ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 64

மேகலா : குருக்ஷேத்திரத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் தொடங்கியது என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். எஞ்சியிருந்த ஸம்சப்தர்கள், முன்பு போலவே அர்ஜுனனை மீண்டும் போருக்கு அழைத்து, அவனை வெகு தூரம் அழைத்துச் சென்றார்கள். துரோணரும், எவராலும் உடைக்க முடியாத பத்ம வியூகத்தை அமைத்தார். நடுவில் துரியோதனனையும், அவனைச் சுற்றி பல அரசர்களையும், வீரர்களையும் நிறுத்தி, முன்னிலையில் துரோணரையும் கொண்ட அந்த வியூகம் தாமரைப்பூ வடிவம் கொண்டது. இந்தப் பத்ம வியூகத்தை உடைக்க, அர்ஜுனன் தவிர்த்து, பாண்டவர்களும், வீரர்களும் முயற்சி செய்ய, துரோணர் மலை போல் நின்று அவர்களைத் தடுத்தார்.

பத்ம வியூகத்தை உடைத்து எப்படி உள்ளே நுழைவது என்பதை அறியாத தருமபுத்திரன், தவித்துப் போனான். இறுதியில், இந்தப் பொறுப்பை ஏற்கக் கூடியவன், அர்ஜுனன் மகன் அபிமன்யு மட்டுமே என்று தீர்மானித்தார். அபிமன்யு, சிறு வயதிலேயே பெரும் வீரன் என்ற புகழைப் பெற்றவன்.
அவனைப் பார்த்து, ‘அர்ஜுனன் இல்லாத இந்த நேரத்தில் நீ இப்போது இந்த பத்ம வியூகத்தை உடைக்க வேண்டும். உன்னுடைய மாமன்மார்களும், பெரியப்பா, சிற்றப்பா ஆகியோரும் உன் பின்னால் இருக்கிறோம்’ என்று தன் வேண்டுதலைக் கூறவும், அபிமன்யு, ‘உங்கள் கட்டளையை ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன். ஆனால், ஒரு விஷயம்; இந்தப் பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று விடும் வழியை என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதை உடைத்த பிறகு, எனக்கு ஆபத்து நேரிட்டால், அந்த வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி எனக்குத் தெரியாது. அதை என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை’ என்று கூறினான்.

தருமபுத்திரர், ‘அபிமன்யு! வியூகத்தை உடைத்து நீ வழி ஏற்படுத்தி விட்டால், உன்னை நாங்கள் தனியே விட்டு விட மாட்டோம். உன்னைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் உள்ளே புகுந்து விடுவோம்’ என்று கூறினார்.
வியூகத்தைப் பிளந்து அபிமன்யு செல்வதற்காக, தேரோட்டியிடம் கட்டளையிட, தேரோட்டி எச்சரித்தான். ‘துரோணர் பெரும் ஆற்றல் படைத்தவர். பல யுத்தங்களைக் கண்டவர். எல்லா அஸ்திரங்களும் அவருக்கு அடிமைகள். நீரோ, இளைஞர். உங்களுக்கு அத்தனை அனுபவம் கிடையாது. கொஞ்சம் யோசிக்க வேண்டும்’ என்று எச்சரித்தார்.

ஆனால், அபிமன்யுவோ, ‘நிகரில்லாத வீரன் என்று புகழ் பெற்ற அர்ஜுனன் என் தந்தை. உலகனைத்தையும் ஆளும் கிருஷ்ணர், எனக்கு மாமன். இப்படிப்பட்ட எனக்கு யாரிடமும் பயமில்லை’ என்று கூறி, வியூகத்தை நோக்கித் தேரைச் செலுத்துமாறு கட்டளையிட்டான்.

துரோணர் வகுத்த வியூகம் உடைபடாமல் இருப்பதற்காக, கௌரவப் படையினர், அபிமன்யுவைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்கள் பலரையும் எதிர்த்து, அற்புத சாகசங்களைச் செய்த அபிமன்யு, துரோணரின் வியூகத்தை உடைத்து, உள்ளே நுழைந்து விட்டான்.

தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், சிகண்டி, சாத்யகி, திருஷ்டத்யும்னன் முதலியோர், அபிமன்யுவைத் தொடர்ந்து அந்த வியூகத்தினுள்ளே நுழைந்து விட முயன்றார்கள். ஜயத்ரதன், அவர்களை எதிர்த்து, உள்ளே நுழைய விடாமல் தடுத்துப் போரிட்டான். ஜயத்ரதன், முன்பு, சிவனைப் பூஜித்து, ஒரு அரிய வரம் பெற்றவன். இவனுடைய பக்தியைக் கண்டு மெச்சிய பரமசிவன், ‘யுத்த களத்தில் நான் ஒருவனாக நின்று, பாண்டவர்கள் அனைவரையும் வெல்ல வேண்டும்’ என்று ஜயத்ரதன் கேட்ட வரத்தை அவனுக்கு அளித்திருந்தார். ‘ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே அந்த சாகசத்தை நீ செய்து காட்டுவதற்கு அந்த வரம் பயன்படும்’ என்றும் கூறி விட்டார். அதன் காரணமாக, பாண்டவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான். அதன் காரணமாக, அபிமன்யுவைத் தொடர்ந்து பாண்டவர்களும் அந்த வியூகத்தினுள் நுழைவதற்கு முன்பாகவே, பிளக்கப்பட்ட அந்த வியூகம், திரும்பவும் மூடப்பட்டது.

வியூகத்தினுள் தனியாகச் சிக்கிக் கொண்ட அபிமன்யு பெரும் யுத்தத்தைச் செய்தான். அவன் ஒருவனே, கௌரவர் தரப்பு வீரர்கள் அனைவரையும் வென்று வீழ்த்தி விட முனைந்தது போல, பல சாகசங்களைச் செய்தான். அவன் போர் புரியும் முறையைப் பார்த்த கர்ணன், அவனை வீழ்த்துவது எப்படி என்று துரோணரிடம் கேட்டான்.

துரோணர், ‘ஒரு சிறிய தவறுக்கும் கூட இடம் கொடுக்காமல் அபிமன்யு போர் புரிந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனனுக்குச் சற்றும் குறையாத பராக்கிரமத்தைக் கொண்டவனாக இவன் விளங்குகிறான். இவனை வெல்வதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. இவனுடைய கவசம் உடைக்க முடியாதது. இம்மாதிரி கவசத்தை அர்ஜுனனுக்கு மட்டுமே கற்றுத் தந்திருக்கிறேன். இவனுடைய கவசத்தைப் பிளக்க முடியாது. ஆனால், இவனுடைய வில், நாண்கயிறு ஆகியவற்றை அறுத்து விட முடியும். அதே போல அவனுடைய ரதத்தின் குதிரைகளையும் வீழ்த்தி விட முடியும். இவன் எதிரே நின்று அதைச் செய்ய இயலவில்லை என்றால், பின்புறத்தில் இருந்தாவது, அதைச் செய்யுங்கள்’ என்று கூறினார்.

அதன் பிறகு, கர்ணன், பின்புறத்திலிருந்து தாக்கியே அபிமன்யுவின் வில்லை அறுத்து வீழ்த்தினான். துரோணர், அபிமன்யுவின் குதிரைகளைக் கொன்றார். கிருபர், தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மற்றவர்கள் அபிமன்யு மீது அம்புமழையைப் பொழிந்தார்கள். தேர், வில், குதிரைகள் எல்லாவற்றையும் இழந்த அபிமன்யு, தனியாக நின்று போர் புரிந்தான். அச்சமயம், துரோணர், அபிமன்யு கையிலிருந்த கத்தியை வெட்டி வீழ்த்தினார்.

துச்சாசனனின் மகன், அபிமன்யுவுடன் கதை யுத்தம் செய்யத் தொடங்கினான். அந்த யுத்தத்தின் போது, துச்சாசனனின் மகன், கதையினால் ஓங்கி அடித்து, அபிமன்யுவின் மண்டையைப் பிளந்தான். அபிமன்யு இறந்து வீழ்ந்தான்.

அபிமன்யு வீழ்ந்ததைக் கண்ட பாண்டவ சைன்யம் சிதறி ஓட ஆரம்பித்தது. தருமபுத்திரர், படைக்கு தைரியம் சொன்னாலும், அவனே தைரியத்தை இழந்தான்.

இப்படி அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, ‘அர்ஜுனனை நான் எப்படிக் கண் கொண்டு பார்ப்பேன்? இவனுடைய தாயார் சுபத்திரையை நான் எப்படிச் சமாதானப்படுத்துவேன்? கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் சந்தித்து என்ன சொல்லுவேன்?’ என்று புலம்பி அழுதார்.

அங்கு ஸம்சப்தர்களால் திசை திருப்பப்பட்ட அர்ஜுனன், அவர்கள் அனைவரையும் கொன்று வீழ்த்தினான். கிருஷ்ணரிடம், ‘என் மனதில் ஏதோ இனம் புரியாத கலக்கம் ஏற்படுகிறது. தருமபுத்திரருக்கு ஏதோ நடந்து விட்டதோ என்று அஞ்சுகிறேன்’ என்று புலம்பினான்.

கிருஷ்ணரும், ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. தருமபுத்திரருக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது’ என்று சமாதானம் கூறினார். இருவரும் பாசறைக்குத் திரும்பினார்கள். அங்கே வழக்கமான வாத்திய கோஷங்கள் அர்ஜுனனை வரவேற்கவில்லை. பாண்டவர்கள் அனைவரும் துக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் அபிமன்யுவைக் காணவில்லை.

மனம் பதறிய அர்ஜுனன், நான் உள்ளே நுழையும் போது, ஒருவரும் பேசவில்லை. உங்களுக்கிடையே அபிமன்யுவைக் காணவில்லை. இன்றையப் போரில், துரோணர் பத்ம வியூகம் அமைத்திருந்தார். அதைப் பிளக்கும் முறை உங்களில் ஒருவருக்கும் தெரியாது. அபிமன்யுவுக்கு வியூகத்தைப் பிளக்க மட்டும் தான் தெரியும்; வெளியில் வரத் தெரியாது. அப்படியென்றால், அபிமன்யு வியூகத்திற்குள் நுழைந்து, கௌரவர்களிடம் சிக்கிக் கொண்டானா என்னும் போதே, அபிமன்யு இறந்து விட்டான் என்பதை உணர்ந்தான்.

அதன் பிறகு நடந்த சம்பவங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2