வாழ்க்கையில் ஒருமுறையாவது... பகுதி 15

கிருஷ்ணர் : ஆமாம்…., நீ ஏன் ‘rafting’ செல்லவில்லை… நிமிர்ந்து நிற்கும் இமயமலையின் அடிவாரத்தைத் தொட்டு ஓடும் கங்கையைக் காணும் போது, ஆதிபகவனும், மகாசக்தியும் இணைந்து நிற்பது மாதிரி உனக்குத் தோணியது என்று சொன்னாயே… அந்த தரிசனத்தைப் பார்க்க செல்லவில்லையா…. போகாமலிருக்க உனக்கு எப்படி மனசு வந்தது….

மேகலா : கிருஷ்ணா…., பலூன் boat, shake ஆகிக் கொண்டே இருக்கும் போல…. இவங்க கூடயே, அழைத்துச் செல்பவரும், பாதுகாப்புக்காக செல்லப் போகிறார்கள். பயப்படாதவர்களுக்கே, security தேவைப்படுகிறது. அதிலும், rules படி, வயதானவர்களும், குழந்தைகளும் rafting செல்லக் கூடாதாம் கிருஷ்ணா…. அவர்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால், கங்கையின் ஆழமான பகுதிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்று, அங்கும்…., முங்கச் சொல்வார்கள் போல… லேசான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட, rafting பயணத்தை நிறுத்தி விடுவார்களாம். அமைதியான நீரோட்டம் கூட, வளைந்தும் நெளிந்தும், பாய்ந்தும் செல்வதாகத்தான் இருக்கிறது. அதனால்தான், நானும் போகணும்னு நினைக்கவில்லை….

கிருஷ்ணர் : அட…, என்னம்மா இது, படகு சவாரி போகாவிட்டால் என்ன…, கரையில் நின்று கொண்டு, இமயமலையையும், கங்கையையும் ரசித்துக் கொண்டிருக்கலாமே… சரி விடு…, நீ போகவில்லை…. அவர்கள் காலையில் எத்தனை மணிக்குக் கிளம்பினார்கள்….

மேகலா : நாங்கள் ஊருக்குக் கிளம்பும் நாள் விடிந்தது கிருஷ்ணா…. நான், ஆதி, ஐயாப்பா எல்லோரும் குளித்து ரெடியாகி, reception-க்கு வந்தோம்… ‘ஹரி group’ இன்னும் ‘rafting’ கிளம்பவில்லை…. Breakfast முடிந்ததும், அவர்களை அழைத்துச் செல்ல வண்டி வந்து விட்டது. கார்த்தி, மிகுந்த உற்சாகத்துடன், எங்களிடம் ‘bye’ சொல்லி விட்டு கிளம்பினான். ஹரியும், என்னிடம், ‘கொஞ்ச தூரம் இப்படியே சுற்றிப் பார்த்து விட்டு வரீங்களா’ என்று கேட்டான். நான், ‘இல்ல ஹரி, நீங்க சீக்கிரம் வாங்க… நாம் டேராடூன் செல்ல வேண்டும்’ என்றேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உன்னிடம் ஒன்று கேட்கிறேன்…. இமயமலையையும், கங்கையையும் பற்றி உன் மனதில் உள்ளதைச் சொல்லு…

மேகலா : கிருஷ்ணா…, இந்தத் தருணத்தில், இந்தக் கேள்வியைக் கேட்டு, இமயமலை சூழ்ந்து நிற்க…, கங்கை பிரவாகமெடுத்து ஓடி வரும் பிரதேசத்தில் என்னை நிற்க வைத்து விட்டாய் கிருஷ்ணா… இப்பொழுது நினைக்கிறேன்…, ‘நாம miss பண்ணிட்டோம்’ என்று…. ஹரி, படகு சவாரி சென்ற நேரத்தில் நான், பாலத்தில் நின்று, யாருமில்லாத பிரதேசத்தில், கீழே ஓடி வரும் கங்கையையும், மேலே ஆகாயத்தைத் தொட்டு நிற்கும் மலையையும், சுவாசிக்கும் திசையெல்லாம், மலையைத் தழுவி ஓடி வரும் காற்றையும் சுவாசித்துக் கொண்டே நின்றிருந்திருக்கலாம். அப்படி வெறுமையாய் நிற்பதும் ஒரு சுகம்… இதை ‘தியானம்’ என்று கூடச் சொல்லலாம். பேசும் மொழி மறந்து…, கொண்ட உறவு மறந்து…, செயல் மறந்து…, ஏன், மெய் மறந்து போய்…, ஒரு தவ நிலையில் இருந்திருக்கலாமோ…. ‘சுற்றிலும் நான் பாதுகாப்பாய் படர்ந்து நிற்கிறேன். நீ உற்சாகமாய் பாய்ந்து ஓடி விளையாடு’ என்று சொல்லாமல் சொல்லும் இமயமலையை ஆதிசிவனாய் பார்க்கிறேன்… ‘நான் பாய்ந்து ஓடி வருவதே, உன்னோட நன்மைக்குத்தான்’ என்று சொல்கிறாள் கங்கை… என்னை வணங்கினால், நான் வரமளிப்பேன்…. எனக்குள் இறங்கினால், உன் பாவமெல்லாம் காணாமற் போகும்….’. ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த காலம் தொட்டு, என்றும் இளமையாய், யாவருக்கும் செல்லப் பெண்ணாய்…, முதன் முதலாகப் பார்ப்பவருக்கு பிரம்மாண்டமாய்…, கும்மாளம் போடும் குழந்தைப் பெண்ணாய் ஓடி வரும் கங்கையைப் பார்த்தும், தழுவியும், கால் நனைத்தும், முங்கியும் தரிசிப்பவர்களுக்கு, அன்னை, மஹாசக்தியாய், உலகின் இயக்கமாக, உயிரோட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறாள் கிருஷ்ணா…. மௌனமாய், வீரமாய், பெருமையாய், இமயமலை… உயிரோட்டமாய், ஆர்ப்பரிப்பாய், சௌந்தர்யத்தின் மொத்த வடிவமாய் கங்கையம்மாள், அர்தநாரீஸ்வரராய் நின்ற தோற்றம் என்று ஒருசேரப் பார்க்கும் போது, நமக்குள் நடக்கும் மௌன யுத்தம்…, வாயடைத்துப் போகும் உணர்வுகள்…, மெய் மறந்து போகும் சப்த நாடிகள்…, மகான்களும், மஹாரிஷிகளும், கங்கையின் நதிதீரத்தில், இமயமலையின் அடிவாரத்தில், ஏன் குடிசை போட்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்று இப்ப புரிகிறது கிருஷ்ணா…. உலக வாழ்க்கையின் அன்னியமான சூழலில், சப்த நாடிகளும் ஒடுங்கி, இங்கு தவழும் காற்றையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்வது ஒரு தவம்…. அன்னையின் நீரோட்டத்தையே, உலகத்தின் இயங்கு சக்தியாக பார்ப்பது என்பது பேருண்மை…. ஆதிசிவனின் நெஞ்சு நிமிர்ந்த தோற்றமே பாதுகாப்பாகக் கொள்வது என்பது, நம் பலம்… இங்கு நின்று ஒரு முறை மூச்சை இழுத்து விட்டு, மௌனமாய் நிற்கும் போது, நமக்குள்ளும் ஒரு வெளிச்சம் பிறக்கிறது. நம் மனதின் எதிர்மறையான குறைபாடுகள் வடிந்து போகிறது… அழுத்தமாய், ஒரு அதிர்வலைகள், இதுதான் மகாசக்தி…, இதுவே நம் பாரதம்…, இது மட்டும் தான் உண்மை என்று நம்மை சிலிர்க்க வைக்கிறது கிருஷ்ணா…. நான் ஒரு முறை பார்த்தேனா…, இரு முறை பார்த்தேனா… ஆனால், இந்தப் பிரதேசம், வனங்கள், நீர்நிலைகள், இதில் உலவும் சுவாசம், ஆதி சிவனையும், ராமரையும், இமவான் மகளையும், மஹரிஷிகளையும், எனக்கே எனக்கான சொந்தமாக்கியது. என் கால்களும், கண்களும் விமானமேறி இருப்பிடத்திற்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால், நான், இன்னும் இமயமலையின் வளைவுகளில், அதில் மோதிக் குதித்து ஓடும் கங்கையாற்றின் கரையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2