பெண்களால் முடியும் - பாகம் 10
மேகலா : சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது என்பது, பொறுப்பு வாய்ந்த ஒரு வேலை. அதுவும் எந்த நேரத்திலும், குற்றம் செய்தவர்களைக் கையாளும் திறமையும், பலமும் கொண்டவர்கள் பணி புரியும் வேலையல்லவா… அதான் கொஞ்சம் அதிசயமாகப் பேசி விட்டேன். நீ சொன்ன பிறகுதான்…, போர்ப்பயிற்சி எடுக்கும் வீர பெண்மணிகள், திருவிளையாடல் புராண காலத்திலிருந்தே, நம்ம நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது….
கிருஷ்ணர் : நம்ம நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே, தன் நாட்டைக் காக்க போராடும் பெண்கள் இருப்பாங்கல்ல….
மேகலா : கட்டாயம் இருப்பாங்க கிருஷ்ணா…. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த பெண்கள்…, தங்களின் வீரத்தை, நேர்மையை காட்டும் துறை ஒன்று பாரத நாட்டில் இருக்கிறது கிருஷ்ணா…. அதுதான் காவல் துறை. இந்த காவல் துறையில், நேர்மையான பெண் போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தாலும், அரசாங்கத்தாலும், மக்களாலும் பெருமையுடன் பார்க்கப்பட்டவர் தான் கிரண் பேடி I. P. S. அவர்கள். அவர் வேலை செய்யும் இடங்களில், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்பவர் யாராக இருந்தாலும்…, அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட, துணிந்து action எடுப்பார்… அதனால், பலருடைய விமர்சனங்களுக்கு ஆளானாலும் கூட, மக்களால் விரும்பப்பட்டார். இவருடைய நேர்மையைப் பாராட்டி, அரசாங்கம் அவரை ‘கவர்னராக’ promote பண்ணி கௌரவித்தது… இன்று மகளிர்களுக்கான பிரச்னைகளை அணுகுவதற்கு, தனி மகளிர் காவல் நிலையம் அமைத்து, அதில், கான்ஸ்டபிளிலிருந்து, இன்ஸ்பெக்டர் வரைக்கும், பெண் போலீஸை அமைத்து அரசாங்கம், பெண்களுக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்புக் கொடுக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பெண்கள் விமானம் ஓட்டலாம்…, விண்வெளியில் பறக்கலாம்… சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதா…. நாடாளும் தகுதியும், திறமையும் கொண்ட பெண்கள்… பெண்களால் முடியும் மேகலா….
மேகலா : நாடாளும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்று இந்த உலகம் பல முறை பார்த்திருந்தாலும் கிருஷ்ணா…, பாண்டிய நாட்டின் பெண்ணரசி, தடாதகைப் பிராட்டியார் நல்லாட்சி கொடுத்திருக்கிறார் என்று ஞாபகப்படுத்தி…, உலகம் பிறந்த காலம் தொட்டு…, இன்றும், ஆணும், பெண்ணும் இங்கு சரி சமமே என்று பரம்பொருளான நீ சொல்லும் போது, எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நாடாளும் திறமை மட்டுமல்ல மேகலா…, புராணங்களைப் புரட்டிப் பார்…. போர் புரியும் காலங்களில், ‘சத்யபாமா’ எனக்குத் தேரோட்டியிருக்கிறார்… உனக்கு ஒண்ணு தெரியுமா… சத்யபாமா நல்லா தேர் ஓட்டுவாங்க… நரகாசுரனை வதம் செய்வதற்காக போர் மூண்டது….
மேகலா : ஸ்டாப்…, ஸ்டாப், கிருஷ்ணா…. தயவுசெய்து, இந்தப் போரின் பின்னணியைச் சொல்லு கிருஷ்ணா… இந்த நரகாசுரன் யார்…
கிருஷ்ணர் : இந்தக் கதை உனக்குத் தெரிந்தால் நீயே சொல்லேன்….
மேகலா : கிருஷ்ணா…, நீ சொல்லி விட்டால், அதற்கு மறு வார்த்தை கிடையாது. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன், ‘வராக அவதாரம்’ எடுத்த போது, அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் ‘நரகாசுரன்’…. அவன், தவம் செய்து, தன் தாயின் மூலம் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் பெற்றான்… எந்தத் தாயும், தன் மகனைத் தானே கொல்லும் பாதகத்தைச் செய்ய மாட்டாள் என்பது அவன் கணிப்பு… வராகப் பெருமான், கிருஷ்ண அவதாரத்தில், பூமாதேவியை, சத்யபாமாவாகப் பிறக்க வைத்தார். நரகாசுரனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவனை சம்ஹாரம் பண்ண வேண்டிய நேரம் வந்தது…. நரகாசுரன் தன் மகன் என்பதை மறந்திருந்த சத்யபாமா தேரோட்ட, ஸ்ரீகிருஷ்ணர் போர்க்களத்தில், நரகாசுரனிடம் போரிட்டார். அப்போது, நரகாசுரன் எய்த ஒரு பாணம் ஸ்ரீகிருஷ்ணரைத் தாக்கி, அவரை மயக்கமடையச் செய்தது. வெகுண்டெழுந்த சத்யபாமா, மற்றொரு பாணத்தை ஏவி, நரகாசுரனை வதம் செய்தார். நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்தான், மக்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எப்பேர்ப்பட்ட தருணம்…. போர்க்களத்தில் தடுமாறும் நேரம் கூட, பெண்களால் விரைந்து செயல்பட்டு, எதிரியையே பந்தாட முடியும்… கடவுள் அவதாரத்தின் நோக்கமே…, பெண்களால், அரசியல், வீரம், புத்திகூர்மை, கருணை என்ற எல்லா வித சாதுர்யங்களையும் கையாள முடியும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் நடக்கிறது. மனுஷங்கதான் ஆண், பெண்ணென்று பிரித்துப் பார்க்கிறாங்க…. பெண்களால் முடியும் மேகலா….
மேகலா : எனக்கு என்ன சொல்லன்னே தெரியல கிருஷ்ணா…. ஸ்ரீகிருஷ்ணரே, போர்க்களத்தில் தடுமாறினாரா…. அவருக்குத் தேரோட்டும் பேற்றினை சத்யபாமா பெற்றாரா…. ஸ்ரீகிருஷ்ணர், மயக்கமடைந்த போது, சத்யபாமா போரை நடத்தி வெற்றியும் பெற்றார் என்று எண்ணும் போது…, எனக்கு இன்னொரு காட்சியும் நினைவுக்கு வருகிறது கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுக்கு உதவ, தசரதர் போர் புரிகிறார்…. அவருக்குத் தேரோட்டும் வேலையைச் செய்தது…, அவர் மனதுக்குப் பிடித்த மனைவி கைகேயி… அதைத்தானே சொல்ல வந்தாய்….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இந்தப் போரிலும், தசரதர், சற்றே மயக்கமடைய, கைகேயி, தேரைச் செலுத்திக் கொண்டே, போரையும் வெற்றிகரமாக நடத்தினார். அதனால்தான் தசரதர், கைகேயி வேண்டும் வரத்தை கேட்கச் சொன்னார். கைகேயியும், தான் விரும்பும் நேரத்தில் வரத்தினைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதால், ‘ராமாயணமே’ நடந்தேறியது…. நரகாசுரனை அழித்து, சத்யபாமா உலகத்திற்கு நன்மையைச் செய்தார். கைகேயி கேட்ட வரத்தால், ஸ்ரீராமர் காட்டுக்குச் சென்று, இராவண வதம் நடந்தேறியது… பெண்களால், ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நமது புராணங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment