நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 4
கிருஷ்ணர் : என்ன திடீரென்று உரிமையைப் பற்றிப் பேசுகிறாய்? நீ அம்மா; உன் பிள்ளையை வளர்க்கும் கடமை உன்னைச் சார்ந்தது என்ற பொறுப்பு உன் நினைவில் இருந்தால், உரிமையைப் பற்றி ஏன் யோசிக்கணும்….. ஆடுற மாட்டை, ஆடிக் கறக்கணும் என்ற பழமொழியை யோசித்தாயா…. மாட்டின் மடியில் பால் கறக்க நினைப்பவன், மாட்டுக்குச் சொந்தமான கன்றினை தன் நாவால் நக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கன்னுக்குட்டி பால் குடிக்க அனுமதிக்கணும். மாட்டினை தொழுவத்தில் கட்டி வைத்த கயிற்றை தன் கையில் வைத்துக் கொண்டு, பசு மாட்டின் தாடையைத் தடவிக் கொடுத்து, தாஜா பண்ணி, பால் கறப்பதில்லையா…. பசு மாடு, தனதென்று உரிமை பாராட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்து விடாமல், பால் குடிக்க விடாமல் செய்தால், பசு மாட்டிடம் பால் கறக்க முடியுமா….? மேகலா…., நம்முடைய உரிமையை நாம் செயல்படுத்துவதற்குக் கூட, பக்குவம் தேவைப்படுகிறது; பொறுமை தேவைப்படுகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்…., கயிறு உன் கையில் இருக்கிறது. பால் கறப்பதும், கறக்க முடியாமல் போவதும், உன் சாமர்த்தியம். உரிமை, சுதந்திரம் என்று சொல்லி, பிள்ளைகளின் மனதில் வேறுபாட்டை விதைத்து விடாதே…. மேகலா