பேச்சுத்தமிழ் - பாகம் 9
மேகலா : இன்னொரு குசும்பு கிருஷ்ணா…. பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருப்பான். வீட்டுல enquiry நடக்கும். கையும் களவுமா பிடிபட்டு, என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிப்பான். அப்போ அம்மா சொல்லுவாங்க, ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு திருதிருன்னு முழிக்கிறான் பாரு’… அப்படீன்னு அடிக்க கைய ஓங்குவாங்க…
கிருஷ்ணர் : அடேங்கப்பா…, எனக்கு எதுவுமே தெரியாதுங்கிற மாதிரி முழிக்கிறதுல, ‘டாக்டரேட்’டே வாங்கிருவோம்ல…
மேகலா : அதான…, நீயும் அப்படித்தானா கிருஷ்ணா… தயிர்ப்பானையை உருட்டி, வெண்ணெய் தாழிய உடைச்சி…, அம்மாகிட்ட பிடிபட்டவுடன், ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு’ முழிச்சிக்கிட்டு நிக்குறுதுல…, கிருஷ்ணனுக்கு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம்… கிருஷ்ணா…,
கிருஷ்ணர் : சரி.., சரி…, அடுத்த point-க்குப் போகலாம்…
மேகலா : இன்னொரு அப்ராணியான கூக்குரல் நீ கேட்டிருக்கயா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதென்ன ‘அப்ராணி’…
மேகலா : குரங்கு மாதிரி சேட்டை பண்ணினா…, ‘பிராணி மாதிரி’… சேட்டை செய்யத் தெரியாம சாதுவா இருப்பவன், ‘அப்ராணி’
கிருஷ்ணர் : Oh! சரி.., சரி…, அப்ராணியின் கூக்குரல் என்ன…
மேகலா : எல்லாத் தப்புக்களையும் யாராவது செய்து, அப்ராணியின் மேல பழிய போட்ருவாங்க… அவன், உடனே…, ‘ஊருக்கு எளச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ன்னு அழுவாத குறையா அலறுவான்…
கிருஷ்ணர் : ஐயோ பாவம்… பிள்ளையார் கோயில்ல அடைக்கலமான ஆண்டி… கிடைச்சத சாப்பிட்டு, கூட்டிப் பெருக்குற வேலை செய்யும் அப்ராணி. எல்லாரும் அவனத்தான் easy-யா வேலை வாங்கவும் செய்வீங்க… அசால்ட்டா பழியவும் போடுவீங்க.
மேகலா : கிருஷ்ணா…, இப்படி ‘அப்ராணியா’வும் இருப்பாங்க… ‘நரிக்கு இடங்கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடும் கேக்குமாம்’-ங்கிற மனுஷங்களும் இருக்காங்கல்ல கிருஷ்ணா… ‘எமகாதகப் பசங்க’…
கிருஷ்ணர் : ம்…, என்ன சொன்ன…
மேகலா : நரிக்கு…
கிருஷ்ணர் : அது இல்ல…
மேகலா : ‘எமகாதகப் பசங்க’-னா…
கிருஷ்ணர் : ஆமாம்…., ஆம்மாம்…, அது என்ன….
மேகலா : ‘எமகாதகன்’…ன்னா…, எழுத்து, எழுத்தா எனக்கு அர்த்தம் சொல்லத் தெரியல. அந்த அளவுக்கு கில்லாடிகளை, விஷமக்காரனை, பலே கெட்டிக்காரனை…, ‘திமிர் பிடிச்சவன்’…, ‘ராங்கியானவன்’…, ‘எமகாதகன்’…, அப்படீன்னு சொல்லலாம்….
கிருஷ்ணர் : யம்மாடியோ… ஒவ்வொரு மனுஷனோட குணநலன்களையும் இப்படி ஓட்றீங்க…
மேகலா : கிருஷ்ணா…, இன்னொரு நக்கல கேளு… ‘இருக்க இடங்கொடுத்தா, படுக்க பாய் கேப்பான்னு’ சொல்லுவாங்க.. இந்தப் பழமொழில…, சிலரைப் பார்த்து, ரொம்பப் பரிதாபப்பட்டு, சாப்பாடு போட்டு, பிழைக்க வழி செஞ்சோம்னா, அவன் என்ன சொல்லுவான் தெரியுமா… ‘சார், எனக்குக் கூலியோட சேத்து, இந்த மூலைல தங்கிக்கிறேன்… சார், கொஞ்சம் சோறு போட்டா போதும்னு ஆரம்பிப்பான்ல…, அப்பத்தான்…, சார் நினைப்பாரு… இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேக்குறானே… ‘தலைவலியோட சேத்து திருகுவலியும் வந்துருமோன்னு’ பயப்பட ஆரம்பிச்சிருவாங்க கிருஷ்ணா…. சிலர் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் செல்லம் கொடுத்தாப் போதும்…, உச்சந்தலையில ஏறி உக்காந்துக்குவாங்க….
கிருஷ்ணர் : அப்போ.., இந்த பழமொழி எப்ப சொல்வாங்க… ‘நரிக்கு இடங்கொடுத்தா, கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்’….
மேகலா : கிருஷ்ணா…, இந்தப் பழமொழி, பெரிய லெவலு criminal-க்கு சொல்லுவது… படுக்க பாய் கேக்குறவன் சாதாரண கூலியாளு… ’இடத்தக் கொடுத்தா மடத்தப் பிடிக்கக் கூட தெரியாத ஆளு’…
கிருஷ்ணர் : இடத்தக் கொடுத்தா மடத்தப் பிடிக்கிறதா…, இது என்ன புதுமொழி…
மேகலா : புதுமொழி இல்ல கிருஷ்ணா… வீட்டுப் பக்கத்துல இருக்கிற மடத்துல படுத்துக்கோன்னு சொல்லி இடம் கொடுத்தா, மடத்தையே தன்னோடதுன்னு எல்லார்ட்டயும் சொல்லிக்கிட்டுத் திரிவான்…
கிருஷ்ணர் : யப்பா…, எல்லா type மக்களையும், வார்த்தையாலேயே அளந்து வச்சிருக்கிறீங்க…
மேகலா : இதென்ன பிரமாதம்… இன்னும் special ஐட்டமெல்லாம் இருக்குல… ரெண்டு பிள்ளைங்க ஒரு வீட்ல இருந்தா.., தன் கையிலிருக்கும் பொருளை, ஒரு பிள்ளை கையில கொடுத்திட்டாங்கன்னு வச்சிக்கோ…, உடனே இன்னொரு ‘வாண்டு’ சொல்லிரும் கிருஷ்ணா… ‘ஒரு கண்ணுல வெண்ணெய், ஒரு கண்ணுல சுண்ணாம்பு’ – உங்களுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காதுன்னு குமுறி குமுறி அழுதுரும்… இந்தச் சேட்டைய நானும் செய்திருக்கிறேன் கிருஷ்ணா… சின்னப்பிள்ளைல, அர்த்தம் தெரியாட்டாலும், பழமொழிய correct-ஆ சொல்லி விடும்…
கிருஷ்ணர் : நீ பேசப் பேச, இந்தப் பழமொழியே, தமிழையும், உளவியலையும் கூட சொல்லிக் கொடுத்து விடும் மேகலா….
மேகலா : நீ சொல்றது ரொம்ப correct கிருஷ்ணா…
(தொடரும்)
Comments
Post a Comment