வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 10

மேகலா : ….. அன்றைய தின நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து தூக்கமே வரவில்லை கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அது அப்படித்தான் மேகலா….. நினைத்தே பார்க்காத புண்ணியபூமிக்கு வந்திருக்கிறாயல்லவா. கண்களில் பார்த்த காட்சிகள் தான் நிழலாடுமே தவிர…, தூக்கம் வர கொஞ்சம் யோசிக்கத்தான் செய்யும்… சரி…, அடுத்த நாள் எங்கு சென்றீர்கள்….

மேகலா : ரிஷிகேஷில், இமயமலையில் உள்ள ‘நீல்கண்ட் மகாதேவ்’ கோயில் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வாவ்! இமயமலையின் வளைவுகளில் வசிஷ்டர் சுற்றித் திரிந்த இடங்களில், விசுவாமித்திரர் போன்ற மஹரிஷிகள் யாகம் செய்து, தவம் செய்த பிரதேசங்களில் செல்லுகிறாய். இமயமலையின் பிரதேசங்களில் கால் வைப்பதற்கே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்… ஆமாம்…, நீங்கள் ரிஷிகேஷை நன்கு அறிந்தவரை உங்களோடு கூட்டிச் செல்லவில்லையே… இந்தக் கோயில் இருக்கும் இடத்தை, ‘Google map’-ல் பார்த்தீர்களோ….

மேகலா : அது எனக்குத் தெரியல கிருஷ்ணா…. ஆனால் ஹரி, நாங்கள் புனிதப் பயணம் செல்லத் தயாரானவுடன், அங்கு சென்று வந்த என் அண்ணன் மகன் பாலாஜிக்கு phone பண்ணி, எங்கெங்கு செல்லலாம் என்று கேட்டிருக்கிறான். அவன் குறிப்பிட்டுச் சொன்னதுதான் இந்தக் கோயில்… நாங்கள் எங்கள் பயண விவரத்தை driver-இடம் சொல்லும் போது, அவரும் இந்தக் கோயிலைக் குறிப்பாகச் சொன்னார்… நாங்கள் போகும் வரைக்கும், இந்தக் கோயிலைப் பற்றி ஏதும் தெரியாமல் ஒரு எதிர்பார்ப்புடன் தான் சென்றோம் கிருஷ்ணா… காலை breakfast-ஐ முடித்து விட்டு, இமயமலையின் ஏதோ ஒரு குகைக்கு செல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன், ரிஷிகேஷின் பரபரப்பான சந்தையை விட்டு விலகி, மலையின் வளைவுகளில் நெளிந்து நெளிந்து செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும் போதுதான் தெரிந்தது, இமயமலையின் நிமிர்ந்த தோற்றமும், கங்கையின் பிரவாகமெடுத்து ஓடும் வேகமும் பார்க்கும் போது, எம்பெருமானின் தலைமுடியிலிருந்து இறங்கி ஓடி வரும் கங்கையைப் பார்ப்பது போலத் தோன்றியது கிருஷ்ணா… ஒரு இடத்தில், மலையும், நதியும் இணைந்து நிற்கும் இடத்தை நின்று ரசித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, பாலத்தில் நடைபாதை அமைத்து, வலையும் கட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா… பாதையைச் சுற்றி மலை சூழ்ந்து நிற்கிறது. இந்தப் பக்கத்திலிருந்து கங்கை ஓடி வருகிறாள்…. அந்தப் பக்கத்திற்கு பாய்ந்து செல்லுகிறாள்… யாராக இருந்தாலும், ஒரு ஐந்து நிமிடத்திற்கு பேசும் மொழி மறந்து, மௌனமாக மெய்யும் மறந்து போய், மோன நிலைக்குச் செல்லாமல் இருக்க முடியாது கிருஷ்ணா…. அது, இயற்கை அழகின் ஆக்ரமிப்பா…, அண்ட சராசரங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் அந்த மஹாசக்தியின் அற்புதமா…, எனக்குத் தெரியவில்லை… ஆனால்…., நாங்கள் ஒவ்வொருவரும் இந்த நிலையை உணர்ந்தோம்… சிறிது நேரத்தில் இயல்புநிலைக்கு வந்து, இயற்கையோடு photo எடுத்துக் கொண்டோம்….

கிருஷ்ணர் : Oh! வாவ்! இப்பவே இமயமலையின் வளைவுகளில் செல்ல வேண்டும் போல இருக்கிறது மேகலா…. நீ கோயிலுக்குச் செல்லணும்கிறது அவசியமில்லை…. ஐம்பூதங்களின் வடிவமாக, இமயமலையாக அந்த எம்பெருமானே நிமிர்ந்து நிற்கிறார்…

மேகலா : ஆம் கிருஷ்ணா…. இருந்தாலும், இமயமலையின் ஒரு வளைவில் குடியிருக்கும் நீலகண்ட மகாதேவனை பார்க்க வேண்டும் என்ற நினைவு வர, காரில் ஏறி உட்கார்ந்து, இடமிருந்து வலமாக ஓடிச் செல்லும் கங்கையைத் தாண்டி, கோயிலை நோக்கிச் சென்றோம்… வளைவுகளில் செல்லச் செல்ல, பள்ளத்தாக்கில் ஓடி வரும் கங்கை, சிறிது சிறிதாக ஓடையாக சிறுத்து ஓடி, ஓரிடத்தில் நின்றே விட்டது. நான் பதறிப் போனேன். அப்பொழுது, இமயமலையிலும் நீர் ஒழுகி வரும் நீரோடை ஒன்று, மழையில்லாமல் கூழாங்கற்கள் நிறைந்திருப்பதைப் பார்த்ததும்…, ‘ஓ! இது மலையிலிருந்து ஒழுகி வரும் நீரோடை, கங்கையோடு கலந்து செல்கிறதோ என்பது புரிந்தது…. மழைக் காலங்களில், பள்ளத்தாக்கில் பெருகி வரும் மழை நீரும், கங்கையோடு சேர்ந்து எங்கும் நீர்ப்பிரவாகமாய்…, பார்ப்பவரையே மிரட்டி விடும் போல… இந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிக் கொண்டே கோயிலுக்கு அருகில் வந்து சேர்ந்தோம். ஆங்காங்கே resorts என்று அமைத்து இமயமலையை உருக்குலைக்கவில்லை…, ஆனாலும், கிடைத்த இடத்தில் தங்கும் விடுதி ஒன்று அமைத்திருந்தார்கள். செல்லும் பாதையும், ஒருவழிப்பாதையாக இருந்தது… கோயிலின் அருகில் வந்து விட்டோம். சற்றுத் தொலைவிலேயே…, கிடைத்த ஒரு சமவெளியில், கார்களை park செய்யச் சொல்லி விட்டார்கள். அங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும்… இறங்கி நடந்தோம். அங்கும் Red Fox விடுதி இருந்தது கிருஷ்ணா…. வழி நெடுக சாப்பிடுவதற்கும், சுவாமி சிலைகள், bags வாங்குவதற்கும் கடைகள் இருந்தன. அதைப் பார்த்துக் கொண்டே இதமான வெய்யில் உறுத்தாதபடிக்கு நடந்து சென்றோம். இந்தக் கோயிலின் கோபுரம் South Indian ஸ்தபதிகள் வடிவமைத்திருப்பதாக ஹரி சொன்னான். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, சிறியதான கோபுரம் தெரிய…, கோயில் அருகில் வந்து விட்டது என்று மனதுக்குள் ஒரு பரபரப்பு எழுந்தது… கோயில் அருகில்.., ஒரு சிறிய சந்து மாதிரி இருந்தது. அதன் வாசலில் ஒரு bell கட்டி விட்டிருந்தார்கள். அதன் படியில் இறங்கிச் செல்லலாமோ என்று நாங்கள் நினைக்கும் போது, மக்கள் வந்த பாதையிலேயே மேலும் முன்னேறிச் செல்வதைப் பார்த்து நாங்களும், அவர்கள் பின்னாடியே சென்றோம். ஒரு பத்து step வைப்பதற்குள் கோயில் பிரகாரம் வந்து விட்டது. ‘திமுதிமு’ என்று கூட்டமும் இல்லை…, கூட்டமேயில்லாமலும் இல்லை…., ‘மானசதேவி கோயில்’ போலவே…, இங்கும் இருபுறமும் கடைகள் இருந்தன. செருப்பைக் கழட்டிப் போடச் சொன்னார்கள். கடவுளுக்குக் குளிப்பாட்ட கங்கை நீருடன், பூக்களுமான பிரசாதத் தட்டும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கு மாதிரி இங்கும் ஒன்றும் தெரியாத மாதிரியே நாங்களும் சென்றோம். ஒரு இடத்தில் இளைப்பாறுவதற்காக சிறிய ‘corridor’ மாதிரியான இடம் இருந்தது. அதன் முற்றத்தில் செருப்பைக் கழட்டி வைத்து, சிறிய கூட்டமானாலும், மக்கள் வரிசையாக நிற்க, நாங்களும் வரிசையில் நின்று கொண்டோம். நீலகண்டருக்கு இரண்டு சன்னதிகள் இருந்தன. முதல் சன்னதியில் வரிசையாகச் சென்று நுழைந்து விட்டோம் கிருஷ்ணா…. நம்ம ஊர்களிலெல்லாம், கருவறையில் லிங்கமூர்த்தம் கம்பீரமாக அமர்ந்து, தீபாராதனையில் இறையனார் நம்மைப் பரவசப்படுத்துவார். கருவறையின் வலப்புறத்தில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருக்கும் அறை இருக்கும். அங்கு நடராஜரும் நின்றிருப்பார். நாம் லிங்கமூர்த்தத்தை வணங்கி விட்டு வருவோம்…. இங்கு, நாம் குனிந்து பார்க்கும்படிக்கு லிங்கமூர்த்தம் அமைந்திருக்கிறது. அவருக்கு, மக்கள் கொண்டு செல்லும் கங்காதீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். எல்லோரும் உணர்ச்சிப் பெருக்கால், ‘ஹரஹர மஹாதேவ்’ என்று முழங்குகிறார்கள்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1