பெண்களால் முடியும் - பாகம் 13

மேகலா : மறக்க முடியுமா கிருஷ்ணா…. சபை நிறைந்த பெரியோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், கௌரவர்களின் அழைப்பை ஏற்று தர்மபுத்திரன் சூது ஆடினான். சூது ஆடத் தெரிந்தாலும் பரவாயில்லை… ஆடத் தெரியாதவர்கள், சூது ஆடுவதன் மீது விருப்பம் கொள்ளலாமா கிருஷ்ணா…. பீஷ்மர், துரோணர், கிருபர் என்று தர்மம் தெரிந்தவர்கள் சொல்லச் சொல்ல கேளாமல் சூது ஆடினான்… சும்மா ஆடினாலும் பரவாயில்லை…. கழுத்தில் போட்டிருக்கும் மணிமாலை, ஆடு, மாடு, வீடு என்று எல்லாச் செல்வங்களையும் பணயமாக வைத்து ஆடி, இழந்தான்… நாடிழந்தான்…, தன் மதி இழந்தான்…, கௌரவம் இழந்தான்… இது போதாதென்று, தம்பிகளை பணயமாக வைத்து இழந்து, பின்பு தன்னையும் வைத்திழந்தான்… இதெல்லாம் போகட்டும்… ’உன் மனைவியைப் பணயமாக வைத்து ஜெயித்து விட்டால்…, இழந்த அனைத்தையும் பெற்று விடலாம்’ என்று துரியோதனாதிகள் ஆசை வார்த்தை சொல்ல…, தன் மனைவியையும் பணயமாக வைத்து…, இழந்தான். இங்குதான் தர்மத்திலும் முடிச்சு விழுந்தது…, சட்டத்திலும் சிக்கல் வந்தது… ‘அடிமையாகிய திரௌபதியை சபைக்கு அழைத்து வாருங்கள்’ என்று துரியோதனன் கட்டளையிட்டான்… திரௌபதி காரணம் கேட்க, அழைக்க வந்தவன், ‘தர்மபுத்திரர் சூதாடி, வீட்டையிழந்து, நாட்டையிழந்து…, தன்னையும் இழந்தார். இறுதியில், உங்களையும் வைத்து இழந்தார். சபை முன்னே உங்களை அழைத்து வரச் சொல்லி, அரசர் கட்டளை’. திரௌபதிக்கு நிலைமை புரிந்தது. சற்று நிதானமாகி, காவலனிடம், ‘மன்னன், என்னை இழந்த பின் தன்னை இழந்தாரா…, தன்னை இழந்த பின் என்னை பணயம் வைத்தாரா’ என்று கேட்க…, காவலன், சூதாட்ட நிலவரத்தை எடுத்துச் சொன்னான். அதற்குள், துச்சாசனன், ஆக்ரோஷமாகவும், நக்கலாகவும், சிரித்துக் கொண்டே வந்து, மாத விலக்காய் இருந்த பாஞ்சாலியை, கதறக் கதற கூந்தலைப் பற்றி இழுத்துச் சென்றான். இந்தக் காட்சியைக் கண்ட தர்மம் தெரிந்தவர்கள், தலை கவிழ்ந்து, ஏதும் பேசாமல் செய்வதறியாது மௌனம் காத்தனர். பாண்டவர்களோ…, தலை கவிழ்ந்து என்ன செய்வதென்றே வழி தெரியாமல், கூனிக் குறுகி அமர்ந்திருந்தனர். கௌரவர்களோ, பாஞ்சாலியின் மேலாடையைப் பற்றி இழுக்கப் போகும் ஆவலில், ஜெயித்து விட்ட மமதையில், கொக்கரித்து மகிழ்ந்தனர். சபைக்கு இழுத்து வரப்பட்ட திரௌபதியோ, மன்னனாகிய திருதராஷ்டிரனிடம், ’தர்மம் நிறைந்த சபையில், பெரியோர்கள் இருக்கும் சபையில், இப்படியொரு சூதாட்டத்தை…, முறையற்ற செயலை எப்படி அனுமதிக்கலாம்’ என்று கேட்கிறாள். அதற்கு, ‘தர்மபுத்திரன் விருப்பப்பட்டே சூது விளையாடினான். சூதில் தோற்றதினால், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தருமன் நினைக்கவில்லை’… தருமன், தன்னை இழந்த பின், பிறரைப் பணயம் வைக்கும் தகுதியை இழக்கிறான்’ என்றாள். ‘எந்த நிலையிலும், கணவனுக்குக் கட்டுப்பட்டவள் தான் மனைவி’ என்று பீஷ்மர் எடுத்துரைத்தார். என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும்…, திரௌபதியின் கோபமும்…, கட்டுக்கடங்காமல் போனது. ’சூதாட்டத்தை, சபையில் நடத்தியதே தவறு. அதிலும், தன் செல்வம், நாடு, மக்கள் என்று அனைத்தையும் பணயம் வைத்தது, அதை விடத் தவறு… இந்த முறையற்ற செயலை, தர்மம் தெரிந்த பெரியோர்களால் தடுக்க முடியால், சட்டச் சிக்கலைக் கூட விலக்க முடியாமல் தலை குனிந்து நின்றது, அதை விடத் தவறு’…. திரௌபதி கொந்தளித்தாள். எத்தனை கோபம் இருந்தாலும், என்ன செய்து விட முடியும். அதன் பின் நடந்த கொடுமைகளை, ஸ்ரீகிருஷ்ணர் தான் சரி செய்து, மானம் காத்தார்…. மேலே சொன்ன காட்சியில், பீஷ்மரால் தெளிவாக சொல்ல முடியாமல், துரோணாச்சாரியாரால் விளக்க முடியாத, திருதராஷ்டிரனால் புரிந்து கொள்ள முடியாத சட்டச் சிக்கலை, தர்மத்தின் முடிச்சை…, திரௌபதி கேட்கிறாள். நீதிமன்றம், தர்மத்தையும், நீதியையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மகாசபை, இங்கு அடிமையாக்கப்பட்ட நிலையில் கூட, சற்றும் பயமின்றி, ‘ஒரு மனிதன், தன்னை இழந்த பின், அடிமையான பின், யாரையும் பணயமாக வைத்து விளையாட உரிமை கிடையாது’ என்று ரொம்பத் தெளிவாகக் கேட்கிறாள். இதில் எனக்கு ஒன்று புரியவில்லை கிருஷ்ணா… பீஷ்மர் உட்பட, பாண்டவர்கள், கௌரவர்கள் எல்லோருக்கும், ‘பெண்’ என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்… நாமேதான் எந்த செயலையும் முடிவு செய்யலாம் என்றார்கள் போல…..

கிருஷ்ணர் : தெளிவாய் கேட்பதற்கு, ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும். ஆனால், திரௌபதிக்கு அப்படிப்பட்ட சூழ்நிலையெல்லாம் கிடையாது. பெருத்த அவமானத்துக்கிடையில், தர்மம் தெரிந்த பெரியோர்களின் வெளிப்படையான ஆதரவு இல்லாத சூழ்நிலையில், தன் கணவனைக் காப்பாற்ற வேண்டிய ஒரு emotional சூழலும் கிடையாது…. பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட ஒரு பெண்…, சட்டம் தடுமாறியதைப் புரிந்து கொண்டு, சட்டென்று வாதிடுகிறாள்… புத்திக் கூர்மையில், பெண்கள், ஆண்களை மிஞ்சியவர்களே என்று திரௌபதி நிரூபித்திருக்கிறாள்…. பெண்களால் எந்த சூழ்நிலையிலும் வென்று ஜெயிக்க முடியும் மேகலா….

மேகலா : வாதாடும் நிலையில் இருந்தால், பின்னிப் பெடலெடுக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறோம் கிருஷ்ணா…. தீர்ப்பு வழங்கி, நீதிக்கே பெருமையைக் கொடுத்த ஒரு நீதிபதி…, அதிலும் அவர்கள் ஒரு பெண்ணாக சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு எழுதிய பின், எழுதிய பேனாவைக் குத்தி எழுந்த போது, துர்க்கையம்மனே, சூலத்தைத் தூக்கிப் பிடித்து, பூமியில் குத்தி நட்டியது போல இருந்தது கிருஷ்ணா…. உலகமே பாராட்டியது…. நல்லோர்கள் எல்லாம், ‘நல்லது நடந்தது’ என்று வாழ்த்தினார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இத்தனை பிரமிப்பாய் பேசுகிறாய். எந்த வழக்கு…, என்ன case…, யார் அந்தக் குற்றவாளி….?

(தொடரும்)

(அடுத்த பதிவுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1