீரைச் சொறிந்தன. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். பெருமாளும், பிராட்டியும், சங்கு சக்கரத்துடன், சர்வ அலங்காரத்துடனும் கலியனுக்கு காட்சி தந்து ஆட்கொண்டனர் கிருஷ்ணா…. எம்பெருமானே வழிப்போக்கனாக வந்து நடத்திய நாடகம், இன்று வாசிக்கும் போதும் பிரமிக்கத்தக்கது தான் கிருஷ்ணா….. வழிப்போக்கனாக வந்த எம்பெருமானால், திருமங்கையாழ்வார் பெற்றது பேரானந்தம்….

கிருஷ்ணர் : ஓ! வழிப்போக்கர்களால், திருமங்கை மன்னன் ஆனந்தத்தையும் பெற்று விட்டான்…. யாராவது வழிப்போக்கன் வரம் பெற்றிருக்கிறானா….

மேகலா : ஒருவர் இருக்கிறார் கிருஷ்ணா…. சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவிடமே வரம் பெற்றவர்….

கிருஷ்ணர் : அவர் வழிப்போக்கரா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1