உள்ளத்தனையது உயர்வு - பாகம் 3
கிருஷ்ணர் : மகாபாரதம், நான்கு வேதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது வேதமாகக் கருதப்படுகிறது மேகலா… அதற்கு, இப்படிப்பட்ட கதைகளும் ஒரு காரணம் தான். இதையெல்லாம் எடுத்துச் சொன்ன மகரிஷி வியாசரும் முக்கியமான காரணமாகிறார்…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படைத்ததனால், வால்மீகியும், வியாசரும், தர்மங்களையு, வேதத்தையும் அறிந்து கொள்ளும் அறிவையும், நமக்கு சுலபமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… கண்ணதாசன் சொன்னது போல…, ‘படைப்பதனாலேயே நான் பேரிறைவன்’ என்பதனால், வால்மீகியும், வியாசரும் எங்களுக்கெல்லாம் பேரிறைவன் தான்… ’ஒருவனுக்கு ஒருத்தி’, ’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’…, அறிவு, திறமை, முயற்சி இவை மட்டுமில்லாமல் தெய்வத்தின் அருளும் மனிதனுக்கு மிக அவசியம் என்ற அடிப்படை நீதிகளை, இந்த இதிகாசத்தைப் படிப்பவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மைகள். இப்படி உயர்ந்த கதைகளின் மூலம், நம்மை சீர்படுத்தும் கதையை சொல்லுபவர்களின், மக்கள் மீதான அக்கறை…, அவர்களை தெய்வத்திற்கு நிகராக பார்க்கச் சொல்லுகிறது… மகரிஷிகளின் உள்ளத்தின் மேன்மை, இதிகாசங்களின்…, காப்பியங்களின் மேன்மையாகிறது… நம்முடைய கலாச்சாரத்தின் மேன்மையாகிறது. எனக்கு இந்த காப்பியங்களால், கங்கையைப் பற்றி அறிய முடிகிறது… இமயமலை அடிவாரங்களைச் சுற்றி வர முடிகிறது… கந்தனின் பிறப்பை அறிய முடிகிறது… ஆதி, அந்தம் இல்லாத பரம்பொருளை அறிய முடிகிறது… பரமசிவனின் கருணையைத் தெரிந்து கொள்ள முடிகிறது… இன்னும் நிறைய… பாரத தேசத்தின் செழிப்பான பிரதேசங்களையும்…, நதிகளின் சலசலப்பையும்…, நமது முன்னோர்களின் அரசியல் நீதியையும், அஸ்திரத் திறமைகளையும்…, உலகின் நாகரீகத்தின் முன்னோடிகளான நம் முன்னோர்களின் வாழ்வு முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது… படிக்கும் என்னையையே உயர்த்திக் கொள்ள…, வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல, நம் பாரதத்தின் பெருமை, நம்முடைய புராணங்களாலும், வேதங்களாலும், இதிகாசங்களாலும் உயர்வு பெறுகிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நிச்சயமாக… மகாபாரதத்தையும், இராமாயணத்தையும்…, நிறைய தடவை படித்திருக்கிறாய் என்று நல்லாவே புரிகிறது. புராணங்களைப் படைத்தவர்களின் உள்ளம் எவ்வளவு உயர்ந்தது என்று, இதிகாசங்களால் நமக்குக் கிடைத்த திருப்தி…, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உயர்வான எண்ணங்களினால், நாம் தெரிந்து கொள்கிறோம்… உயர்வாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்… ராஜதர்மம், வாழ்க்கை தர்மம், நீதிமுறைகள் என்று மனிதனை மேம்படுத்தும் சிந்தனைகளைச் சொல்லும் போது, வாசிப்பவர்களையும் உயர்வு படுத்தும் என்று தெளிவாகத் தெரிகிறது… இது இருக்கட்டும்…, நம்மோடு வாழ்பவர்களில் உயர்ந்த உள்ளம் கொண்டவர்களை எப்படி நீ அடையாளம் தெரிந்து கொள்வாய். சிலர், இனிக்க இனிக்க பேசுவார்கள். உடனே நீ நம்பி விடுவாயா…
மேகலா : ஒருவருக்கொருவர் நம்பிக்கை என்பதே, ஒருவரிடம் மற்றவர், இனிமையாக, நட்பாக, அனுசரணையாகப் பேசுவதனால் தானே ஏற்படுகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ சொல்வது என்னவோ உண்மைதான். சிறு வயதில், கல்லூரியில் படிக்கும் போது, சக மனிதர்களோடு பழக அவசியம் ஏற்படும் போது, நட்போடு பேசுபவர்கள் மேல் நம்பிக்கை வைத்தால்தான், அவர்களிடம் நட்பு கொள்ள முடியும்… நான் கேட்பது இது இல்லை… நண்பனாக இருந்தாலும் சரி, office-ல் வேலை பார்க்கும் colleague…, அண்டை வீட்டார், அக்கம் பக்கத்துள்ளோர், சொந்தக்காரர்கள்…, யாராக இருந்தாலும், அவரவர்கள் பேசுவதை அப்படியே நம்பிருவியா….
மேகலா : அதெப்படி கிருஷ்ணா…. எப்படி நம்புவேன்….
கிருஷ்ணர் : இதுதான் point… இவர்களில் உண்மையானவர்கள்…, உயர்ந்தவர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பாய்…
மேகலா : அது ரொம்ப easy கிருஷ்ணா… சிலர் பேசும் முறையே…, நமக்கு அவர்களுடன் பேசப் பிடிக்காது…
கிருஷ்ணர் : முறைனா….?
மேகலா : சிலர், சாதாரணமாக விஷயங்களைப் பேச மாட்டார்கள்… ஒரு செய்தியை சொல்லுவதற்கே…, உதாரணமாக, நம் சொந்தங்களில் ஒருவர், love marriage பண்ணிக் கொண்டார்கள் என்றால்…, அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அதையே, ரகசியமாக…, ஏதோ, உலக மகா குற்றம் மாதிரி பேசுவார்கள். எனக்கு அப்படிப் பேசினால், பேசுபவர்கள் மீது நம்பிக்கை வராது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்…?
மேகலா : பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் முன்பே, தானே தன் துணையைத் தேடிக் கொள்வது…, குடும்பங்களில் சலசலப்பு உண்டாக்கத்தான் செய்யும்…. சம்பந்தப்பட்டவர்கள், பெற்றோர்கள் முடிவெடுக்கட்டும் என்று, சுற்றியிருப்பவர்கள், அவர்களை வாழ்த்த தயாராக வேண்டும். அதை விடுத்து…, கூடிக் கூடி புறணி பேசுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெற்றோர்கள், பிள்ளைகள் விருப்பப்படி முடிவெடுக்கும் போது, புறணி பேசியவர்கள்…, எப்படி மனசார வாழ்த்துவார்கள்….
கிருஷ்ணர் : So, புறம் பேசுபவர்களுக்கு…, எதையும். பெரிய பிரச்னையாக, பூதாகரமாகப் பார்ப்பவர்களுக்கு…, உயர்ந்த உள்ளம் கிடையாது என்பது உன்னுடைய முடிவு… அப்படித்தானே….
மேகலா : கிட்டத்தட்ட அப்படித்தான கிருஷ்ணா… இதில் நிறைய விஷ்யம் இருக்கு கிருஷ்ணா… முதலில் நம்ம பிரச்னை இல்லாததை.., அல்லது அடுத்தவர்கள் பிரச்னையை பெரும் குற்றமாகப் பார்ப்பது… இரண்டாவது, சட்டென்று யாரையும் குற்றவாளியாக்குவது…. மூன்றாவது, நம் வீட்டிலும் இது மாதிரி நடந்தால்…, என்பது பற்றி யோசிக்காமல் பேசுவது… இதையெல்லாம் யோசிச்சுதான், நான் இப்படிப் பேசுபவர்களிடம் நம்பிக்கை கிடையாது என்று சொன்னேன்….
கிருஷ்ணர் : நீ சொல்லுவதும் point-தான்…. சரி, வேற route என்ன…, சொல்லு…
(தொடரும்)
Comments
Post a Comment