உள்ளத்தனையது உயர்வு - பாகம் 9
மேகலா : பஸ்மாசுரன் கதை தெரியும் கிருஷ்ணா… அதைச் சொல்லட்டா….
கிருஷ்ணர் : எனக்கு கதை தெரியும்… வேண்டாம் என்று சொன்னால் விடவா போகிறாய்… சொல்லு… சொல்லு….
மேகலா : யப்பாடா… எங்க நீ வேண்டாம் என்று சொல்லி விடுவாயோ என்று நினைத்தேன் கிருஷ்ணா…. பஸ்மாசுரன் என்று ஒரு அசுரன். அவனுக்கு திடீரென்று, தான் சர்வ வல்லமை படைத்தவன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது… வல்லமை படைத்தவனாக வேண்டும் என்று நினைத்தால், எல்லோரும் புகழும்படியாக உயர்ந்து நிற்க வேண்டும்… மக்களைப் பாதுகாக்க வேண்டும்… நல்லாட்சி புரிய வேண்டும்…. எதிரிகளிடம் விழிப்பாக இருக்க வேண்டும்…. இது நேர்மையான வழி… ஆனால், ‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது நிதர்சனமான உண்மை… பஸ்மாசுரனுக்கு, தான் யார் மீது கை வைக்கிறானோ…, அவர்கள் எரிந்து சாம்பலாகி விட வேண்டும்… என்று புது மாதிரி ஒரு யோசனை வருகிறது. அப்படி நடந்து விட்டால்…, தான் தான் உலகில் சர்வ வல்லமை படைத்தவன் ஆகி விடுவோம் என்று தப்புக்கணக்கு போடுகிறான்… ஆனாலும், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குறுக்குவழி போவதற்கும் வழி தெரிய வேண்டுமே… அதனால், இந்த வல்லமையைத் தர வல்லவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தான்… சர்வ வல்லமை படைத்த ’இறை சக்தியே’…, இந்த வரத்தைத் தர வல்லவர் என்று அறிந்து கொண்டான். உடனே இறைவனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான்… இறைவனுக்குத் தெரியாதா…, இவன் உயரம் என்னவென்று…. இருந்தாலும், அவன் கையாலேயே, அவன் விதியை முடிக்கத் தீர்மானித்து, பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கத் தயாரானார். பஸ்மாசுரனின் தவத்தை மெச்சிய இறைவன்…., ‘உன் தவத்தை மெச்சினேன் பஸ்மாசுரா… உனக்கு என்ன வேண்டும்…, கேள்…, தருகிறேன்’ என்றார்…. அதற்கு பஸ்மாசுரனும்…, அக்கிரமமாக சிரித்துக் கொண்டே…, ‘நான் யார் தலையில் கை வைக்கிறேனோ…, அவன் அழிய வேண்டும்…, தருவீரா…’ என்று கேட்க…, இறைவனும், ‘இதோ தந்தேன்…’ என்று சொல்லி முடிக்கவில்லை… அதற்குள் எட்டிக் குதித்து…, இறையனார் தலையிலேயே கை வைக்கத் துணிந்தான்… இதையெல்லாம் அறியாதவரா கடவுள்… மாயமாய் மறைந்து போனார்… ‘உலகிலுள்ள…., இண்டு, இடுக்கு கூட விட மாட்டேன். உம்மைத் தேடிக் கண்டு பிடித்து, உம் தலையில் கை வைத்து…, நானே இறைவனாவேன்’ என்று புறப்பட்டான் பஸ்மாசுரன்…. அவனுடைய பலவீனம்…. அழகிய பெண்களைக் கண்டால், பல்லிளிப்பான்… அசுரன், இறைவனைத் தேடி அலைகையில், அழகிய மோகினி நிகர்த்த அழகியை எதிரில் கண்டு, மயங்கிப் போனான்… நாம் காதலில் மயங்குவது போலவே, மோகினியும் நம் மீது மயங்குவாள் என்று நினைத்து, விகாரமாய் சிரித்துக் கொண்டே, மோகினியின் அருகில் வந்த அசுரனின் நோக்கம் அறிந்து கொண்ட மோகினியும், கண்ணால் அளவெடுத்துக் கொண்டே, அசுரனைப் பார்த்துச் சிரித்தாள். அவனும் சிரித்தான்… அவள், இடையை அசைத்தாள்… அவனும் தன் பெருத்த வயிறை அசைத்தான்…. அவளோ, விரல்களால் அபிநயம் பிடித்து, கால்களைச் சுழற்றி நடனம் ஆடினாள்… மோகினியின் அபிநயத்தைப் பார்த்து, அவனும் கையை அசைத்தான்… மோகினி, காற்றினில் ஆடும் பம்பரமாய் ஆடி, கைகளால் ஜாலம் காட்டினாள்… தன்னை மறந்த அசுரனும், கைகளால் வித்தை காட்டினான். இதுதான் சமயம் என்று நினைத்த மோகினி, தன் கைகளால், தன் தலையைத் தொட்டு நடனம் ஆடினாள்…. இதைப் பார்த்த அசுரனும், தன் கைகளால் அபிநயம் பிடித்து, தன் தலையில் தானே கை வைக்க…, தன் தலை வெடித்துச் சிதறி அழிந்து போனான்…
நாம் எது நினைக்கிறோமோ, அதுவே நமக்கு வந்து சேரும்… நல்லதை நினைத்தால்…, நமக்கு உயர்வு கிடைக்கும். கெட்டது நினைத்தால்…, கேடு விளையும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத உண்மை…. ஆம்…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்…, பிறருக்குத் துன்பம் தருவதை நினைக்கக் கூட மாட்டார்கள்… கெடுவான், கேடு ஒன்றை மட்டுமே சிந்திப்பான்…
மேகலா : என்ன கிருஷ்ணா…. ‘உயர்ந்த உள்ளம்’ கொண்டவர்களைப் பற்றிப் பேசுகிறோம் என்று தலைப்பு கொடுத்து விட்டு, இப்போ, அசுரர்களைப் பற்றிப் பேசுகிறோமே….
கிருஷ்ணர் : கெட்ட எண்ணம் கொண்டவர்களைப் பற்றிப் பேசினால்தானே…, ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம் புரியும்… நாம் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவாவது, மனுஷன் கெட்டதை நினைக்காமல் இருப்பானல்லவா…. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்… பிறத்தியாருக்கு உபகாரம் (help) செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை…. யாருக்கும், உபத்திரவம் (disturbance) கொடுக்காமலாவது மனிதன் இருக்கணுமல்லவா… அதைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்த உலகம் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
ஆதி மனிதன், இயற்கையை அனுசரித்து வாழக் கற்றுக் கொடுத்தான்…, நாம் கற்றுக் கொண்டோம்…. வாழ்க்கையை சுலபமாக வாழ, புதிய புதிய கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்கள் கண்டு பிடித்தனர். அடுத்து வந்தவன், வாழ்க்கையை சுலபமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழத் தெரிந்து கொண்டான்… ஒருவருடைய உழைப்பு…, இன்னொருவருக்கு பலனாகிறது. ஒருவருடைய முயற்சி…, அதைத் தொடர்ந்தவருக்கு வெற்றியாகிறது… இப்படி ஒருவர் வழித்தடம் அமைக்க, பின்வருபவர் எளிமையான பயணம் மேற்கொள்வதுதான் மனித வாழ்க்கையின் அமைப்பு. இந்த மாதிரியான அமைப்புக்கு உயர்ந்த உள்ளம் வேண்டும் என்று மனிதன் நினைப்பதில்லை. தனக்கு சவுகரியம் என்று நினைத்து, தன் திறமையை உபயோகித்து முயற்சி செய்கிறான். ஆனால், தனக்கு மாத்திரம் என்று சிந்திப்பதில்லை… தனக்கு பயன்படுவதை, பொதுவில் வைக்கிறான். பலரும் பயனடையச் செய்கிறான்… மேன்மை பெறுகிறான். ஒருவனுடைய முயற்சியும், திறமையும், அவனை மேன்மையாக்குகிறது… உலகமே வளம் பெறுகிறது… ஒரு வகையில் பார்த்தால், ஒருவனுடைய கல்வி, திறமை, முயற்சி கூட, உயர்ந்த உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதுதானோ என்று நம்மை பிரமிக்க வைக்கிறது….
(தொடரும்)
Comments
Post a Comment