உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

கிருஷ்ணர் : என்னம்மா… எலெக்‌ஷன் முடிஞ்சிருச்சா…. ஒரே பரபரப்பாய் இருந்தயே… லீவு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு…, ஒரேயடியா ‘லீவு’ எடுத்துட்டயோ… என்று பார்த்தேன்… என்ன விஷயம்…, இந்தப் பக்கம்….

மேகலா : என்ன கிருஷ்ணா…, ஒண்ணுமே தெரியாதது மாதிரி பேசுகிறாய்… ஏதாவது ‘தலைப்பு’ சொல்லேன்…

கிருஷ்ணர் : நீ ஏதாவது யோசித்திருப்பாயே…, சொல்லு பார்ப்போம்….

மேகலா : ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று யோசித்திருக்கிறேன்… Okay-யா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Very good…

வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்க்கு

உள்ளத்தனையது உயர்வு’

என்று உள்ளத்தின் உயர்வை, தாமரை மலர் நீட்டத்தை உதாரணம் சொல்லி, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர்…. சூப்பர் மேகலா… எங்கே உன் கருத்தை நீ சொல்லு… உன் உள்ளத்து உயர்வைப் பார்க்கலாம்…, சரி, இந்தத் திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லு பார்க்கலாம்… உனக்குத் தெரிகிறதா என்று பார்க்கலாம்…

மேகலா : கிருஷ்ணா…, ஒரு குளத்தில், தாமரைப் பூ, பூத்திருக்கிறது என்றால்…, அக்குளத்தில் தண்ணீரின் அளவைச் சொல்லி விடலாம்…

கிருஷ்ணர் : எப்படி…?

மேகலா : கிருஷ்ணா…., இந்த தாமரையின் குணம் என்ன தெரியுமா… தண்ணீர் எவ்வளவு இருக்கிறதோ…, அதற்கு மேலே தலையை நீட்டிப் பூக்கும்… தண்ணீர் 5 அடி ஆழம் என்றால், தாமரையின் உயரம் 5 1/2 அடி உயரம் இருக்கும்… தண்ணீர் 2 அடி ஆழத்தில் என்றால்…, பூ 2 1/2 அடி உயரத்தில் பூக்கும்… இது தாமரையின் குணம்.. அதனால் தான் வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்கிறார், வள்ளுவர்….

கிருஷ்ணர் : அது சரி… அது எப்படி உள்ளத்தின் உயர்வைக் காட்டும்….

மேகலா : நம்ம உள்ளத்தின் குணத்தைப் பொறுத்து, நாமும், உயர்வு பெறுவதும், தாழ்ந்து போவதும் தெரிந்து விடும் கிருஷ்ணா…. நல்ல எண்ணங்கள் உள்ளவர்கள், பேசும் போதே…, அவர்களின் உள்ளத்தின் உயர்வைக் காட்டி விடுவார்கள்…. கெட்ட வார்த்தையில் பேசினால், அதுவும் அவர்களைத் தாழ்த்தி விடும்… இதுதான் குறளுக்கு அர்த்தம்….

கிருஷ்ணர் : சரி…, அருமையான குறளை எடுத்திருக்கிறாய்…, ஆரம்பிக்கலாம்…, மேகலா, உயர்வுக்கு ஏதாவது உதாரணம் சொல்லேன்… நீ சரியாச் சொல்லுகிறாயா பார்ப்போம்…

மேகலா : கிருஷ்ணா…, அந்தக் காலங்களில், ஒரு ஊரைக் கட்டமைக்க வேண்டுமென்றால், அந்த ஊரின் நடுவே, ‘கோயில்’ ஒன்றைக் கட்டி…, அதைச் சுற்றி தேரோடும் வீதி…, கடைகள்…, பாடசாலைகள் என்று அமைத்து, மக்கள் வாழும் இடம்…, குளம், வயல், ஏரி…, என்று அமைத்து மக்கள் வாழ்வார்கள். கிருஷ்ணா…., இப்படி வடிவமைத்த பெரியோர்கள், ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘கோயில் இல்லாத ஊர் பாழ்’ என்று பழமொழியையும் சொல்லி வைத்து, எல்லா மக்களும் ஒன்றுகூடி வழிபடும் அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்…. சரி…, இந்தக் கோயில் கோபுரத்தை…, இவ்வளவு கி. மீ தூரத்திற்கு அப்பால் வரும் போதே, மக்கள் பார்த்து விட வேண்டும் என்று கோபுரத்தின் உச்சியில் இருந்து அளவெடுத்து, அதன் அகலத்தை அளவெடுத்து…, கோபுரத்தைக் கட்டுவார்களாம் கிருஷ்ணா…. நம்முடைய ஆண்டாள் கோயில் கோபுரத்தை, ‘மல்லி’ என்ற கிராமம் தாண்டி வரும் போதே பார்த்து விட வேண்டும் என்று கணக்கெடுத்து, கோபுரத்தின் உயரத்தை நிர்ணயித்தார்களாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, இதில் எப்படி முன்னோர்களின் உயர்ந்த எண்ணம் தெரிகிறது….

மேகலா : ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பொழுதே மக்கள் கண்களுக்கு, ‘கோபுரம்’ தான் தென்பட வேண்டும்… கோபுரத்தைப் பார்த்து, ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்று தோன்றியதே…, அது எப்பேர்ப்பட்ட பெருமை… தன்னுடைய ஊரையும்…, அதில் குடிகொண்டிருக்கும் ஆண்டாளையும், வடபத்ரசயனப் பெருமாளையும் பக்திபூர்வமாக நினைத்ததால் தானே…, தன் ஊரைப் பெருமைப்படுத்திய செயல் தானே இது…, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளம் தான், கோயில் கோபுரங்கள் கிருஷ்ணா… மதுரை நகரத்துக்குள் நுழையும் போதே…, 5 கோபுரங்கள் அழகாய் தெரிவதைப் பார்க்கும் போதே, மெய் சிலிர்க்கும் கிருஷ்ணா… எந்த ஊரிலும், கோயிலின் கோபுரம் என்பது, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! சிறப்பு…, சிறப்பு…, சரி, நம் முன்னோர்களின் உயர்ந்த உள்ளம் என்பது…., கோயில் கோபுரத்தில் மட்டுமா தெரிகிறது…?

மேகலா : இன்னும் நிறைய இருக்கிறது கிருஷ்ணா…. மனிதன் வாழும் இந்த பூமியில்…, அவன் நாகரிகத்தை…, வாழும் முறையை…, அறிந்து கொள்ள முயற்சி செய்யும் போதிலிருந்தே…, தான் அறிந்ததை…, கற்றுக் கொண்டதை…, ‘அறிவியல் சாஸ்திரம்’, ‘வான சாஸ்திரம்’, இயற்கையின் ரகசியம்…, இப்படி எல்லா ஞானங்களையும், இன்னும் வரும் காலங்களில் வாழப் போகும் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டும்… நம்மை விட அறிவில், பண்பில் சிறந்தவர்களாகவும், தெளிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்ததனால் தான் கிருஷ்ணா…, இந்த உலகத்தில், மிகப் பெரிய இதிகாசங்கள், வரலாறுகளை உள்ளடக்கிய காவியங்கள், காப்பியங்கள், புராணங்கள் என்று படைக்கப்பட்டிருக்கிறது… இது நம் முன்னோர்களின் வாழ்க்கைத் திறத்தை மட்டும் காட்டவில்லை கிருஷ்ணா… அறிவின் தீர்க்கம், உயர்ந்த உள்ளத்தின் தெளிவு என்பதனையும் காட்டுகிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : Exactly…. சரி…, இதிகாசம், புராணங்கள் இவற்றிலிருந்து, மனிதனின் உயர்ந்த உள்ளத்தைக் கூறேன்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2