பேச்சுத்தமிழ் - பாகம் 8

மேகலா : சொக்கிப் போனாயா… பேச்சுத் தமிழின் சுகம் அப்படிப்பட்டது கிருஷ்ணா… நாம, வேற State-க்கோ, வேற Country-க்கோ வேலை நிமித்தமாக போகிறோம் என்று வைத்துக் கொள்… லீவுக்கு ஊருக்குத் திரும்புவோம்ல…, அப்ப, நம்ம அம்மா மடியில படுத்து, அம்மா தலை கோதி தடவுவதற்கு முன்பாக…, ஊரின் எல்லைக்குள் நுழைந்ததுமே, நம்ம பேசும் தமிழைக் கேட்டு, நம்ம மனசு கூத்தாட ஆரம்பிக்கும் கிருஷ்ணா… அதுக்கப்புறம் தான்…, அம்மா மடியில படுக்கிறது…, அம்மா கைச்சோறு…, அப்பா…, உறவு எல்லாம்… ஊருக்குள்ளே நுழைஞ்சவுடனே…, எதிர்ப்பட்டவரிடம், அண்ணே, இங்க ஒரு சோடாக்கடை இருந்துச்சே…, அதக் காணோம்’ என்று கேட்டால், ‘அதுவா தம்பி.., அத செட்டியார் வாங்கி ரொம்ப நாள் ஆச்சே. என்னவோ பெருசா கட்டடம் கட்டப் போறாங்கண்ணு சொன்னாங்க… நீங்க பெரிய வீட்டுத் தம்பிதான… அமெரிக்காவுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க… நல்லா இருக்கீங்களாய்யா’ என்று பதில் வரும்… காதுல, குற்றாலச்சாரல் விழுந்த மாதிரி இருக்கும்… ‘அங்க வெள்ளக்காரப் பொண்ண கல்யாணம் பண்ணீட்டீங்களாமே…’ என்று வெள்ளந்தியா கேக்கும் போது…, ஒரு கல்யாணக் கச்சேரியே நடந்த மாதிரி இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஊருக்குள் நுழைந்ததுமே, வெள்ளக்காரப்பொண்ணுக்கு, வெள்ளந்தியா, ஆரத்தியே எடுத்துட்டார் போ…

மேகலா : இது ஒரு சுகம்… இன்னொண்ணு… ஒவ்வொரு பொருளுக்குத் தகுந்த மாதிரி…, அது விற்கும் பகுதியை, அதன் பெயரிலேயே அழைக்கும் பெருமையும், பேச்சுத் தமிழுக்கு உண்டு. மதுரையில் ஒரு வீதிக்கு, ‘அரிசிக்காரன் தெரு’ என்று பெயர். ‘தவிட்டுச் சந்தை’ என்றும் தவிடு விற்கும் பகுதியைக் குறிப்பிடுவார்கள்… துபாயில், தங்கம் விற்கும் mall-க்கு, ‘Gold souk’ என்று பெயர்… அதையே, இங்கு ஒவ்வொரு ஊரிலும், ‘நகைக் கடை வீதி’ என்று சொல்வார்கள். இன்று பழைய கடை இல்லை என்றாலும், பழங்காலத்தில், ‘நெல்லுக்கடை முக்கு’ என்று குறிப்பிட்ட பேர் ஆகிப் போன corner, இன்றும் ‘நெல்லுக்கடை முக்கு’ன்னுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள். மாரியம்மன் கோவில் தேர் நிற்கும் இடத்தை, ‘தேர்முட்டி’ன்னுதான் இன்னமும் சொல்றாங்க… அங்கு, அன்றாட வேலைக்கு காத்திருக்கும் வேலைக்காரர்கள் உண்டு… பேச்சுவழக்கில், நம்ம வீட்டுல சில வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் போது, ‘தேர்முட்டில போயி, வாடகைக்கு ஆள் பிடிச்சிட்டு வர வேண்டியதுதான’ன்னு, எடக்கா பேசுவாங்க கிருஷ்ணா… அந்தளவுக்கு, ‘தேர்முட்டி’ famous ஆன landmark….

கிருஷ்ணர் : Oh! எப்பவுமே, மனிதன் தன்னைச் சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு, தான் புழங்கும் செயல்களை வைத்தே அழைப்பது பழக்கம் தான்… விமானம் நிற்கும் இடத்தை, ‘விமான நிலையம்’ என்று அழைக்கிறோம்…. ரயில்கள் வந்து போகும் இடத்தை, ‘ரயில் நிலையம்’ என்று சொல்றோமே… அது மாதிரி, மனிதர்கள் தாங்கள் செய்யும் தொழிலை வைத்தே அந்த இடத்தை குறிப்பிடுவது, பழைய காலங்களிலிருந்தே இருப்பதுதானே….

மேகலா : கிருஷ்ணா…, நேத்து, serial-ல ஒரு வசனம் கேட்டேன் கிருஷ்ணா… ‘பேப்பர் திங்காத கழுதையும், பேஸ்ட் திங்காத குழந்தையும், உலகத்துல கிடையவே கிடையாது’ன்னு சொல்றான்…

கிருஷ்ணர் : அவன் எதுக்கு அந்த உதாரணத்தைச் சொல்றான்…

மேகலா : Hero, தண்ணியடிக்க கூப்பிடுறான்.. ‘நீ குடிப்பீல’ – என்றதற்குத்தான், இந்தப் பழமொழி மாதிரி, புதுமொழியச் சொல்றான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எங்கிருந்து இப்படி யோசிக்கிறாங்க… தண்ணியடிப்பது, casual-லான விஷயம்ங்கிற அர்த்தத்தை எவ்வளவு easy-யா, ஆனா strong-ஆ சொல்றான் பாரு… இப்படித்தான் ஒரு காரியத்தை ஆரம்பித்து, அது வளர்ந்த பிறகு destroy பண்ணுவதற்கும் ஒரு பாட்டு….

‘நந்தவனத்திலே ஒரு ஆண்டி

கொஞ்ச நாளாக குயவனை வேண்டி

கொண்டு வந்தாண்டி தோண்டி

அத கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி’

இந்தப் பாட்டுல, நல்லா ஆரம்பிச்ச காரியத்தை கெடுத்தவன பார்த்து, எத்தனை ஆதங்கத்தோடு பாடுறான் பாரு… சில வலிகளை…, சில உணர்வுகளை, நாம் பேசும் இயல்பான தமிழில் பேசும் போது…, அது அத்தனை அழுத்தமாக வருகிறது பார்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… எவ்வளவு பெரிய தத்துவத்தையும், சாதாரண பேச்சுத் தமிழில் பேசும் போது…, அது, கேட்பவருக்கு சுலபமாக, அதே சமயத்தில் அழுத்தமாகவும் புரிந்து விடுகிறது கிருஷ்ணா… ‘அவலை நினைச்சுக்கிட்டு உரலை இடிச்ச கதையா இருக்கு’ – அப்படீன்னு, பெருசா எதிர்பார்த்து, எதையுமே முதல் போட முடியாதவங்களை, சாதாரணமாக ‘பன்ச்’ பண்ணீருவாங்க… அதே மாதிரி, ‘புலியப் பார்த்து பூனை சூடு போட்டதாம்’ – என்று ஒரு திறமையாளனைப் பார்த்து copy அடிச்சா, இப்படித்தான் எடக்கா பேசி மடக்கிருவாங்க. சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுறவங்கள என்ன மாதிரி கலாய்ப்பாங்க தெரியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எப்படி கலாய்ப்பாங்க….

மேகலா : ‘மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டு பேசுறான் பாரு’ – என்று கலாய்க்கும் போதே…, சம்பந்தமில்லாமல் உளறுகிறான் என்று தெரிந்து விடும் கிருஷ்ணா…. இன்னொரு கலாட்டா….

‘உச்சந்தலயில மொளகா வச்ச மாதிரி, எனக்கு சுர்ருனு கோபம் வந்திருச்சி’ – அப்படீன்னு சொல்லும் போது, மொளகாவ கடிச்ச மாதிரி நமக்கும் சுர்ருனு கோபம் வரும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆமாம்ல… கோபம் வராத போதே…, இந்த மந்திரத்தை சொல்லும் போது…, கோபம் சுர்ருனு ஏறுதே… எப்படியெல்லாம் , உணர்வுகளுக்கும், வார்த்தைகளுக்கும் connection குடுக்குறான் பாரு…

மேகலா : இன்னொரு குசும்பு கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5