பேச்சுத்தமிழ் - பாகம் 11

கிருஷ்ணர் : பன்னிரு மாதங்களில், இது (தை மாதம்) பொற்காலம் மேகலா… வாழ்க்கையை நாமும் வாழ்கிறோம்…, என்று ஏதோ போற போக்குல சொல்லிட்டுப் போகல… அத்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவன் கூறிய அர்த்தமுள்ள ஆழமான பழமொழி மேகலா… சாதாரணமான மனுஷன் பேச்சுத் தமிழிலேயே, தர்ம சாஸ்திரமே படைச்சிட்டாங்க…

மேகலா : கிருஷ்ணா…, உன்னிடம் ஒரு ‘மூன்று முடிச்சு’ வசனம் சொல்லணும் கிருஷ்ணா

கிருஷ்ணர் : அதுக்கு எதுக்கு இத்தனை பம்முற….

மேகலா : இல்ல கிருஷ்ணா…, பழமொழி பேசும் போது, புதுமொழி சொல்லலாமா என்று யோசித்தேன்…

கிருஷ்ணர் : என்ன புதுமொழி….

மேகலா : Heroine ரொம்ப கஷ்டப்படுறா… அவ கஷ்டத்தை, hero, friend கிட்ட சொல்றான். சொல்லிட்டு…, ‘இந்தப் பொண்ணு என் கிட்ட, பிரச்னையை சொல்ல மாட்டேங்கிறா…, ஏன்னு தெரியல’ – அப்படீங்கிறான். அதுக்கு அவன் friend சொல்றதுதான் புதுமொழி… ‘கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா, எதன்னு இவ சொல்லுவா- அப்படீன்னு வசனம் வருது கிருஷ்ணா… நான், அலுத்துப் போய் படுத்திருந்தவா…, அசந்து போனேன். உடனே எந்திரிச்சி, உன் கிட்ட சொல்றதுக்காக…, நோட்டுல குறிச்சி வச்சேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன சொன்ன…, ‘கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருந்தா’.., எங்கிருந்து புடிக்கிறாங்க இந்த வசனத்தை… செமையா இருக்கு மேகலா….

மேகலா : நம்ம முன்னோர்களும் இப்படித்தான்…., situation வரும் போது, போகுற போக்குல, அசால்ட்டா சொல்லியிருப்பாங்க போல… வானிலை அறிக்கை இல்லாமலேயே, காலநிலையினை சொல்லி வைப்பதில், நம்ம ஆளுகளுக்கு நிகர் யாருமே கிடையாது கிருஷ்ணா…. ‘ஆனி குமுறினால், அறுபது நாளைக்கு மழையில்லை’ – மழை வறட்சியைக் கூட, நடைமுறையைப் பார்த்து கணித்தவர்கள், வானிலையை, satellite மூலமாகத் தெரிந்து சொல்லும் விஞ்ஞானி கிடையாது கிருஷ்ணா… வானத்து மேகம் அசைவதை, கண்ணுக்கு மேலே விரலை வைத்து, அண்ணாந்து பார்த்த ஒரு சாதாரண விவசாயி, ‘ஆனி குமுறியதா’, ‘வானம் குமுறியதா’ என்று உற்றுப் பார்த்து, பன்ச் டயலாக் சொல்லும் பாமரன்…

கிருஷ்ணர் : ஓ! தன் ஆதங்கத்தை எவ்வளவு அழகாக பதிவு செய்திருக்கிறான்… ஆமாம்…, நம்ம நாட்டு குளிரைப் பற்றி பழமொழி எதுவும் இல்லையா மேகலா…

மேகலா : இருக்கு கிருஷ்ணா… மற்ற மாதத்துக் குளிரை விட, வெய்யில் பிறக்க இருக்கும் மாசி மாதத்துக் குளிரைப் பற்றிய பழமொழியைக் கேள் கிருஷ்ணா… இன்னும் பனி விலகாத காலம் தான் மாசி மாதம்… ‘தைப் பனி தரை குளிரும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும்’ – என்று மாசி மாதத்துலயும் குளிர் இருக்கும் என்று சொல்லியிருக்காங்க கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இப்படி கால நிலைகளைக் கூட, தன்னுடைய பேச்சுவழக்கில் பதிவு செய்து…, அதற்கு பழமொழிகள் என்ற தலைப்பில், ஒரு இலக்கியத்தையே கொடுத்திருக்கிறார்கள்… கில்லாடிகள்தான்…

மேகலா : கிருஷ்ணா…, கால நிலவரங்களை இவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்களே…, இவர்களிடம், ‘’என்னண்ணே, வியாபாரமெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு’ என்று கேட்டால்…, டக்குனு என்ன சொல்வார்கள் தெரியுமா… ‘போயிட்டு இருக்கு.., ஆட்டை தூக்கி மாட்டுல போட்டு.., மாட்டைத் தூக்கி மந்தையில போட்டு’ – என்னவோ சமாளிச்சிக்கிட்டு இருக்கேன்… அப்படீன்னு அலுத்துப் போய் சொன்னாக் கூட, அசால்ட்டா சொல்லுவாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இரு…, இரு…, இதுக்கு என்ன அர்த்தம்….

மேகலா : கைக்கும் வாய்க்கும், இழுத்துக்கோ பறிச்சிக்கோன்னு business செய்பவர், ஆடு வாங்க வச்சிருக்கும் ரூபாயில, மாட்டை வாங்குவாராம்… மாடு வாங்குறவரு மந்தையா வாங்குவாராம்… லாப விகிதம் கம்மியாகும் போது, production-அ கூட்டி, எப்படியோ வருமானத்தைப் பார்ப்பாங்கல்ல…, அந்தக் கதைதான்… ஆட்டைத் தூக்கி மாட்டுல போடுறது… இன்னும் ஒருவர் கருவாடு விற்கும் யோசனையை ஒருவருக்கு சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்… இல்லை, பழைய பேப்பர்…, கழிவுப் பொருளை விற்கும் ஒரு chance கிடைக்கும் போது, கேட்பவர் முகத்தைச் சுழித்தால்…, ‘நாய் வித்த காசு குரைக்காது’ – எதுனாலும் இறங்கி வேலை பார்க்கணும் தம்பி… காசு, துட்டு, money, money… எல்லாம் லட்சுமி கடாட்சம் என்று encourage பண்ணுவார்….

கிருஷ்ணர் : ஆமாம்; நல்ல policy தான். நேர்மையாகச் செய்யும் தொழில் எதுவானாலும், பணம் வருகிறதென்றால், அது லட்சுமி கடாட்சம் தான்… M. G. R. கூட, ‘அன்பே வா’ படத்துல…, புண்ணாக்கு வியாபாரியிடம், ‘நாம என்ன செய்றோங்கிறது முக்கியமில்லை…. நாணயமா நடந்துக்கிறதுதான் முக்கியம்… எந்த வேலையும் இளப்பமில்லை’ என்பார்…

மேகலா : இதை ஒத்துக்கிறீல… M. G. R. உதாராணத்தை நீயே ஞாபகம் வைத்திருக்கிறாயே… இன்னொரு ’சொலவடை’ இருக்கு… அதையும் நீ ஒத்துக்கிட்டே ஆகணும்…

கிருஷ்ணர் : ஒத்துக்கிடுவோம்… நீ என்ன தப்பாவா பேசப் போற….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4