வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 11

மேகலா : …. இங்கு நாம் குனிந்து பார்க்கும்படிக்கு லிங்கமூர்த்தம் அமைந்திருக்கிறது. அவருக்கு மக்கள் கொண்டு செல்லும் கங்காதீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். எல்லோரும் உணர்ச்சிப் பெருக்கால், ‘ஹரஹர மஹாதேவ்’ என்று முழங்குகிறார்கள்… அந்த சமயத்தில்தான் நம் மெய்யும், மனமும் ஒரு சேர ஒரு அதிர்வலையை வெளிப்படுத்துகிறது. என் கையில், கங்கையின் புனித நீர் இல்லை…, என் கண்களில் நீர் வழிந்தது. இறையனாரைத் தொட்டு விட நினைத்தேன்… தொட்டு விட்டேனா…, தெரியவில்லை…. மெய் சிலிர்த்துப் போனேன் கிருஷ்ணா…. யாரும் என்னை விரட்டவில்லை. மக்கள், தங்கள் பிரார்த்தனையை இறையனாரிடம் சேர்ப்பித்து மெள்ள நடந்து சென்றார்கள்… என் கண்கள், என்னை மறந்த நிலையில், மக்கள் குளிப்பாட்டிய நீரில் மூழ்கிய எம்பெருமானை, திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்று அடம் பிடித்தது. என்னோட குழு என்னை விட்டு விலகிச் சென்ற பின் தான் என் கால்களும் பின் தொடர்ந்தது… வெளியேறியதும், இடப்புறத்தில் அமர்ந்திருந்த அன்னையைப் பார்த்து வணங்கி வந்தோம்… கோயில் தரிசனம் முடிந்ததோ என்று நினைத்து, ராணிமாவும், மதனாவும் ஓரிடத்தில் உட்கார, ஹரியும், கார்த்தியும் பிறிதோரிடத்திற்குச் செல்ல, நானும் ஷீத்தல் அப்பாவும் மற்றுமொரு சன்னிதானத்திற்குச் செல்வதற்கான வரிசையில் நின்றோம். இங்கு, மதனா, நான் இன்னொரு முறை தரிசனம் பண்ணப் போகிறேன் என்று நினைத்து, என்னிடம் கங்கை நீர் இருக்கும் பிரார்த்தனைத் தட்டைத் தந்தாள். நாங்கள் உள்ளே சென்றோம்…. கிருஷ்ணா…., இப்போ என் கையில் புனித நீர் இருக்கிறது. ’இறையனாரை நானும் அபிஷேகம் செய்யப் போகிறேன்’ என்று என் மனது பரபரப்பாகக் காத்திருக்கும் சமயத்தில், கண் மூடித் தூங்குவதாக பாவனை செய்து படுத்திருக்கும் எம்பெருமானை பார்த்து விட்டேன் கிருஷ்ணா…. எல்லோரும் இறையனாருக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்ய…, ‘ஐயோ…, என்ன இது…., தூங்கிக் கொண்டிருக்கும் எம்பெருமான் மீது நீர் தெளிக்கிறார்களே’ என்று என் மனது பதறுது. அப்போ, இறையனாரின் முகத்தில் ஒரு புன்னகை, என்னைக் கேலி செய்தது… எனக்குள் ஒரு கண நேரத்தில், ‘இறைவா, இந்த ஒரு புன்னகை, ‘என் கண்களில் காட்சியாக’ நிலைத்து நிற்கட்டும்…, அருள் புரிவீராக’ என்று சொல்லி, நானும், நீரை அபிஷேகம் செய்து, லிங்கமூர்த்தத்திலும் நீரை ஊற்றி விட்டு, இறையனாருக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருக்கமான, முற்றிலும் புதியதான அதிர்வலைகளை ஏற்படுத்திய அற்புதமான தருணம்… இந்த உணர்வுகள் எல்லாம் ரொம்ப புதுசா இருந்தது. என்னை மறந்து வெளியேறினேன். அப்போதான் தெரிந்தது ராணிமாவும், மதனாவும் அந்த சன்னதிக்குள் போகவே இல்லையென்று. ஹரியும் அங்கு வந்து சேர்ந்தான். ‘இது இன்னொரு சன்னதி, miss பண்ணீராதீங்க’ என்று நான் சொல்லவும், எல்லோரும் பிரசாதத் தட்டை வாங்கி வந்து பிரகாரத்திற்குள் நுழைந்தார்கள்… பிரகாரத்திலிருந்து வெளியேறிய பின், அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா கிருஷ்ணா…. ‘படுத்திருக்கும் சிவபெருமானை இது வரை எங்கேயும் பார்த்தது கிடையாது. நல்லா தொட்டு வணங்கி, நீர் ஊற்றி…, ஆஹா…, miss பண்ண இருந்தேன்… நல்ல வேளை சாமிய நல்லா கும்பிட்டுட்டேன்’ என்று சொல்லி…, சொல்லி, மெய் சிலிர்த்தார்கள். பிரகாரத்தின் வாசலில் ஒருவர் எல்லோருக்கும், நீல்கண்ட் மஹாதேவ் கோயிலுக்குச் சென்றதன் அடையாளமாக அருட்கயிறு கட்டி விட்டார். சன்னதிக்கு அருகில், நானும், ஷீத்தல் அப்பாவும், ஹரி group-க்காகக் காத்திருந்த போது ஒரு family, பிரார்த்தனை வாழைப்பழத்தை எல்லோருக்கும் வழங்குவதற்காக வந்தார்கள். ‘ஹர ஹர மஹாதேவ்’ என்று உச்சரித்து விட்டு, முதல் பிரசாதமாக இரண்டு பழத்தை எனக்குக் கொடுத்தார்கள் கிருஷ்ணா…. நான் இந்த மனநிலையில், சிவபெருமானே அன்புடன் பழத்தைக் கொடுத்ததாக நினைத்து சிலிர்த்துப் போனேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! வாழ்க வளமுடன் மேகலா…

மேகலா : இந்தக் கோயிலின் விஸ்தீரணம் சிறியதுதான் கிருஷ்ணா… ஒரு சின்ன வீடு போல இருந்தது. ஒரு வேளை இது குகையாகக் கூட இருந்திருக்கலாம். மனிதன் விஸ்தீரணப்படுத்தும் அளவுக்கு பரப்பளவும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது கிருஷ்ணா…. எந்த முனிவரோ வழிபட்ட ‘மகாதேவர்’… நானும் வழிபட்டு வந்தேனோ என்று நானாக கற்பனை பண்ணிக் கொண்டேன் கிருஷ்ணா…. நம்ப முடியாத அதிசயத்துடனும், மிகச் சிறந்த அனுபவத்துடனும் கோயிலை விட்டு வெளியேறி, இருபக்கத்துக் கடைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே கார் இருக்கும் இடத்துக்கு நடந்து வந்தோம் கிருஷ்ணா…. நான், ஷீத்தல் அப்பா, கார்த்தி, ஆதி நால்வரும் முன்னாடி வர, அவர்கள் மூவரும் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே மெதுவாக வந்தார்கள். அப்பொழுது, கார் பார்க்கிங் சமீபத்தில் ஒரு மண்டபம் தெரிந்தது. என்னவாக இருக்கும் என்று ஒரு வித ஆவலில் சென்று பார்த்தால், அது ஒரு சிறிய கோயில் கிருஷ்ணா…. சிறியதும், பெரியதுமாக, சுமார் பத்து பதினைந்து லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒவ்வொரு மூர்த்தத்தின் பெயரும் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. ஷீத்தல் அப்பாக்கு ஹிந்தி வாசிக்கத் தெரியும் என்பதால், அவர், ‘வைத்தியநாதர்’, ‘காசி விசுவநாதர்’, ‘ஆதி கும்பேஸ்வரர்’, ‘நீலகண்டர்’…, என்று வாசித்துச் சொல்ல….., விரட்டுவதற்கும், regulate பண்ணுவதற்கும் யாருமே இல்லாத அந்தக் கோயிலின் முதல் மூர்த்தத்தில், ஒரு சிலர் நீர் ஊற்றுவதைப் பார்த்து, நானும் நீரை வாங்கி ஊற்றினேன். அந்த மூர்த்தத்தில் மெதுவாக தொட்டு வணங்கினேன். ஒவ்வொரு மூர்த்தமாக நெருங்க நெருங்க எனக்குள், கண்ணப்ப நாயனாரின் கதை ஞாபகத்திற்கு வந்து, இறையனாரைக் கட்டிப் பிடித்து விடலாம் என்று தோன்ற, லிங்கத்தை என் விரல்களால் பிடித்து விட்டேன். கைகள் நடுங்க…, ஒரு நிமிடம், கண்ணப்பனாக என்னைப் பாவித்து, மெய் சிலிர்த்து நின்றேன் கிருஷ்ணா…. இறையனார் என் பக்தியை ஏற்றுக் கொண்டாரா தெரியவில்லை… ஆனால்…, நான், அத்தருணத்தை முழுமையாக எனக்குள் அடக்கிக் கொண்டேன்… இந்த அனுபவத்தை, பின்னாடி வருபவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று, ஹரிக்கு message அனுப்பி, ‘miss பண்ணிராத’ என்று போட்டு, நாங்கள் மனசேயில்லாமல் வெளியேறினோம்… அப்பத்தான், ‘ரொம்ப நேரம் நடந்து விட்டோமோ’ என்று என் கால்கள் சொன்னது. மெதுவாக நடந்து, car நிற்குமிடத்திற்கு வந்து விட்டோம்… பின்னால் வந்தவர்கள்…, மண்டபத்தைக் கடந்து விட்டதால், லிங்க சன்னிதானத்திற்கு போகவில்லை என்றதும், எனக்கு வருத்தமாகி விட்டது… மறுபடியும் போகலாமா என்றால்…, மீண்டும் நடக்கணும். அதனால், எல்லோரும் காரி ஏறி அமர்ந்து விட்டோம்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2