உள்ளத்தனையது உயர்வு - பாகம் 10

மேகலா : ஓ…! வாவ்…! நீ சொல்லும் போது….., நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நமக்கான சவுகரியங்கள் அனைத்தும் நாம் நன்றாக, வளமாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் என்று புரியும் போது, நம் முன்னோர்களைக் கும்பிடத் தோணுது கிருஷ்ணா…. அப்படிப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் செய்த பிழை கூட, நமக்கான எச்சரிக்கைதானே….

கிருஷ்ணர் : கண்டிப்பாக…. சட்டத்தை நம்ம இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளலாம் என்று ஒருவன் செயல்பட்டால், அந்தச் செயலே…, அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது… இது பின்னாடி வருபவர்களுக்கு ஒரு பாடமாகிறது… ‘பாமா விஜயம்’ படத்தின் கருத்தாக, T. S. பாலையா என்ன சொல்கிறார்….

மேகலா : நான் சொல்கிறேன் கிருஷ்ணா… ’இந்த உலகம், ஒரு விசித்திரமான பள்ளிக்கூடம். பாடம் நடத்தி விட்டு, பரீட்சை வைப்பதில்லை. பரீட்சை வைத்து விட்டு…, அதிலிருந்து பாடம் கற்றுக் கொடுக்கிறது…’ என்று…..

கிருஷ்ணர் : அதேதான்… உயர்வோ…, தாழ்வோ…, மனிதன் எப்படி இருக்கணும்…, எப்படி இருக்கக் கூடாது…, என்பதற்கு பல உதாரணங்களை, நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்… அதையெல்லாம், மனிதன் தன் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்… என்னைக் கேட்டால், இதுவே சிறந்த கல்வி என்று கூட சொல்லுவேன்….

மேகலா : கிருஷ்ணா…., எனக்கு ஒரு சந்தேகம்….

கிருஷ்ணர் : இவ்வளவு விளக்கம் சொன்ன பிறகும் சந்தேகமா…. கேள்…

மேகலா : ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ – என்று சொல்றாங்களே. மேன்மக்கள்னு சொல்லி, அது ஏன் ‘கெட்டாலும்’ என்ற வார்த்தை….

கிருஷ்ணர் : நான் நினைச்சேன்…, இப்படித்தான் கேட்கப் போகிறாய் என்று… ‘கெட்டாலும்’ என்றால், மனசால கெட்டுப் போனவர்கள் இல்லை. வாழ்க்கையில் முன்னேற முடியாமல்…, அதாவது, ஏழையாய் போனாலும், உள்ளத்தால் உயர்ந்தவர்கள், மேன்மக்களே என்று சொல்கிறார்கள்… நல்ல குடியில் பிறந்த ஒருவர்…, நல்ல கல்வி கற்றவர், வறுமையில் வாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… இனிமையாகப் பேசுவதற்கும், பிறருக்கு உதவுவதற்கும், அனுசரணையாக இருப்பதற்கும்…, ஏழையாய் இருப்பது, என்ன தடையாக இருக்க முடியும்… நாம் முதலில் என்ன சொன்னோம்… பக்கத்து வீட்டுப் பையனுக்கு, கணக்குப் பாடம் புரியவில்லையென்றால், கால நேரம் பார்க்காமல் கற்றுக் கொடுப்பதற்கும்…, வயது முதிர்ந்தோர்க்கு முடியாத சமயத்தில் உதவி செய்வதற்கும் மனம் கொண்டவர்களைப் பார்த்துச் சொன்ன பழமொழி இது…. இன்னும் ஒரு உதாரணம் சொல்லுகிறேன்… தவமிருந்து தான் பெற்ற பிள்ளை…, விபத்தில் மாட்டி, மூளைச்சாவு அடைகிறான்… அவன் உறுப்புக்களை, தேவைப்பட்டோருக்கு தானமளித்து, அவர்கள் மூலம் தன் பிள்ளையை, வேறு ஒருவர் உருவத்தில் மறுபடியும் பார்க்கும் பெற்றோர்கள், மனிதர்களில் தெய்வமாகிறார்கள்… இதையெல்லாம் வைத்துத்தான், ‘கெட்டாலும், மேன்மக்கள் மேன்மக்களே’ என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்… இதையே, உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், criminal வேலை செய்தால்…, நீ என்ன செய்வாய்…?

மேகலா : நல்லா திட்டுவேன் கிருஷ்ணா… உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்ன செய்தாலும், நம்மால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அவர்களுக்கு பாவமே கிடையாது என்பதெல்லாம் நான் நினைப்பதில்லை கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சரி…, அவர்களை எப்படியெல்லாம் திட்டுவாய்….

மேகலா : ஐயோ… அதையெல்லாம் உன்னிடம் எப்படி சொல்லுவது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பரவாயில்லை…, சொல்லு….

மேகலா கட்டையில போறவன்… அவன நிக்க வச்சி சுடணும்… திஹார் ஜெயில்ல அடச்சி நல்லா கும்மணும்… சோறு தண்ணியே குடுக்கக் கூடாது… இப்படிப் போகும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உன்னை மாதிரி எத்தனை பேர் அவங்கள திட்டுவாங்க… அவங்களோட உள்ளத்தின் உயர்வினை, உங்களின் reaction-ஏ காட்டி விட்டது பார்….

மேகலா : இப்போ புரியுது கிருஷ்ணா… உள்ளத்தால் உயர்ந்தவர்கள், ‘கெட்டாலும், மேன்மக்கள் மேன்மக்களே’. உள்ளத்தால் criminal-ஆக இருப்பவர்கள், சிறந்த பதவி வகித்தாலும், எல்லோராலும் வெறுக்கப்படுபவர்களே….

கிருஷ்ணர் : உள்ளத்தால் உயர்ந்து நிற்பது என்பது, மிகப் பெரிய சமாச்சாரம்… பணம் உள்ளவர்கள் மட்டும் தான் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் என்பதில்லை… ராமருக்கு அணில் உதவியது மாதிரி உதவலாம்…. தானமும், தர்மமும், பிறத்தியார் மீது உள்ள அக்கறையினால் வருகிறதா… அன்னதானம் செய்தால்…, பெரும் புண்ணியம்… இரத்த தானம் செய்தால், எல்லோரும் நம்மைப் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து செய்கிறார்களே… இவை, உயர்ந்த உள்ளம் என்ற கணக்கில் வராது… ஒன்றை எதிர்பார்த்து….. at least, பாவம், புண்ணியம் என்றாவது யோசித்து செய்வது…. உயர்ந்த உள்ளத்தின் வெளிப்பாடு என்று சொல்ல முடியாது… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…, ஒரு அம்மா, குழந்தை விழுவதற்கு முன்னமேயே ஓடிப் போய் பிடிக்கிறாளே…, அது அக்கறை… இந்த உலகத்தின் மீது, நாட்டின் மீது, இயற்கைச் செல்வங்கள் மீது…, வருங்கால சந்ததியினர் மீது…, உற்றவர், சுற்றத்தார், அவர்கள் மீது அக்கறை வைத்து…, எதுவெல்லாம் மக்களுக்குத் தேவைப்படுகிறதோ…, மனித வாழ்க்கைக்கு அவசியமோ…, அதன் மீது அக்கறை கொண்டு, உலகத்தார்க்கு கிடைக்க வழி செய்பவர், நல்ல பாதையை ஏற்படுத்தி, வழிநடத்திச் செல்லுபவர்…, வள்ளுவர் மாதிரி ‘நச்’சுன்னு குறள் சொல்லி, மனிதனை நேர்மையாய் வாழ வைப்பவர்கள்…. இவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்… அதை விடுத்து, குழந்தையாய் இருக்கும் போதே, ‘அம்மாவுக்கு இதை வாங்கி வாப்பா…, நான் உனக்குப் பிடித்த chicken செய்து தருகிறேன்’ என்று பேரம் பேசி, பிள்ளைகளை, ஒரு வேலையைச் செய்யச் செய்தால், கைம்மாறாக எனக்கு ஒன்று வேண்டும் என்ற எதிர்பார்ப்பை சிறு வயதிலேயே வளர்ப்பதாகி விடும்… பிள்ளைகளுக்கு இயல்பாகவே, உதவும் குணம் என்பது குறைகிறதோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1