பெண்களால் முடியும் - பாகம் 4

மேகலா : கிருஷ்ணா…, ‘தகடூர்’ அதியமான், அரசனாகப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு குறுநிலநாடு என்று சொல்லலாம். இப்போ இருக்கும், ‘தர்மபுரி’யும் அதைச் சுற்றியுள்ள நகரமும்…., இப்பவும் பச்சைப் பசேலென்று செழித்து நிற்கும் பூமிதான் ‘தகடூர்’… அதியமான், கற்றவர்களை மிகவும் மதிப்பவன்…. அவர்கள் நாட்டிற்கு, ஔவையார் வருகை புரிந்திருந்தார். ஔவையாரின், ‘நன்னெறி’, ‘மூதுரை’…, போன்ற இலக்கியங்களை வாசித்திருந்த அதியமான், அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, தங்கள் நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு வேண்டிக் கொண்டான்… ஔவையாரும், மன்னனின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, அங்கேயே சில காலம் தங்கி விட்டார்.

ஒரு முறை அதியமான், ஔவையாரை, தன் நாட்டின் செழிப்பான பகுதிகளைக் காண அழைத்துச் சென்றான். அப்போ, ஒரு காயலான் கடையில், முனை மழுங்கிய வாள், இரண்டாக உடைந்த வேல்…, என்று போர்க்கருவிகள் குவிந்து கிடந்தன. ஔவையாருக்கு ஒரே மனக்குழப்பம்… மண்வளம் செழிப்பாக இருக்கும் இந்த விவசாய பூமியில், படைக்கருவிகள் ஏன் இத்தனை குவிந்து கிடக்கின்றன…, என்ற வேதனை, அவர் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன…. இதனை குறிப்பாகப் புரிந்து கொண்ட அதியமான்…, தன் மனதிலும் அதே வருத்தம் இருப்பதை, ஒரு தாயாக, தமிழ்ப்புலவரிடம் புலம்பித் தீர்த்தான். நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை, மனமகிழ்ச்சியுடன் செயல்படுத்த விடாமல், அண்டை நாட்டுக்காரர்கள், தொடர்ந்து போர் தாக்குதல் செய்வதாகக் கூறி, அவர்களை விரட்டுவதே முழுநேரப் பணியாகி விட்டது… என்ற தன் ஆதங்கத்தை எடுத்துரைக்கிறான். ஔவையார் கவனமாகக் கேட்டுக் கொண்டார்…. மறுநாள், மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.

சென்றவர், தன்னுடைய நாட்டுக்குச் செல்லவில்லை கிருஷ்ணா… தகடூரின் செழிப்பில் மனம் பறி கொடுத்து, அதைத் தன் நாடாக்கத் திட்டமிடும் பக்கத்து நாட்டு அரசனான தொண்டைமான் அரசாளும், தொண்டை நாட்டுக்குத்தான் சென்றார்…. மன்னன் தொண்டைமானும், தமிழின் மீதும், தமிழ்ப்புலவர்கள் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவன்… ஔவையாரின் வருகையை, தனக்கும், தன் நாட்டுக்கும் கிடைத்த பெரும் பேறாகக் கருதினான்… ஔவையை சிறப்பாக வரவேற்று உபசரித்தான்… அவனுடைய வரவேற்பில் ஔவை மனம் மகிழ்ந்தார். தொண்டைமானும், ஔவைக்குத் தன் நாட்டைச் சுற்றிக் காண்பிக்க விரும்பினான்…. செல்லும் வழியில், ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற தொண்டைமான்…, அந்த ஆயுதங்களின் கூர்மைத் திறனையும், பாய்ந்து வீசினால் பறக்கும் திறனையும்…, குத்திக் கிழித்தால், உயிரை எடுக்கும் திறனையும் விவரித்துக் கொண்டே வந்தான். ஔவையார், ‘மகனே, நான் இப்போதான், அதியமானின் தகடூரிலிருந்து வருகிறேன். அவனுடைய நாட்டில், ஆயுதங்கள் அனைத்தும், தினசரி போராட்டத்தில் அடிபட்டு, கூர் மழுங்கியும், பிடி உடைந்தும், வளைந்தும், நெளிந்தும், காயலான் கடையில் சுளுக்கு எடுக்க கிடக்கிறது… போர் வீரர்களோ, தினமும் யுத்தத்தில் போரிட்டு, போரிட்டு, போரே தினசரிப் பயிற்சியாகவும், மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள்…. ஆனால், நீ பாதுகாக்கும் ஆயுதங்களோ, படைக்களத்தையே பார்த்தறியாமல், பளபளப்பாகவும், எந்தப் போரிலும் ஈடுபடாத கூர் மழுங்காத கத்தியாகவும் இருக்கிறது. இதை உபயோகிக்கும் படைவீரர்களுக்கு, போர்ப்பயிற்சியே அறியாதவராய் இருக்கின்றனர்…..’ என்று கூறி, மன்னனின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடிக்குச் சொன்னார்…. இவ்வளவு சொன்னால் போதாதா… தொண்டைமான் புரிந்து கொண்டான்… அதியமானின் படைவீரர்கள், பலம் மிகுந்தவர்களும், பயிற்சி உடையவர்களுமாக இருக்கிறார்கள். நம் படைவீரர்களோ…, பலம் மிகுந்தவர்களாக இருந்தாலும்…, போர்ப்பயிற்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தபோதே…, அவ்வை சொன்னார், ‘மன்னா, இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் உங்கள் நாட்டில், விவசாயத்தை மேம்படுத்துங்கள். மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள்… அண்டை நாடுகளோடு நட்போடு பழகுங்கள்… இரு நாடுகளுக்கிடையில், நல்ல முறையில் வாணிபத்தை பெருக்குங்கள்… இந்த ஆலோசனையை, அடியேனின் வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றதும், தொண்டைமான், அவ்வையின் கையைப் பற்றிக் கொண்டு, ‘என் அறிவுக் கண்ணைத் திறந்த என் தமிழ்க்கடவுளே, உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்வேன். உங்கள் வழிகாட்டுதலின் படி, நாட்டை வளப்படுத்துவேன்’ என்று சொல்லி, போரை நிறுத்தினான், கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பெண்களால் முடியும் மேகலா…. தேசப்பற்று…, நாட்டு மக்களின் மீது அக்கறை இருந்தால் போதும்…. நல்லவர்கள் சமாதானம் பேச மட்டுமா செய்வார்கள்… முடிந்தால், போர்க்களம் இறங்கி, சண்டையும் போடுவார்கள்… இயல்பாகவே, பெண்கள் தாய்மைக்குணம் கொண்டவர்கள்… அதிலும், ஔவைக்கு தேசப்பற்றும் சேர்ந்ததால், நாடு வளம் பெற எது தேவையோ…, அதை முனைந்து செய்கிறார்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1