பேச்சுத்தமிழ் - பாகம் 7
மேகலா : கிருஷ்ணா…, பேச்சுத் தமிழில், ஒரு சொல்லு, situation-க்குத் தகுந்த மாதிரி அர்த்தத்தைக் கொடுக்கும் கிருஷ்ணா… இப்போ, ‘அரம்படாமன்னு’ பார்த்தோமா… ‘அரைவேக்காடு’ – அப்படீன்னு ஒரு சொல்லு… அரைகுறையா அறிவுள்ளவங்களையும் குறிக்கும்… அரைவேக்காடு பண்டங்களையும் குறிக்கும்… அப்பா சொல்லுவாரு…, ‘இந்த காய்கறிய அரைவேக்காடா வேக வச்சா போதும்…, அதுதான் ருசி…’ அப்படீன்னு சொல்லுவாரு… சமயத்துக்குத் தகுந்த மாதிரி, இந்த ‘அரைவேக்காடு’ நல்லதாகவும் கூட அர்த்தப்படுத்தலாம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! ரொம்ப interesting ஆக இருக்கே….
மேகலா : கிருஷ்ணா…, சின்னப்புள்ளைங்க, தன் வயசுக்கு மீறி பேசும் போது…, ‘உழக்கு மாதிரி இருந்துக்கிட்டு, என்ன பேச்சு பேசுது பாரு…’ அப்படீம்பாங்க…
கிருஷ்ணர் : ஏன் ‘நாழி’ மாதிரின்னு சொல்லக் கூடாதா….
மேகலா : அளவைகளில் நாழி பெருசு.., ‘உழக்கு’ சின்னதுல்ல கிருஷ்ணா… அதான் அப்படி சொல்றாங்க… அதே மாதிரி, ஒல்லியா இருக்கவங்கள, ‘ஈர்க்குச்சி’ மாதிரி இருக்கான்னும்…, குண்டா இருக்கவங்கள, ‘கத்தரிக்காய்க்கு கை, காலு முளைச்ச மாதிரி’ இருந்துக்கிட்டு, இந்தப் போடு போடுறா…, அப்படீன்னு, நம்ம வீட்ல இருக்கிற பொருள வச்சே கலாய்ச்சிருவாங்க கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வாவ்…, ஆமாம், ‘ஈர்க்குச்சி’ன்னா என்ன…?
மேகலா : தலையில் இருக்கும் பேன், ஈரு…, உருவும் குச்சி…. அதான் ஈர்க்குச்சி…
கிருஷ்ணர் : வாவ்! எந்தப் பொருளயும் விட்டு வக்கல… வாய்க்கு வந்ததையெல்லாம் இழுத்துப் போட்டு, correct-ஆ…, அதிலும் நகைச்சுவை இழையோட சொல்வதற்கு எங்குதான் படிச்சாங்களோ…
மேகலா : கிருஷ்ணா… நம்ம மக்கள் சும்மாவே ஆடுவாங்க… அதிலும், இப்ப காலில் சலங்கைய வேற கட்டிட்டயா… அவங்க ஆட்டம் வேற level-ஆ இருக்கும்…
கிருஷ்ணர் : இதுவும் நம்ம மக்கள் பேசுறதுதானா….
மேகலா : பின்னே… ரொம்ப அலப்பறைய கூட்டுறவங்கள, எப்படிச் சொல்றதாம்… அதிலும், தான் ரொம்பப் படித்தவர்கள் என்ற நினைப்பு உள்ளவங்களை, அசால்ட்டா, ‘வந்துட்டான்யா, மெத்தப் படிச்ச மேதாவி’, அப்படீன்னு இடக்கா பேசி, டவுசர் கிழிய ‘லந்து’ பண்ணீருவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ‘அசால்ட்டா’, ‘எடக்கு’, ‘டவுசர் கிழிய’, ‘லந்து’ – நீ இப்படிப் பேசுவதில், ‘டாக்டரேட்’டே வங்கீருவ போலயே… ஆமா, ‘எடக்கு’னா என்ன….
மேகலா : ‘நக்கல்’ கிருஷ்ணா… இன்னும் டீப்பா ஓட்டணும்னா, ‘எடக்கு’னு சொல்லலாம்..
கிருஷ்ணர் : தமிழை அழகுபடுத்துவதாக…, தமிழை பிரிச்சி மேஞ்சிருக்கீங்கிறதுதான் உண்மை… ஆனாலும், மனுசனுக்கு, தனக்கு இணக்கமாக…, நெருக்கமாக இருக்கும் ஒரு உறவு அல்லது weapon தமிழ்தான்… அதில், தனக்கு ஏற்படும் சந்தோஷத்தில், அந்த மொழி எப்படியெல்லாம் வளைஞ்சி கொடுத்து, மின்னி ஜொலிக்கிறது பார்….
மேகலா : கிருஷ்ணா…, நீ இதுக்கே இப்படி கூத்தாடுறயே… நான் இப்போ ஒரு பாட்டு சொல்கிறேன் கேள் கிருஷ்ணா… நாட்டுப்புறப் பாடல்களில் ஒரு பகுதி, ‘ஒப்பாரிப்பாட்டு’. இதற்கு பெரிய ராகமோ, வார்த்தையோ தேவையில்லை… அழுதுகொண்டே இழுவைய போடுவார்கள். சம்பந்தப்பட்ட ஆள…, ’நடந்து வரும்போது இப்படி இருப்பியே…’ அப்படீன்னு பாடுவாங்க… இது common ஒப்பாரி… இப்படித்தான் ஒரு துஷ்டி வீட்டுக்கு, இரண்டு பெண்கள் போகிறார்கள்… அவங்க ரெண்டு பேரும், எங்கு போனாலும், போன இடத்தில் என்ன இருக்குன்னு நோட்டம் போடுவாங்க… அவங்க போன அந்த வீட்டுல, ஒரு பெண்மணி பாகற்காய் கொடில பாவக்கா தொங்குறத பாத்துட்டாங்க… அவங்க பாட்டு இப்படித்தான் இருந்தது கிருஷ்ணா…
‘பந்தல்ல பாவக்கா,
பந்தல்ல பாவக்கா…
‘ஐயா நீ போயிட்டியேன்னு’…, இன்னொருத்தி பாடுறா…
‘அதப் போகும் போது
பாத்துக்கலாம்’….,
போகும் போது பாத்துக்கலாம்ன்னு பாடி…, ‘ராசா மாதிரி வருவியேன்னு, மூக்கைச் சிந்தி அழுகிறாங்க… இவங்க பாடுறத கேட்ட வீட்டுக்காரம்மா, உடனே சுதாரிச்சி…,
‘அத விதைக்காக
வச்சிருக்கேன்
விதைக்காக வச்சிருக்கேன்’ – அப்படீன்னு.
‘எலேய்! பாவக் கொடில கைய வச்ச…, பாத்துக்கோ…’ அப்படீன்னு பாட்டாலயே எச்சரிக்கை கொடுக்கிறாங்க…
கிருஷ்ணர் : மேகலா…, நெசம்மா…, ஒப்பாரியக் கூட ரசிச்சி, மகிழ்ச்சியா பாடியிருக்காங்களா… தமிழ், உங்க வாயில தவழுது மேகலா…. ‘எலேய்’னு நீ சொன்னயே…, அந்தச் சொல்லில், என் மனம் கவர்ந்த ஆண்டாளே சொக்கிப் போய், திருப்பாவையில், பாவை நோன்பு நோற்கும் தன் தோழியை…,
‘எல்லே…, இளங்கிளியே’ – என்று அழைக்கும் போது, அந்தச் சொல்லின் சுவையில், நானும் சொக்கிப் போனேன் மேகலா…
மேகலா : சொக்கிப் போனாயா… பேச்சுத் தமிழின் சுகம், அப்படிப்பட்டது கிருஷ்ணா…
(தொடரும்)
Comments
Post a Comment