மேகலா : அப்படி நம்பித்தான் கிருஷ்ணா…, மறுபடியும் மறுபடியும் தப்பு செய்து விட்டு, மறுபடியும் கங்கையில் குளிக்க வருகிறார்கள். ’நீ’ கங்கையைப் பார்த்தாயா கிருஷ்ணா… எங்கள் பாவக் கறைகள் சேர்ந்து dark கலராய் இருக்கிறது… அம்மாவின் ஆதங்கமும் அதுதானே.. ’கங்கையில் குளித்து விட்டோம்…, பாவங்கள் தொலைந்தன; இனி பாவம் செய்யாமல் இருப்போம்’ என்று யாரும் நினைப்பதில்லை… குற்றமும் நடக்கும், கங்கையில் குளியலும் நடக்கும்.. இது எப்படித்தான் தீரும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : மேகலா…., இறையனார் உணர்த்த வருவது இது இல்லை… கங்கையில் குளிப்பதால், பாவம் தொலைந்து விடும் என்பதை நீ நம்ப வேண்டும் என்று…, உனக்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டுகிறார். நீ ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது, என்ன நினைப்பாய்… இந்தக் காரியம் நல்லபடியாய்…, நமக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் சொல்லியபடி செய்து முடிக்க வேண்டும்…, என்று வேண்டிக் கொண்டு…, ‘நம்மால் அது முடியும்’ என்று நம்பிக்கை கொண்டு இறங்குகிறாய். ஒரு பாடத்தைப் படிக்கும் போது, நம் அறிவைத் திறந்து வைத்து, அது நம் மனதில் பதியும் என்று நம்பித்தானே படிக்கிறோம்… ஆறு மாதத்திற்கு முன்புதான் நீ ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்தாய்… உனக்கு ஹிந்தியில் ‘ஆனா, ஆவன்னா’ கூடத் தெரியாது… Teacher-ம் கிடையாது… பிறகு எந்த நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தாய்… இப்பொழுது ஒரு script-ஐ எழுத்து கூட்டி வாசிக்கிறாய்… இது எப்படி சாத்தியம்…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நீ சொல்லும் போதுதான் புரியுது…
கிருஷ்ணர் : எந்த வினைகளுக்கும்…, அது ‘பாவம் தொலைய வேண்டும்’ என்ற முயற்சியில் கூட, ’நம்மால் முடியும்…, முடிய வேண்டும்’ என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்… எந்த முயற்சிக்கும், முதல் தெளிவு, ‘நம்பிக்கை’ மாத்திரமே… இதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு…, தினசரி calendar paper கிழிப்பது போல… என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்பவர்களுக்கு…, ஒவ்வொரு நாளும், தினசரி காலை புலர்வது…, அவர்களால் அந்த நாள் செழிப்பாவதற்காக…
மேகலா : அது என்னவோ உண்மைதான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஆதிசங்கரர், மகாலக்ஷ்மியை நினைத்து ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ சொன்னதாக நீ சொன்னாய். அவர், மகாலக்ஷ்மி, தங்க நெல்லிக்கனியை மழையாய் பொழிவாள் என்று மட்டும் நம்பவில்லை… தன் கண் முன்னே ஒரு ஏழைப் பெண்மணி படும் கஷ்டத்தைப் பார்த்து, அவள் துன்பத்தை துடைக்க வல்லவள், ‘மகாலக்ஷ்மிதாய்’ மட்டும் தான்… அவள் கடைக்கண் பார்வை பார்த்தால், துன்பம் தீரும்’ என்று நம்பி, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுகிறார்…. தன்னலமற்ற இந்த நம்பிக்கையை, அன்னை உடனே ஏற்றுக்கொள்கிறாள். தங்கமழை பொழிந்தது… கடவுளின் விருப்பமும் இதுதான்… ‘தன்னலமற்ற நம்பிக்கை’… ‘தன்னலமற்ற நம்பிக்கை’ என்று எதற்கும் ஒரு value இருக்கிறது…
மேகலா : வாவ்! Super கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…, அடுத்த கதையைச் சொல்லு…
மேகலா : கிருஷ்ணா…, மகாபாரதத்தை வியாசர் எழுதுவதற்கு தீர்மானித்து விட்டார்… அவர் மனதுக்குள், ஒவ்வொரு பாடலாக உருவாகி, தன்னால் பாடல் வேகமாக எழுத முடியாதோ என்ற தயக்கம் எழுகிறது… அவர் மனசுக்கும், தயக்கத்திற்கும் பெரிய போராட்டமே உருவாகிறது… என்ன செய்வது… யாரையாவது, தன் மாணாக்கர்களையாவது வைத்து எழுதச் சொல்லலாமோ என்று யோசித்தார். அவர்கள் சரியான வேகத்தில் எழுதுவார்களா என்ற யோசனையும் ஏற்பட்டது… அதனால், தயக்கமும், குழப்பமும் அவரை வாட்ட…, அங்கு நாரதர் வந்து சேர்ந்தார்… நாரதர், ‘என்ன வியாசரே, ‘மகாபாரதம்’ எழுதப் போவதாகக் கேள்விப்பட்டேன்.. நல்ல விஷயம்னு பாராட்ட வந்தால்…, உங்கள் முகத்தில் குழப்பம் தெரிகிறதே…, என்ன ஆயிற்று முனிவரே’ – என்று கேட்டார். அதற்கு வியாசர், ‘நாரதரே, பாடல்கள் மனதிற்குள், அருவியாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. அதற்கு ஈடாக என்னால் எழுத முடியவில்லை. யாராவது உதவியாளர், பாடல்களை எழுத ஒப்புக் கொண்டால், எனக்கு உதவியாக இருக்கும்’ என்று தன் மனக்கவலையை வெளிப்படுத்தினார்… அதற்கு நாரதர், ‘கவலைப்படேல்… அஞ்சேல்… கணபதி இருக்க உங்கள் கவலைக்கு அர்த்தமேயில்லை’ என்று ஆறுதலாயும்…, நம்பிக்கையாகவும் சொன்னார். அதைக் கேட்ட வியாசர், ‘கணபதி எழுதிக் கொடுப்பாரா’ என்று சந்தேகமாய்க் கேட்க, நாரதர், ‘சந்தேகமே வேண்டாம்… உங்கள் மனவேகத்தை விட, அதிவேகமாக கட்டாயம் எழுதிக் கொடுப்பார்…. அதிலும், உலகத்திற்கு, ‘ஐந்தாவது வேதம்’ என்று போற்றப்பட இருக்கும் மகாபாரதம் எழுதப் போகிறீர்கள். அதற்கு கணபதியின் ஆசியும், உதவியும் உங்களுக்கு கட்டாயம் இருக்கும்…. நீங்கள் கொஞ்சமும் தயங்காமல், நம்ம பிள்ளையை அழைக்கலாம்’ என்றார்…. வியாசரால் நம்ப முடியவில்லை. இருந்தாலும், இந்த புனிதமான காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, பிள்ளையாரை மனமுருக வேண்டினார்…. வியாசர் வேண்டியவுடனே, பிள்ளையாரும் அங்கு வந்தார்… ‘எதற்காக என்னை அழைத்தீர்கள் வியாசரே’ என்று கேட்டார். வியாசரும் தன் விருப்பத்தைத் தெரிவிக்க, ‘என்ன ஏது என்று எதுவும் யோசிக்காமல், தான் உட்கார வேண்டிய இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொண்டார். ‘ஏடு எடுத்துக் கொடுங்கள்… எழுத்தாணி எங்கே’ என்று பரபரப்பாகக் கேட்டார். ஏடுகளை எடுத்துக் கொடுத்த வியாசர், ‘எழுத்தாணி குடிலுக்குள்ளே இருக்கிறது…, இதோ நான் சென்று எடுத்து வருகிறேன்’ – என்று சொல்லி முடிப்பதற்குள்…, கணபதி, ‘நேரத்தை வீணாக்காதீர்கள்…, இதோ என் கொம்பையே உடைத்து எழுதுகிறேன்’ – என்று சொல்லி, தன் அழகான தந்தங்களில் ஒன்றை, ‘படக்’கென்று உடைத்து விட்டார்…. வியாசர், ‘ஐயோ, பிள்ளைக்கு வலிக்குமே’ என்று மெய் சிலிர்த்துப் போனார். எழுதத் தயாரான கணபதியோ, ‘வியாசரே, நீங்கள் வேகமாக பாடல்களை சொல்வதெல்லாம் சரிதான்… நான் கூடுமானவரை பின்தொடருகிறேன்… நான் வேகமாக எழுத வேண்டுமென்றால்…, நீங்கள் சொல்லும் பாடலின் அர்த்தத்தை புரிந்து கொண்டேனா என்று விசாரித்துக் கொள்ளுங்கள்… அதன் பின் அடுத்த பாடலை சொல்லுங்கள்… எனக்கும், மகாபாரதத்தின் அர்த்தமும், பெருமையும் தெரிய வேண்டும். நான் பாட்டுக்கு, மிஷின் மாதிரி எழுதக் கூடாது. ஐந்தாவது வேதமாகிய மகாபாரதத்தை முதலில் நான் தெரிந்து கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று மிகவும் நியாயமான பணிவுடன் கூறினார். வியாசர் நெகிழ்ந்து போனார்…. ‘ஞானம்’ பிறந்ததே, பிள்ளையாரிடமிருந்து என்பதை அறிந்தவர் வியாசர்… கணபதி, பாடலை எழுத ஒப்புக் கொண்டதே, அவர் செய்த பெரும் பாக்கியம்… அதிலும், மகாபாரதத்தை, நான் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று பிள்ளையார் ஒத்துக் கொண்டதே, இந்த இதிகாசத்தின் பெரும் வெற்றியைக் காட்டுகிறது என்று வியாசர் உள்ளம் பூரிப்படைந்தார்… அதன் பிறகு, வியாசர் ஒரு மனமாக, இறைவனை தியானித்து, மகாபாரதம் சொல்ல ஆரம்பித்தார். விக்னங்களை விலக்கவல்ல கணபதியும், ஆனந்தமாய் எழுத ஆரம்பித்தார்…. இதுதான் கதை கிருஷ்ணா… கிருஷ்ணர் : கண் மூடி, கேட்டுக் கொண்டே இருந்தேன்… ஆனந்த விநாயகரின் அழகு முகம் கண்ணில் தெரிகிறது… சரி…, இந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்…? (தொடரும்)
Comments
Post a Comment