வாழ்க்கையில் ஒருமுறையாவது... --- பகுதி 12

மேகலா : Driver, மேலே ஏறும் போதே சொல்லி இருந்தார்… ’சில views நின்று ரசிக்கலாம்’ என்று… சில இடங்களில் கங்கையையும், இமயமலையையும் பார்ப்பதற்கு தெய்வீகத்தன்மை உடையதாகவும், அழகாலேயே நம்மை பரவசப்படுத்துவதாயும் இருக்கும் என்றும் நாங்கள் பார்த்தோம் கிருஷ்ணா… அதன்படிக்கு, மேலே ஏறும் போதே, ஒரு பாலத்தில் நின்று கங்கையின் ஆர்ப்பரிப்பான அழகைப் பார்த்து விட்டோம். ’இன்னும் ஒரு இடம் இருக்கிறது… அங்கு சென்றால்…, அந்த இடத்தை விட்டு அகல உங்களுக்கு மனமிருக்காது’ என்று driver சொன்னார். எனக்கு, மொத்த ‘ரிஷிகேஷுமே’ பேரின்ப வாசலாக இருந்தது… இருந்தாலும், வரும் வழியை ரசித்துக் கொண்டும், driver சொன்ன மாதிரியான இடத்தையும் தேடிக் கொண்டே வந்தோம்…. ஒரு வளைவைக் கடக்கும் போது, மலைகளின் ‘இடுக்கு’ ஒன்றிலிருந்து நீர் ஒழுகி, அருவியாகக் கொட்டியது. கொட்டும் இடத்தில், சிறு குளமாக நீர் பரவி இருந்தது. அதிலிருந்து ஒரு ஓடையும், சன்னமான சலசலப்போடு ஓடியது. பாதையின் இடப்பக்கத்தில் ஒரு சரிவு… அப்படியே இறங்கி, அந்த அருவி பாயும் இடத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் ஒருமித்த குரலில், ‘ஹேய், நிப்பாட்டுங்க’ – என்றதும், driver-ம் ஏற்கனவே தீர்மானித்தபடிக்கு, ‘தமிழில் கேட்டாலும்’…, நிறுத்தி விட்டார். கார்த்தி கும்மாளமாய் இறங்கி ஓடுகிறான். அருவியின் அழகில் ஈர்க்கப்பட்ட ஹரி, கார்த்தியை பின் தொடர்கிறான். அதற்குள் மதனா, ராணிமா, ஆதி எல்லோரும் அருவியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்….

கிருஷ்ணர் : இத்தனை ரசனையுடன் சொல்கிறாயே….. நீ செல்லவில்லையா….

மேகலா : கிருஷ்ணா…, முதலில், ‘ஒரு சரிவு’…., பயங்காட்டுவதாக, slanting ஆக இருந்ததால்…, எனக்குப் பயமாக இருந்தது… நானும், ஷீத்தல் அப்பாவும் செல்லவில்லை… ஆனால், எனக்கு, நீர்த்தேக்கத்தில் இறங்கி அருவியில் குளிக்க வேண்டும் போல் இருந்தது…. அப்பொழுது, நண்பர்களாக வந்த ஒரு குழு, இறங்கி குளிக்க ஆரம்பித்தார்கள். ‘மடு’வில் தண்ணீர் ஆழமில்லாமல் தான் இருந்தது போல…. அந்தக் குழு குளிப்பதைப் பார்த்து, ஹரி, இறங்கி கால் நனைத்ததோடு சரி… அதற்குள் மதனாவும், ராணிமாவும் ஓடி வரும் ஓடையில், கால் நனைத்து, தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்தார்கள். அப்பொழுது, ‘பசி நேரம்’ கடந்து கொண்டிருந்தது. அதனால், கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு, எல்லோரும் மேலே ஏறி வந்தார்கள். ஹரி, ‘அந்தக் குழு வராமலிருந்தால், நான் குளித்திருப்பேன்’ என்றான். கார்த்தியும், ‘ஆமாம்’ என்றான். அந்த அருவியை விட்டு செல்ல மனசில்லாமல்தான் வந்தோம் கிருஷ்ணா…. இப்படிப்பட்ட நீர்நிலைகளுக்கருகில்தான் முனிவர்கள் ’ஆசிரமம்’ அமைத்து, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே வருகிறேன். Driver, ஒரு எளிமையான சாப்பாட்டுக்கடை முன்னால் நிப்பாட்டுகிறார். இதுவும், நமக்கு table கிடைக்காமல் நின்று கொண்டிருக்கும்படியான hotel கிடையாது. சொல்லப் போனால், நாங்கள் மட்டும் தான் customers…. எங்களிடம் மெனு கேட்டது ஒரு ஆண்…. வழக்கமான roti, டால், பனீர் டிக்கா, ஜீரா ரைஸ், raitha தான். பத்து நிமிடத்தில் சுடச் சுட பரிமாறியது ஒரு பெண்… சுவையும் அருமையாக இருந்தது. பசிக்கு roti கேட்க, கேட்க…, வந்து கொண்டே இருந்தது….. நாங்கள், எங்கள் புனிதப் பயணத்தில், roti-யும், பன்னீர் உணவுகள் மாத்திரமே சாப்பிட்டோம் கிருஷ்ணா…. ஒரு நாள் இரவு மாத்திரம் ‘மெட்ராஸ் கபேயில்’ சாப்பிட்டோம் கிருஷ்ணா… அங்கு table-லில் இடம் கிடைக்கவில்லை… காத்திருந்து தென்னிந்திய உணவுகளை – தோசை, இட்லி – என்று சாப்பிட்டோம்…..

கிருஷ்ணர் : Oh! இத்தனை உணர்ச்சிப் பெருக்கில் இட்லியைப் பார்த்துட்டயா…

மேகலா : நாங்கள் தங்கியிருந்த hotel- க்கு எதிரில் இருந்த hotel கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, விட்ட இடத்திலிருந்து continue பண்ணு…. ஆமாம்…, ரிஷிகேஷில், நீங்கள் ‘கங்கா ஆர்த்தி’ பார்க்கலயா….

மேகலா : பார்த்தோம் கிருஷ்ணா…. நாங்கள், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரிலிருந்து ரிஷிகேஷ் கிளம்பியதிலிருந்து, ‘நீல்கண்ட் மஹாதேவ்’ கோயிலுக்குச் சென்ற நாள் வரையிலும், காலையில் ரூமை விட்டு கிளாம்பினால், இரவு படுப்பதற்குத்தான் மறுபடியும் room-க்குச் செல்வோம். அப்படியே சுற்றியதால்தான்…, ஓரளவுக்கு பார்க்க நினைத்ததை பார்க்க முடிந்தது என்று நினைக்கிறேன் கிருஷ்ணா… நாங்கள் சாப்பிட்ட பின், காரில் ஏறி உட்கார்ந்ததும், ஹரி, driver-இடம், கங்கையில், ‘பலூன் boat’…, அதாவது, ‘rafting’ எப்படிச் செல்லுவது என்று விசாரித்தான். அதற்கு அவர், rafting செல்வதற்கென்று தனியா, அதற்கான taxi-யில் செல்ல வேண்டும் என்று taxi-யைக் காட்டினார்… அப்போதான் பார்த்தேன் கிருஷ்ணா… நிறைய car அதன் தலையில் பலூன் boat-ஐச் சுமந்து செல்கிறது. Boat மாத்திரம் தனியாகக் கிடைக்காது போலிருக்கிறது… அப்படித் தனியே போகவும் கூடாது போல…. பிறகு driver சொன்னார், ‘நீங்கள் எத்தனை பேர் போகப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்; நான் arrange பண்ணுகிறேன்’ என்று… ‘நானும், அப்பாவும் வரவில்லை, நீங்கள் மட்டும் செல்லுங்கள்’ என்று நான் சொல்லி விட்டேன் கிருஷ்ணா….. ஹரி, இந்த details-ஐ மட்டும் சொல்லி விட்டு, ‘இப்போ கங்கையில் குளிப்பதற்குச் செல்லலாம்’ என்றவுடன்…, driver, வண்டியை parking இடத்தில் நிறுத்தி விட்டு, எங்களை குளிப்பதற்கு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஒரு ‘கைடிடம்’ ஒப்படைத்தார்.

அந்த கைடு எங்களை, கங்கையில் குளிப்பதற்காக, மறுகரையில் இருக்கும் படித்துறைக்கு, படகு ஒன்றில் அழைத்துச் சென்றார். மெல்ல, சலசலத்துச் செல்லும் கங்கையில், ‘ஓடம் நதியினிலே’ என்ற பாட்டினை நினைத்துக் கொண்டு, படகினில் சென்றோம் கிருஷ்ணா…. காசியில் படகில் செல்லும் போது, பறவைகளுக்கு மிக்சர் போடுவதற்காக, boat ஓட்டுபவன் மிக்சர் விற்பான். பறவைகளும் நம்மை வட்டமிடும். இங்கு அப்படியெல்லாம் இல்லை. ராமரும், சீதையும் கங்கையைக் கடப்பதற்கு, குகன் ஓடம் செலுத்தும் காட்சி என் நினைவில் மோதியது. நாங்கள் குளிப்பதற்கான படித்துறைக்கு அருகில் எங்களை இறக்கியது… அங்கிருந்து சற்று தூரத்தில் குளிப்பதற்கென்றே பாதுகாப்பான இடம் இருந்தது…. கரையில் நீளமாக இரும்புக் கம்பி அமைத்து, அதில் நிறைய வளையத்துடன் கூடிய சங்கிலி தொங்க விட்டிருந்தார்கள். நீச்சல் தெரியாதவர்கள், அந்த வளையத்தைப் பிடித்துக் கொண்டே கங்கையில் முங்கலாம்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2