பெண்களால் முடியும் - பாகம் 8

மேகலா : கிருஷ்ணா…, அன்றாட வாழ்க்கையில், வாழ்வதே பெரும் சாதனையாகிப் போன பெண்களைத்தானே பார்த்திருக்கிறோம்…. சாதனை படைப்பதற்கே பிறந்த பெண்களைத் தெரியுமா… எத்தனையோ பெண்கள்…, தன் கைப்பக்குவத்தால், பலருடைய வயிறையும், மனசையும் குளிரச் செய்திருக்கிறார்கள். அன்னபூரணியாக அமுது படைத்து, பலருடைய பசியை ஆற்றியிருக்கிறார்கள். சொல்லப் போனால்…, சோறு படைப்பது என்பது பெண்களின் கடமையும்கூட… இப்படிப்பட்ட அன்னபூரணிகள் மத்தியில், ஒரு அன்னையின் கைப்பக்குவத்தில் மனம் மகிழ்ந்து இறையனாரே இறங்கி வந்த கதை தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ யாரைச் சொல்லுகிறாய்…, சபரியா…, என் அன்னை யசோதையா… இறையனார் இறங்கி வந்த கதை என்றால்…, ஓ…, வந்திக்கிழவியைச் சொல்லுகிறாயா….. ஸ்.., ஸ்…, ஆமாம்…, ஆமாம்…. நைவேத்யமாக…, உதிர்ந்த பிட்டுக்களை படைத்ததினால், இறையனாருக்கு பிட்டின் சுவை பிடித்து விட்டது போலும். அன்னையின் கைமணம் என்றால் சும்மாவா…. வந்தியைத் தேடி இறையனார் ஏன் வந்தார்…, எப்படி வந்தார் என்ற கதையைச் சொல்லேன்….

மேகலா : கிருஷ்ணா…, மாணிக்கவாசகருக்காக இறையனார் செய்த லீலைகள் ஒண்ணா, ரெண்டா… நரியை பரியாக்கினார்…, மீண்டும் பரியை நரியாக்க…, மாணிக்கவாசகருக்கு பிரச்னை வெடித்தது. பிரச்னையை ஆரம்பித்தவர் தானே முடித்தும் வைக்க வேண்டும். இறங்கி வந்தவர் சும்மா வரவில்லை. வைகையை பெருக்கெடுக்கச் செய்து, மதுரை மாநகரை வெள்ளத்தில் மூழ்கடித்து, அரசனை திக்குமுக்காடச் செய்தார். அவசர கால நடவடிக்கையாக, வீட்டுக்கு ஓர் ஆள், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரையடைத்து, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டான். இதுதான் சரியான நேரம் என்று காத்திருந்த இறையனார், இடுப்பில் வேட்டியை இழுத்துச் சுருட்டி, மடித்து சொருகி, தலையில் சும்மாடு கட்டி, கூடையும், மண்வெட்டியும் கையுமாக, கூலிக்கு ஆள் கொள்வாருண்டோ’ என்று கூவிக் கொண்டே, மன்மதனை நிகர்த்த எழிலுடன், மதுரை வீதியில், வந்தி வசிக்கும் பகுதிக்கு வந்தார்….. வந்தி, பிழைப்புக்காக பிட்டு விற்றுப் பிழைக்கும் ஏழைக்கிழவி. பிள்ளைப்பேறு இல்லாத வந்திக்கிழவி, சிறந்த சிவபக்தை… வயிற்றுப் பிழைப்புக்காக பிட்டு விற்று வாழ்ந்ததாலும்…, நிறைந்த மனதுடனும்…, பசித்து வந்தோருக்கு பசியாற்றுவதற்காகவும், தன்னுடைய தொழிலை தெய்வமாகவும் நினைத்து…, தினந்தோறும் பிட்டு அவிக்கும் போது உதிர்ந்த பிட்டுக்களை சொக்கருக்குப் படைத்து விட்டே, தன் தொழிலை ஆரம்பிப்பாள். அதில் ருசி கண்ட இறையனார், பிள்ளைப்பேறு இல்லாத வந்திக்கிழவிக்கு, அரசன் ஆணைப்படி அருள் பாலிக்கும் முகமாக, வைகைக் கரையை அடைக்க மகன் இல்லையே என்ற பரிவும், பிட்டின் ருசியும் சேர்ந்து அவரை வந்தியின் கூலியாளாகவே வரச் செய்தது.

கிருஷ்ணர் : வாவ்….! வந்தியின் கைப்பக்குவமா…, அவளின் மனப்பக்குவமா…, அது இறையனாருக்குத் தான் தெரியும்….

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கரையடைத்தாரா….

மேகலா : கிருஷ்ணா…., வந்தது பரம்பொருள் சிவபெருமானாக அல்ல…, போக்குக் காட்டி விளையாட்டு காட்டும் இளவட்ட மனுசனாக சிவபெருமான்….

கிருஷ்ணர் : ஓ…., ஓஹ்ஹோ…

மேகலா : வந்தி இருக்கும் பகுதிக்கு இறையனார் வந்து சேர்ந்தவுடன், மறுபடியும் வந்தியை உற்றுப் பார்த்துக் கொண்டே, ‘கூலிக்கு ஆள் கொள்வாருண்டோ’ என்று கேட்கிறார்.

வந்தி : அப்பா…, கடவுள் மாதிரி வந்து சேர்ந்தாய்… எனக்காக கரையடைக்க எனக்கு மகன் என்று யாரும் கிடையாது. எனக்காக ஒதுக்கப்பட்ட கரையை அடைக்க…, மகனே, நீ உதவி செய்வாயா… என்று பாவமாகக் கேட்க,

இறையனார் : ம்…, ம்…, கரையடைக்கத்தான் வந்தோம்… மகனே என்றும் கூறி விட்டாய்… உனக்காக நான் கரையை அடைக்கிறேன்… சரி…, அதற்காக கூலி எனக்கு என்ன தருவாய்… கூலியில்லாமல் நான் யாருக்கும் வேலை செய்து தருவது கிடையாது…, எனக்கு என்ன தருவாய் என்று பரபரப்பாய் கேட்டார்…

வந்தி : என்னிடம் என்ன இருக்கிறது, மகனே…. தினமும் பிட்டு விற்றுப் பிழைப்பு நடத்துகிறேன். வேண்டுமானால், சொக்கருக்குப் படைப்பதற்காக உதிர்ந்த பிட்டு வைத்திருக்கிறேன்.., அதில் கொஞ்சம் தரட்டுமா…, என்று கேட்க,

இறையனார் : சொக்கருக்குப் படைக்கவா…, அதான் நான் வந்து விட்டேனே… எனக்கும் ரொம்பப் பசிக்கிறது…, உதிர்ந்த பிட்டுக்களை எனக்குக் கொடு.., என்கிறார்.

வந்தி : அந்த சொக்கர் தான் உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார். சொக்கருக்காக வைத்திருக்கும் பிட்டில் உனக்கும் தருகிறேன்.., சாப்பிடையா.., என்று பரிவுடன் பிட்டை பரிமாறுகிறாள். பசியுடன் வந்தேன் என்று சொல்லி, அரக்கப் பரக்க பிட்டை உண்டு…, கரையடைக்கச் செல்லுகிறேன் என்று வைகைக் கரைக்கு வருகிறார்…. அங்கு வெள்ளம் கரை புரண்டு, ஊருக்குள் வந்து விடுகிறேன் என்பது போல, நுரை கட்டி பொங்கி வருகிறது… அவரவருடைய பங்கை அடைத்துக் கொண்டிருக்க, வந்தியின் பங்கு மட்டும், கரையடைக்க ஆள் வராமையால், அங்கு மட்டும் வெள்ளம் பொத்துக் கொண்டு பொங்குகிறது… கண்காணிப்பாளர், ‘வந்தியின் பகுதிக்கு யார் கரையடைப்பது’ என்று கேட்க, கூலியாளாக வந்த இறையனார்.., ‘இதோ வந்தேன்’ என்று கூறிக் கொண்டே, நதிக்கரைக்கு வந்தார்…. கண்காணிப்பாளர், இறையனாரின் பேரழகைப் பார்த்து, ‘ஏனப்பா, நீ வேலையைச் சரியாகச் செய்வாயா…’ என்று சந்தேகத்துடன் கேட்க, ‘என்ன அப்படிச் சொல்லிட்டீங்க…, இதோ…, இப்ப என் வேலையைக் காட்டுகிறேன்…, பாருங்க..’ என்று கரையடைப்பார் போல், கூடையில் கொஞ்சம் மண்ணை அள்ளி, கரையில் போடுவார் போல போட, கால் தடுக்கி தண்ணீருக்குள் விழ, வெள்ளத்தை எதிர்த்து நீந்தி விளையாடுவார்… கண்காணிப்பாளர் சப்தம் போட்டால், கரையேறி வந்து, அடிபட்டவர் போல நடிப்பார்.. ‘பசிக்கிறதே’ என்று சொல்லி, பிட்டை அள்ளி உண்பார்… கொஞ்ச நேரம் போக்குக் காட்டி, அலுப்பானது போல, மர நிழலில் படுத்துத் தூங்குவார்…. பார்த்தார், கண்காணிப்பாளர்… கரையடைக்காமல் போக்குக் காட்டிய கூலியாளைப் பார்த்து, ‘இது ஒண்ணும் ஆவறதில்ல…, மன்னனிடம் சொல்லாமல் விட்டால், நாமல்லவா மன்னனின் கோபத்திற்கு ஆளாவோம்’ என்று பதறிப் போய், மன்னனிடம் போட்டுக் கொடுக்கச் சென்றார். அதே சமயம், மன்னனும், அதிரடி நடவடிக்கையாக, கரையடைக்கப்பட்டதா என்று நேரில் பார்த்து அறிய, நதிக்கரையின் பக்கம் வரும் போது, கண்காணிப்பாளர், வந்தியின் கூலியாளை, வேலை செய்யாமல், மர நிழலில் இளைப்பாறுவதைப் போட்டுக் கொடுத்தார்… மன்னனுக்கு, பிரச்னையின் வீரியம் அழுத்த, கடும் கோபம் கொண்டான். தன் கைப்பிரம்பால், கூலியாளின் முதுகில் ஒரு மொத்து மொத்தினான். அவ்வளவுதான்… இறையனார் மீது பட்ட அடி, மன்னன் மீதும், கண்காணிப்பாளர் மீதும், அங்குள்ளோர் அத்தனை பேர் மீதும் பட்டது….

கிருஷ்ணர் : ஆமாம்…, அனைத்து ஜீவராசிகளினுள்ளும் பரமாத்மா குடியிருக்கிறார் அல்லவா… அதனால் தான், அவர் மீது பட்ட அடி, சகல ஜீவராசிகள் மீதும் பட்டது…

மேகலா : அங்கிருந்தோர் அனைவரும் திகைத்துப் போக, கூடை மண்ணை, கரையடைப்பில் போட்டு மறைந்தார் கூலியாள்… கரை அடைக்கப்பட்டது…, வெள்ளம் வடிந்தது…. அத்தோடு, பசிக்கு பிட்டு கொடுத்து பசியாற்றிய வந்தியையும், தன்னோடு அழைத்துச் சென்று விட்டார், கூலியாளாகிய இறையனார்.

கிருஷ்ணர் : ஆஹா… அன்பிருந்தால், இறைவனுக்கும் பசியாற்ற முடியும்… அதுவும் பெண்களால் முடியும் மேகலா… சாதனை செய்வதற்கென்றே பிறந்த பெண்கள் என்று சொன்னாயே… ‘வந்தி’ பிறப்பெடுத்ததே…, சொக்கரை பூஜிப்பதற்காகத்தான் என்று வாழ்ந்தவள்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2