ஆளுமை - பாகம் 6
மேகலா : நீ சொல்லச் சொல்ல, dominating personalities-ஐ நமக்கு ஏன் ரொம்ப பிடிக்கிறது என்று இப்ப புரியுது. ஆனாலும்…, பலன் எதிர்பாராமலா கடமையைச் செய்கிறார்கள் கிருஷ்ணா…. நம் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்று காத்திருந்து, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கலாமும் எதிர்பார்த்துத்தானே தங்கள் கடமையைச் செய்தார்கள்… அது போல, அண்ணாமலையும், மக்கள் நாட்டின் நிலமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துத்தானே, நியாயமான முறையில் தகவல்களை எடுத்துச் சொல்லுகிறார்…
கிருஷ்ணர் : நீ கொஞ்சம் புத்திசாலின்னு நெனச்சேன்… உன் மேதாவித்தனத்தை காட்டிட்டயா… பலன் என்பது, அவரவர் சொந்த விருப்பம் நிறைவேறுவதற்கு என்று நீங்களாக நினைத்தால்…, எத்தனை முறை கீதையை எடுத்துச் சொன்னாலும், உனக்கு விளங்காது… தான் முன் நின்று நடத்தும் கடமையின் பலனை ஆளுமையாளர்கள் சாதிப்பார்கள்…, தன் குடும்பம் பலன் பெற அல்ல…. இதுதானே காலங்காலமாய் ‘கீதை’ விளக்குவது….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி, போகட்டும்… ஒரு பலனை, தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அடைய வேண்டும் என்பதற்காக, ஒருவன் தகுந்த நடவடிக்கையை எடுக்கிறான் என்றால்தான், அவன் ஆளுமையுடைய தலைவன் ஆகிறான். இப்படி ஒரு ஆளுமையோடு இருந்ததால் தான் மக்கள் திலகம் M. G. R., இன்னும் எல்லோராலும் போற்றப்படக் கூடியவராகிறார்…
மேகலா : கிருஷ்ணா…, நான் ஒரு காட்சியைச் சொல்லட்டுமா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : யாரு…., M. G. R-ஐப் பற்றியா… Yes…, start…, camera…., action….
மேகலா : ஐயோ…, comedy பண்ணாத கிருஷ்ணா… நான் M. G. R-ஐப் பற்றிப் பேசல…. மகாபாரதத்தில் ஒரு காட்சி… குருக்ஷேத்திரப் போர்க்களம்… ‘பீஷ்மர்’ தலைமைத் தளபதியாக நின்று போர்க்களத்தில், தன் ஆற்றலைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்துப் போரிட வேண்டிய அர்ஜுனன், இளைஞரைப் போல சுழன்று சுழன்று போர் செய்து கொண்டிருக்கும் பீஷ்மரை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறான். இப்படியே போனால், பீஷ்மரை வீழ்த்துவது என்பது முடியாத காரியமாகிப் போகும் என்று கிருஷ்ணருக்குத் தோணுகிறது…. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை உற்சாகப்படுத்துகிறார்… ஒண்ணும் வேலைக்காகவில்லை…. எப்படியாவது, அர்ஜுனனின் ரோஷத்தை சீண்டி வெளிப்படுத்தணும் என்று தீர்மானித்து, ‘அர்ஜுனா, நாளாக, நாளாக, பீஷ்மரின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகிறது… தர்மம் ஜெயிக்க வேண்டும் என்றால், பீஷ்மர் வீழ்த்தப்பட வேண்டும்… ஆயுதத்தை ஏந்துவதில்லை என்று நான் வாக்களித்திருக்கிறேன். தர்மத்தைக் காக்க, என் சத்தியத்தை மீறுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்…’ இவ்வாறு சொல்லி, சக்ராயுதத்தை மனதில் நினைக்கிறார். நினைத்த மாத்திரத்தில், அவருடைய விரல்களில் சக்ராயுதம் தவழ்கிறது… ரதத்தை விட்டிறங்கி, பீஷ்மரை நோக்கிச் செல்கிறார்…. பீஷ்மரும், ‘வா கிருஷ்ணா…, வா… நீ சக்ராயுதம் ஏந்தி என்னை போரில் வீழ்த்துவாயானால், அதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னோடு போரிட்டு, என்னைக் கொன்று விடு கிருஷ்ணா’ – என்று கூறுகிறார். அதற்குள், அர்ஜுனன் ஓடோடி வந்து, கிருஷ்ணரின் கால்களைக் கட்டிக் கொண்டு மன்றாடுகிறான்…. ‘எனக்காக நீங்கள் சத்தியத்தை மீற வேண்டாம். நான் என் தயக்கத்தையும், குழப்பத்தையும் விட்டு விட்டேன்… பீஷ்மரை வீழ்த்துவேன் கிருஷ்ணா…. என் மீது கருணை காட்டுங்கள். உங்கள் சொற்படி நடப்பேன்’ – என்று உறுதி கூறுகிறான்….. இந்தக் காட்சியில், ஒரு சம்பவத்தின் மிகப் பெரிய ஆளுமையாக இருப்பது, போரில் ஆயுதம் ஏந்தாமல் சாரதியாக மட்டும் பங்கெடுப்பேன் என்று வாக்குக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணரின் சத்திய வாக்கு… அப்படிப்பட்ட வாக்கைக் கொடுத்து விட்டு, கிருஷ்ணரின் கோபம்…, இந்த இரண்டையும் பார்த்த இரு பெரும் வீரர்களின் reaction…. ஒருவர், ‘உன் கையால் வீழ்வது என் பாக்கியம்’ என்கிறார். மற்றொருவர், ‘என் தயக்கத்தை விட்டொழித்தேன்’ என்கிறார்….. ‘ஆளுமை’ என்றால் இப்படி இருக்கணும் கிருஷ்ணா… நண்பனுக்கு மட்டுமில்லை… தன்னை அறிந்தவர் எதிர் தரப்பு என்றாலும் கூட, நம்மைப் பின்பற்றச் செய்வதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் ஆளுமை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! எதிர் தரப்பு வீரரைக் கூட, தன்னைப் பின்பற்றச் செய்வதுதான், ஆளுமையாளர்களின் தனித் திறமை என்று சொன்னாயே, அது முற்றிலும் உண்மை… அதை விட, இன்னொரு விஷயம் அறிந்து கொள். நாட்டில் ஒரு சம்பவம் நடந்து விடுகிறது என்று வைத்துக் கொள். அதைப் பற்றின குற்றப் பின்னணி தகவல்களை, ஆளுமையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நாடே அவர்கள் கூற்றைத்தான் உற்றுக் கேட்கும். உதாரணத்திற்கு, நாட்டில் ஒரு பாலியல் வன்மை நடந்து விடுகிறது… அதனால் அந்தப் பெண்ணும் இறந்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமோ, போலீஸோ விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன், மிகச் சிறந்த வல்லவனாக இருக்கும் பட்சத்தில், அந்த சம்பவத்தின் முழுத் தகவலையும், மக்கள் வல்லவன் என்ன சொல்கிறான் என்று மட்டும் தான் உற்றுப் பார்ப்பார்கள். இது இப்படி இருக்க, ஆட்சியாளர்கள் வல்லவர்களாக இருக்கும் பட்சத்தில்…, புல்வாமா தாக்குதல் மாதிரியான சம்பவம் நடக்கும் போது, எதிர்க்கட்சிகள் கூறி வரும் கடுமையான சாடல்களையும், தீவிரவாதத்தை அரங்கேற்றிய பக்கத்து நாட்டு கொக்கரிப்பையும், வல்லவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று உலகமே எதிர்பார்க்கிறது. அவர்களுடைய நடவடிக்கை, ‘இனிமே இப்படி ஒரு தீவிரவாத தாக்குதலை என் நாட்டில் நடத்துவாயா பார்க்கிறேன்’ – என்பது மாதிரி அதிரடியாகத்தான் இருக்கும்… விமர்சனம் பண்ணியவர்களோ, நவ வாயிலையும் பொத்திக் கொண்டுதான் ஓடுவார்கள். இன்றைய காலகட்டத்தில், தினமும் தான் இது மாதிரியான காட்சிகளைப் பார்க்கிறோமே…. ஆனாலும், ஆளுமையுடையவர்கள், அடுத்தடுத்த காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, விமர்சனங்களையும், சாடல்களையும் பொருட்படுத்துவதேயில்லை…
(தொடரும்)
Comments
Post a Comment