உள்ளத்தனையது உயர்வு - பாகம் 8
மேகலா : நாங்க பேசும் தமிழை இவ்வளவு சரளமாகப் பேசுகிறாய் கிருஷ்ணா… சரி…, பெரிய பெரிய புராணங்களிலும், கதைகளிலும் நாம் படித்திருக்கிறோம்…, கேட்டிருக்கிறோம்…, கொடுமை செய்யும் அசுரர்களும், ராட்சசர்களும் கொடுந்தொழில் புரிய நினைத்து…, எதிரியை வெல்வதற்கான ஆயுதங்களை…, கடவுளிடமிருந்தே கேட்டுப் பெறுகிறார்களே… அவர்கள் கேட்ட வரத்தை, கடவுளும் கொடுக்கிறார். அது ஏன் கிருஷ்ணா… நாம் செய்யும் நற்செயல்… bank deposit… அதில் சேரும் வட்டி என்பது கடவுள் அளிக்கும் வரம் என்றாயே…, அதனால் கேட்டேன்…
கிருஷ்ணர் : சரி…, நீ யாரை மனதில் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்… அதைச் சொல்… நான் பதில் சொல்லுகிறேன்…
மேகலா : எல்லா அசுரர்களும் தான் கிருஷ்ணா… ராவணனிலிருந்து…, எத்தனை பேர், இந்த மாதிரி வரம் வாங்கியவர்களாக இருக்கிறார்கள்… மகாபாரதத்தில் அர்ஜுனன், பரமசிவனாரை நோக்கி தவம் செய்து பெற்றது ‘பாசுபதா அஸ்திரம்’ என்று பலமுறை படித்து படித்து மெய் சிலிர்த்திருக்கிறேன்… அதே மகாபாரதத்தில், துரியோதனின் சகோதரி துச்சலையினுடைய கணவன் ஜயத்ரதன், திரௌபதியிடம், வனவாசத்தின் போது, தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான்… இதனால் கோபமுற்ற பாண்டவர்கள், அவனை விரட்டி விடுகிறார்கள். இதனால் கோபமுற்ற ஜயத்ரதன், பரமசிவனை நோக்கி தவமிருக்கிறான். அவரும், அவன் தவத்தை மெச்சி, ‘என்ன வேண்டுகிறாய்’ என்று கேட்கிறார். அவனோ, ‘நான் பாண்டவர்களை போரில் வெல்ல வேண்டும்’ என்று கேட்கிறான். இறையனாரும், ‘பாண்டவர்களை ஒரு நாள் நீ போரில் வெல்வாய்’ என்று வரமளிக்கிறார்…. எப்படி…, எப்படி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்ன எப்படி…? மகாபாரதத்தில், ஜயத்ரதன், ஜெயித்து வெற்றி சூடினானா…, பாண்டவர்கள் வீழ்ந்தார்களா… ‘தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்…, மறுபடியும் தர்மம் வெல்லும்’ என்ற slogan-ஐ, நீ படிக்கவில்லையா… ராவணன் முதற்கொண்டு, உலகில் முதன் முதலில் தோன்றிய அசுரர்கள்…, இன்று நடமாடும் அசுரர்கள் வரை, இறைவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாலோ…, தவம் செய்து வேண்டினாலோ…, இறைவன் கொடுக்கத்தான் செய்வார்…. மனிதனால் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று கேட்க மறந்த ராவணனை, மனிதனாகப் பிறந்து வந்து, வதம் செய்யவில்லையா… இரண்யகசிபு, இன்னும் ஒரு படி மேலே போய், ’மனிதனும் அல்லாமல், விலங்காயும் இல்லாமல் இருப்பவன் பிறந்தால்…, அப்போ பார்த்துக்கலாம் என்னுடைய மரணம் நிகழ்வதை’ என்று சொன்ன ஒரு சொல்லுக்காக, இறைவன், சிங்க முகம் தாங்கி, உக்கிரத்தின் முழு வடிவமாய், ‘நரசிம்மமாய்’ தோன்றி, தன் விரல் நகங்களாலேயே இரண்யகசிபுவை கிழித்து எறியவில்லையா…. ஒன்று நன்றாகப் புரிந்து கொள்… கடவுளையே மடக்குகிறோம் என்று நினைத்து, ஏடாகூடமாய் மனிதன் வரம் கேட்டாலும், கடவுள், அவன் வழியாகவே சென்று, அவனை அழிக்க முடிவெடுப்பதுதான், காலம் காலமாய் நாம் காணும் உண்மை…. உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் சரி, சாதாரண எளிய குலத்தில் பிறந்தாலும் சரி, மனிதன் பிறருக்கு என்ன செய்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் கடவுளின் வரம் இருக்கும்…. இது மாறாத சத்தியம்… சரி…, நீ சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்கிறேன்… ஜயத்ரதன், தான் போரில் வெல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு இறையனார் என்ன சொன்னார்…. ‘முயற்சி செய்…, ஒரு நாள் பாண்டவர்களை போரில் வெல்வாய்’ என்று சொன்னார். அவன் கேட்டதும், ‘இந்தா பிடி வெற்றியை’ என்று தூக்கிக் கொடுக்கவில்லையே… அதுவும் தவிர, ஒரே ஒரு நாள் பாண்டவர்களை வென்ற நிலையில் தான், அவனுக்கு ‘ஆப்பு’ வைத்தார் இறையனார்… ஜயத்ரதன், அபிமன்யுவைக் கொல்ல வேண்டும்…, அர்ஜுனன் உக்கிரமாக வேண்டும்…, கிருஷ்ணர் யோசனை சொல்ல வேண்டும்…, அர்ஜுனன், ஜயத்ரதனின் தலையை அறுத்துத் தள்ள வேண்டும்…, என்பதுதான் கடவுளின் முடிவு…. பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, இறைவனிடம் முறையிட்டால்…, இறைவன் தவத்தை மெச்சுவாரா… வலை வீசியவன் வலையிலேயே மாட்டச் செய்து விடுவார்…., ஜாக்கிரதை… உலக மக்கள் அனைவருக்கும் இதே கதிதான்… அநியாயம் செய்ய நினைப்பவர்கள்…, இன்று ஜெயிக்கலாம்… அதே படுகுழியில் அவர்களும் விழத் தயாராகித்தான் திட்டமே போடுகிறார்கள்…, இது உண்மை… பாண்டவர்களைப் போரில் வெல்வதற்கே இறைவனிடம் மன்றாடும் நிலையில் இருக்கிறது இவன் லட்சணம்… இதையெல்லாம் அறியாதவரா கடவுள்… உண்மையான பக்தியும், நேர்மையும் இல்லாதவர்கள், இறைவனை ‘காகா’ பிடிக்க நினைத்தால், நினைத்த காரியம் சுலபமாக முடிந்து விடும் என்று நினைக்கிறார்கள். இவர்களெல்லாம் காரியம் நிறைவேறிய அடுத்த கணமே, கடவுள் தலையிலேயே கை வைக்க தயங்க மாட்டார்கள்… பஸ்மாசுரன் கதை உனக்குத் தெரியும் அல்லவா… பிறகு எப்படி இந்தக் கேள்வியைக் கேட்டாய்….
மேகலா : பஸ்மாசுரன் கதை தெரியும் கிருஷ்ணா… அதைச் சொல்லட்டா….
(தொடரும்)
Comments
Post a Comment