வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 9
மேகலா : அப்போ, ஹரியிடமிருந்து phone வந்தது…. ‘நான் எதிர் திசையில் நிற்கிறேன்; கையை அசைக்கிறேன், பாருங்கள்’ என்றான்… பார்த்தேன்… எதிர் திசையில் ஒரு மணிக்கூண்டு இருந்தது…. அருகில், கையை அசைத்து, காவி வேஷ்டியில் ஹரி தெரிந்தான்… ‘அம்மா, நீங்கள் நிற்கும் திசையில் சற்று தள்ளிதான் ‘ஆர்த்தி’ காட்டுவார்கள்… உங்களுக்குச் சரியாகத் தெரியாது; நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுங்கள், நன்றாக ஆர்த்தியைப் பார்க்கலாம்’ என்றான்… நாங்களும் எழுந்து, ஒரு டீ குடித்து விட்டு, ஹரி இருக்குமிடத்திற்கு செல்லலாம் என்று, ‘டீக்கடைக்கு’ சென்றோம். அங்கே, சுடச் சுட ‘ஜிலேபி’ சுட்டுக் கொண்டிருந்தார்கள். மொறு மொறுவென்றிருந்த ஜிலேபியை ருசித்து விட்டு, ’டீ’யைக் குடித்தோம்… அதன் பின், ஒரு பாலத்தைக் கடந்து, ஹரி இருக்கும் இடத்தை அடைந்தோம். பாலத்தில் நின்று பார்த்தால் கூட, நன்றாக ஆர்த்தியைப் பார்த்திருக்கலாம். ஆனால், வானம் நன்றாக இருண்ட பின் தான், ஆர்த்திக்கான ஆரம்பமே நடைபெறும் போல… இன்னும் எவ்வளவு நேரமாகுமோ…, அது வரையில் பாலத்தின் மீது ‘சும்மா’ நிற்க முடியாது… நேரமும் 5 மணிதான் ஆகியிருந்தது. மணிக்கூண்டு தாண்டி ஹரியைப் பார்த்து விட்டோம்… என்னைப் பார்த்தவுடன், ‘அம்மா, நாங்க அங்க ஒரு இடத்துல கங்கையில் நன்றாகக் குளித்தோம்… ஆதி மட்டும் தான் பயந்து போய் முங்கவில்லை…’ என்றானா…; எனக்குள் ஒரு குற்ற உணர்வு…, கங்கையைப் பார்த்தும்…, நாமதான் ’சும்மா’ நின்று விட்டோம் என்று… ஏக்கமாய் ஒரு முறை கங்கையைப் பார்த்தேன்…. மக்கள் கூட்டத்தின் இடைவெளிகளில் தெரிந்த ‘கங்கையம்மா’…, ‘இப்ப என்ன, நாளை பார்க்கலாம்’ என்றாள்…
கிருஷ்ணர் : அம்மாவே சொல்லி விட்டாளா…. பரவாயில்லை….
மேகலா : அப்பொழுது மக்கள் கூட்டம், குடும்பம் குடும்பமாக, ‘கங்கா ஆர்த்தி’ பார்ப்பதற்காக…, படிகளின் பக்கத்தில் இருந்த நிலப்பரப்பில் இடம் பிடித்தார்கள்… நாமும் இப்பவே உட்கார்ந்து விடலாமா என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அவரவர், பாய் மாதிரியான ஒரு plastic sheet விரித்து அமர்ந்தார்கள். நாம என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இன்னும் இரண்டு குடும்பம் உட்கார்ந்து விட்டது. வெளிச்சம் கொஞ்சம் கூட விலகாத நிலையில், கங்கா ஆர்த்திக்கு ’இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ…’, ’எவ்வளவு நேரம் நம்மால் உட்கார முடியுமோ….‘ என்ற தயக்கம் வேறு… ஆனாலும், கங்கா ஆர்த்தியைப் பார்ப்பதற்கு இடம் பிடித்தே ஆக வேண்டும் என்ற மனநிலையில், ஹரி, சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவர், தரையில் அமர்வதற்கான sheet விற்றுக் கொண்டிருந்தார். அதை வாங்கி வந்து விரித்து…, உட்கார்ந்து விட்டோம்… ஹரிக்கும், அவன் அப்பாவுக்கும் காலை மடக்கி, சாதாரணமாக உட்கார முடியவில்லை… அதனால், காலை நீட்டி உட்கார்ந்திருந்தனர்…. கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பவன், அல்லது control பண்ணும் ஒருவன், ஹரியை எழுந்திருக்கச் சொல்லி விட்டான். மொழி தெரியாத இடத்தில், ‘இருடா, வர்றேன்’ என்று தமிழில் சொல்லி விட்டு, ஹரி எங்களை விட்டு பின்னாடி சென்றான். ஷீத்தல் அப்பா, மிகவும் சிரமப்பட்டு, காலை குறுக்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து, காங்காதேவியைத்தான் வேண்டிக் கொண்டேன் கிருஷ்ணா…. வானம் மெல்ல, மெல்ல வெளிச்சம் மங்க ஆரம்பித்தது. ஆர்த்தி காண்பிப்பவர்கள் வர ஆரம்பித்தனர். ‘காசி’யில், மூன்று பேர் மட்டுமே பெரிய ஆர்த்தியாய் காட்டினார்கள். இங்கு எத்தனை பேர் ஆர்த்தி காட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால். வடமொழியில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்கள். இருள் முற்றிலும் வானத்தை மூடும் வரைக்கும் மந்திரம் சொல்லப்பட்டது. அப்பொழுது, எதிரில் இருந்த படித்துறையில், சுமார் பத்து பதினைந்து பேர், ஆர்த்தி கரண்டியை எடுத்துக் கொண்டு, சற்று தொலைவு வரையில் நின்று கொண்டார்கள். ஆர்த்தி ஏற்றப்பட்டது. அப்போ…, இங்கிருந்த வாலண்டியர்கள், ’போலோ, ‘கங்கா மாதாகி ஜே’ என்று சொல்லி, இன்னும் இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து சொல்லுகிறார்கள்… அப்பொழுது, மக்கள் கூட்டம், தங்களை மிஞ்சிய உணர்ச்சிப் பெருக்கில் நின்று கொண்டார்கள்… கங்கை, ஏற்றிய தீபங்களில் மின்ன ஆரம்பித்தாள்…. எல்லா திசைகளிலும், மக்கள் தீபத்தை ஏற்றி, நதியில் விட ஆரம்பித்தார்கள். வானில் மின்னிய நட்சத்திரங்கள், ’கங்கையில் குதித்ததோ’ என்னும்படிக்கு, கங்கை, ‘ஆகாய கங்கை’யாகத் தெரிந்தாள்…. நாங்கள், அமர்ந்திருந்த களைப்பு தீர, ‘எங்களாலும் பார்க்க முடிந்ததே’ என்ற சந்தோஷத்தில், அவரவர்கள் மனதோடு கங்கையிடம் பேச ஆரம்பித்தோம்… இத்தனை பரவசமான நிலையில், வாலண்டியர்ஸ் தட்டையும், ரசீது நோட்டையும் வைத்துக் கொண்டு, ‘உங்கள் குடும்பத்திற்காக கங்கையிடம் வேண்டிக் கொண்டு, கங்கை மாதாவிற்கு நிதி கொடுங்கள்’ என்று வந்தார்கள்…. இயற்கையையும், மஹாசக்தியையும் வைத்து ‘காசு’ பறிக்கிறார்களே என்று மனசு வலித்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : தட்டில் காசு போட்டால், கடவுள் சீக்கிரம் நம்மை ‘கவனிப்பார்’ என்பது மனுசனுடைய எண்ணம். அதை அவன் பயன்படுத்துகிறான்…, வேறென்ன….? கங்கையைப் பரவசமாகப் பார்த்து விட்டாய்… அப்புறம் என்ன….?
மேகலா : Room-ஐ விட்டு கிளம்பி ரொம்ப நேரம் ஆகிப் போச்சுன்னு அப்பத்தான் நினைக்க ஆரம்பித்தோம் கிருஷ்ணா… ஏதோ திருவிழாவுக்கு வந்து கூட்டம் கலைந்து செல்வது போல இருந்தது கிருஷ்ணா…. ‘சரி, நாமும் நம்ம இருப்பிடத்துக்கு செல்லலாம்… அதற்கு முன்னே எங்கே சாப்பிடலாம்…. ‘lunch’ சாப்பிட்ட இடத்திலேயே சாப்பிடலாமா என்று கேட்ட போது, எனக்கு, கண்ணும், மனசும் நிறைஞ்சு போச்சு…, பசியென்ற ஒன்றே மறந்து போன மனநிலை இருந்தது கிருஷ்ணா…. நான் சொன்னேன், ’room-க்கே போகலாம் ஹரி’ என்றதும், ‘இல்லம்மா…. hotel-ல் buffet system தான்; அது ரொம்ப costly. ரோட்டுக்கடைகளில் cheap ஆகவும் இருக்கு…, taste ஆகவும் இருக்கு’ என்றான். அதற்குள், எங்கள் car-க்கருகில் வந்து விட்டோம். Driver, dinner சாப்பிடுவதற்கு வழியில் ஒரு hotel-ல் இறக்கி விட்டார். ஆள் அரவமே இல்லாத hotel-ல், chef மற்றும் பரிமாறுபவர்கள், எங்களைப் பார்த்ததும் சுறுசுறுப்பானார்கள். சாதாரண ரோட்டுக் கடைதான்… ஆனால், மெனுவோ, பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா, தால் தடுக்கா…, roti, naan, raitha, noodles…, என்று பத்து நிமிஷத்துல சுடச்சுட டேபிளில் பரப்பிட்டாங்க கிருஷ்ணா… சுவையும் அபாரமாக இருந்தது கிருஷ்ணா… ரேட்டும், அத்தனைக்கும் 1200 ரூபாய்தான் ஆனது. எங்க கண்ணு முன்னாடிதான் roti சுட்டார்கள். நான் அவர்கள் ரொட்டி சுடுவதைப் பார்த்து, ‘very tasty and soft….’ என்றேன். அதற்கு அந்த chef, மாவு packet-ஐக் காண்பித்து, ‘இதன் சுவைக்கு இந்த மாவுதான் காரணம்’ என்றார்… நான், தமிழில், ‘இல்லையில்லை, உன் கைப்பக்குவம் தான் காரணம்’ என்றேன்… அவன் புரிந்த மாதிரி சிரித்தான் கிருஷ்ணா…. அன்றைய தினம் என் வாழ்க்கையில், காலண்டர் தேதியைக் கிழித்தவுடன் நடந்து போகும் வழக்கமான நாளாக இல்லாமல்…, என்னுடைய வாழ்க்கை குறிப்புகளில் பொன்னெழுத்துக்களால் எழுதப் பட வேண்டிய நாளாக இருந்தது. கடவுள் எனக்குக் கொடுத்த வரமாக இந்தப் பயணத்தை நினைக்கிறேன் கிருஷ்ணா… உனக்குத் தெரியுமா…, அன்றைய தின நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து தூக்கமே வரவில்லை கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment