பேச்சுத்தமிழ்
மேகலா : கிருஷ்ணா…, நான் வந்துட்டேன்… எங்க இருக்கிற கிருஷ்ணா….
கிருஷ்ணர் : யப்பா…, என்ன சத்தம்… இத்தனை நாளா ஆளையே காணோம்… எங்கோ தலைமறைவாகிட்டயோ…, அப்படீன்னு கூட பயந்துட்டேன்…
மேகலா : நான் ஏன் தலைமறைவாகணும்… யாரையாவது கஷ்டப்படுத்தியிருக்கிறேனா.. தப்புத் தண்டா பண்ணியிருக்கேனா… என் உலகம்…, என் கடவுள்…, என் தர்மம், நியாயம் என்று சூசுவான்னு இருக்கேன்… என்னைப் போயி, தலைமறைவாகியிருப்பேனோ என்று எப்படி நினைத்தாய்…
கிருஷ்ணர் : அது என்ன புது வார்த்தை…, ‘சூசுவான்னு’…
மேகலா : அதுவா…, ‘சிவசிவான்னு’ சொல்வோமில்ல…, அதுதான்…. மருவி, பேச்சுவழக்குல ‘சூசுவான்னு’ வந்திருக்கு…
கிருஷ்ணர் : Oh! இது நல்லா இருக்கே… பேச்சு வழக்குல உள்ள வார்த்தைகளையே எடுத்துப் பேசலாம் போலயே…
மேகலா : பேசலாம் கிருஷ்ணா… ஆனா, அதுக்கு ‘topic’ என்ன சொல்லுவ…
கிருஷ்ணர் : ‘பத்திரமா’…, ‘சூதானமா’… இப்படி வச்சுக்கலாமா….
மேகலா : Great கிருஷ்ணா…. நான் கூட என்ன தலைப்புல பேசலாம்னு ரொம்ப தவிச்சிக்கிட்டு இருந்தேன்… எனக்கு பிடிச்ச மாதிரி topic-ஐயே குடுத்திட்ட கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பேச்சு வழக்குல இருக்கிற பல வார்த்தைகள் கேட்பதற்கு சுவையாகவும் இருக்கிறது… அந்த வட்டார மக்களின் பழக்க வழக்கங்களும் புரிகிறது… ஒரே தமிழ்தானே… ஏன், area-வுக்கு area மாறுபடுகிறது…?
மேகலா : கிருஷ்ணா…, விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள், தங்கள் வேலைக்குத் தகுந்த மாதிரி, வார்த்தைகளைப் போடுகிறார்கள்… வியாபாரிகள், தங்களுக்குத் தகுந்த மாதிரி பேசுகிறார்கள். அப்படிப் பேசும் போது…, அவர்கள் அவசரத்துக்குத் தகுந்த மாதிரி, உச்சரிப்பில் மாற்றம் வருகிறது… வண்டி மாடு கட்டி சந்தைக்குப் போகிறவர்கள், மாட்டுக்கு ‘லாடம்’ கட்டுவார்கள். அதை வைத்து, திருடனுக்கு, ‘நல்லா லாடம் கட்டுனா வழிக்கு வருவான்’ என்ற வார்த்தையை சர்வசாதாரணமாகப் பேசுவார்கள்… அதே போல, விவசாயிகள், ஏர் ஓட்டும் போது, இரண்டு மாட்டுக்கும் நுகத்தடி போட்டு, மூக்கணாங்கயிறு கட்டி ஓட்டுவார்கள். இதை வைத்து, கல்யாணமாகாமல் சுற்றித் திரிபவர்களை, ‘மூக்கணாங்கயிறு போட்டா, எல்லாம் சீராகும்’ என்று சாதாரணமாகப் பேசுவார்கள்… விவசாயி, மரக்கால், படி, ஆழாக்கு என்று தாராளமாய் அளக்கும் போது, வியாபாரி, தராசு, படிக்கல் என்று அளவுகளைக் கூட மாற்றி சிக்கனாக அளப்பார்கள்… இந்த முறையில் அவர்கள் பயன்படுத்தும் சொற்களும், வார்த்தைகளும் அங்கங்கே மாற்றப்பட்டு பேசப்படுகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Oh! Super-ஆ இருக்கே… அப்போ, அவரவர் தொழில்முறையில்தான் பேச்சுவழக்கு மாறுகிறதா…
மேகலா : இப்படியும் ஒரு வகையில் மாறுகிறது என்று சொல்லலாம்…
கிருஷ்ணர் : சரி…, வேற எப்படிலாம் மாறுகிறது….
மேகலா : கிருஷ்ணா…, தமிழ் மொழியை எழுதும் போது…, அதாவது பாடலாகவோ, கவிதையாக…, இலக்கியமாக எழுதும் போது, கட்டாயம் முறைப்படிதான் எழுதுவோம்…. ஆனால், பேசுபவர்கள் எல்லாம் தூய தமிழில் பேசுவதில்லை கிருஷ்ணா… அதிலும், பள்ளிக்கூடமே போகாதவர்களும், தமிழில்தான் பேசுகிறார்கள். அவர்கள், ‘புத்தகத்தை’, ‘புஸ்தகம்’ என்றோ, ‘பொய்த்தம்’ என்றோதான் சொல்லுவார்கள். நாங்களெல்லாம் style-ஆக ‘coffee’ என்று சொல்லுவதை…, ‘காப்பித் தண்ணி’னு சிம்பிளா சொல்லிட்டு போயிட்டே இருப்போம்…. அதிலும், சுக்கு மல்லி காப்பிய ‘சுக்காப்பி’ அப்படீன்னுதான் சொல்லுவோம்….
கிருஷ்ணர் : சுக்காப்பியா… இங்க மல்லிங்கிற சொல்லயே காணோமே…
மேகலா : அதான் பேச்சுத்தமிழின் அழகு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ கூட, ‘போயிட்டே’ இருப்பாங்கன்னயே…, அதுதான் சுருக்குத் தமிழா….
மேகலா : வாவ்! ‘சுருக்குத்தமிழ்’… புதுப்பேரா இருக்கு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இருந்தாலும், ‘பாமரத்தமிழ்’ கேட்கவே, ‘சுக்குமல்லி coffee’ குடிச்சது மாதிரி இதம்மா இருக்கு மேகலா…
மேகலா : நீயென்ன கிருஷ்ணா… இதையெல்லாம், ‘சுக்காப்பி’ லெவலுக்குப் பேசுற… சில பழமொழிகள்…, நீ சொன்ன சுருக்குத்தமிழில், ‘சக்கப் போடு’ போடும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சக்கப்போடா…, என்னென்னவோ சொல்ற… சரி…, அந்தப் பழமொழி என்ன..
மேகலா : ‘நேத்துப் பேஞ்ச மழைல, இன்னைக்கு மொளச்ச காளான்’… நீ எனக்கு சொல்ல வந்துட்டயா… என்று வீரமாகக் கேட்கும் போது சொல்லும் பழமொழி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பார்த்தியா மேகலா… இந்தத் தமிழ் மொழி என்பது, ‘தங்கச் சுரங்கம்’ மாதிரி… அததுக்குத் தேவையான emotion-ல் வார்த்தைகளை அள்ளிக் கொடுக்குது பாரு. அதிலும், இந்தப் பழமொழிய எழுதி வச்சவங்க எப்பேர்ப்பட்ட உலக ஞானம் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள். இயற்கையின் செயல்களைப் பொருத்திப் பொருத்தி, தன்னுடைய பாணியில், தமிழை வளைச்சி, நெளிச்சி அற்புதமாகப் பேசுகிறார்கள் பார்…. பேச்சுத் தமிழையே ரொம்ப இலக்கியமாய்ப் பேசுகிறோமோ…
மேகலா : அப்படித்தான் போல கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment