ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 92

மேகலா : துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியம் நழுவிக் கொண்டிருந்த நிலையிலும், அவன், அவனது எஞ்சியிருந்த படை வீரர்களைப் பார்த்து உற்சாக வார்த்தைகளைக் கூறி, அவர்களைப் போர் புரிய வைக்க முயற்சித்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.
துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட கௌரவப் படையினர், மீண்டும் ஒன்றுகூடிப் பாண்டவர்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். சாத்யகி, சகுனியை எதிர்ப்பதில் முனைந்தான். அர்ஜுனன், கௌரவப் படைக்குள் புகுந்தான். சால்வ மன்னனை, சாத்யகி வீழ்த்திக் கொன்றான். இப்படிப் பல பின்னடைவுகள் கௌரவர்களுக்கு நேர்ந்தாலும், துரியோதனன் முனைந்து போர் செய்து கொண்டிருந்தான். பாண்டவ சகோதரர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி அனைவரையும், துரியோதனன் ஒருவனே எதிர்த்தான்.

பாண்டவர்கள் அனைவரும் கூடியும் துரியோதனனை எதிர்க்க முடியவில்லை என்பதைக் கண்ட தேவர்கள் வியந்தார்கள்.
சகுனி கடும் யுத்தம் புரிந்து, தருமனை நடுங்கச் செய்தான். தருமனைக் காப்பாற்ற, சகதேவன் அவரை ரதத்தில் ஏற்றி, வேறு இடத்திற்குக் கொண்டு சென்றான். பாண்டவ தரப்பினர், பெரும் கோபம் கொண்டனர். அங்கு எல்லா வரம்புகளையும் கடந்த யுத்தம் நடக்கத் தொடங்கியது.

அந்த நிலையில், யுத்தத்தை முடித்து வைக்கும் எண்ணம் கொண்ட அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னான், ‘பெரும் அழிவை உண்டாக்கி விட்ட இந்த யுத்தம் தொடங்கி, இன்று பதினெட்டாவது தினம். சமுத்திரத்திற்குச் சமமாக இருந்த துரியோதனனின் படை, இன்று சிறு குட்டைக்குச் சமமாகி விட்டது. பீஷ்மர் கொல்லப்பட்டவுடன் சமாதானம் உண்டாகும் என்று எதிர்பார்த்தேன். மூடனாகிய துரியோதனன், அதற்காக முனைய மறுத்தான். துரோணர் இறந்த பிறகாவது சமாதானம் வரும்; அதன் பின் கர்ணன் வீழ்ந்த பிறகாவது சமாதானம் வரும் என்று காத்திருந்தேன். அப்போதும் துரியோதனன் இணங்கவில்லை. ஜயத்ரதன் வீழ்ந்தான்; பூரிசிரவஸ், சல்யன், துச்சாசனன் போன்ற பலரை இழந்தும் கூட, மூர்க்கனான துரியோதனன், சமாதானத்தில் மனதைச் செலுத்தவில்லை.

இந்த உலகில், துரியோதனனுக்கு நிகராக பகையை வளர்த்துக் கொள்ளும் மூர்க்கன் எவனும் இருக்க மாட்டான். ’இவனால், க்ஷத்திரிய குலம் பெரும் நாசத்திற்குள்ளாகப் போகிறது’ என்று பண்டிதர்கள் கூறிய வார்த்தை மெய்யாகி விட்டது. அவன் உயிர் இழந்தால் ஒழிய, சமாதானம் ஏற்படப் போவதில்லை. ஆகையால் மாதவரே! அவனை நோக்கி ரதத்தைச் செலுத்துங்கள். அவனையும், எஞ்சி இருக்கும் படையையும் நான் கொல்லப் போகிறேன். இந்த யுத்தம் முடிவடையட்டும்’.

இப்படி அர்ஜுனன் பேசிய பிறகு, அவனுடைய ரதத்தை, துரியோதனனை நோக்கிக் கிருஷ்ணர் செலுத்தினார். எஞ்சியிருந்த கௌரவப் படையை அர்ஜுனன் எரிக்கத் தொடங்கினான். கௌரவர் படை பெரும் கலக்கமுற்றது. துரியோதனன் தரப்பு வீரர்கள் நாலா பக்கமும் ஓடத் தொடங்கினார்கள்.
இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திருஷ்டத்யும்னன், துரியோதனனை எதிர்த்தான். அப்போது துரியோதனன் தனது ரதத்தை இழந்தான். உடனே, ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரையில் ஏறி, துரியோதனன் யுத்த களத்தை விட்டு விலகிச் சென்றான். அவன் விலகிச் சென்றதால், அவனுடைய படை வீரர்கள் கலக்கமுற்றார்கள்.

துரியோதனனைத் தேடத் தொடங்கினர். அப்போது சகுனி, ‘துரியோதனனைத் தேடுவதை விடுத்து, போர் செய்வது நமது கடமை’ என்று கூறி படைகளுக்கு உற்சாகமூட்ட முயன்றான். சகுனியின் வார்த்தைகளில், கௌரவப் படையினர் நம்பிக்கை பெறவில்லை.
அந்த நேரத்தில் எஞ்சியிருந்தவர்களையெல்லாம் அழித்து விட பீமன் முனைந்தான். துரியோதனனின் சகோதரர்கள் அனைவரையும் பீமன் வீழ்த்திக் கொன்றான்.

சகுனியையும், அவன் மகன் ‘உலூகனையும்’ எதிர்த்து சகதேவன் யுத்தம் புரிந்தான். முதலில் உலூகன், சகதேவனால் கொல்லப்பட்டான். அதைக் கண்டு கோபமடைந்த சகுனி, பெரும் போர் புரியத் தொடங்கினான். சகதேவன் அவனைப் பார்த்து, ‘சபையில் சூதாட்டக் காய்களை உருட்டி, எங்களை இழிவு செய்தவனே, அன்று நீ பேசிய பேச்சையெல்லாம் இப்பொழுது நினைவுபடுத்திக் கொள். அதற்கான பலனை இப்பொழுது பெறப் போகிறாய். ஒரு மரத்தில் நன்றாகப் பழுத்த பழத்தை ஒரு தடியால் வீழ்த்துவது போல உன் தலையை நான் இப்போது பூமியில் வீழ்த்துகிறேன்’ என்று கூறி சகுனியை, சகதேவன் வீழ்த்தினான். கௌரவர்களால், பாண்டவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி, எந்தத் தலையிலிருந்து உதித்ததோ, அந்தத் தலை பூமியில் புரண்டது. பாண்டவர் தரப்பினர், சகதேவனை மெச்சிப் பாராட்டினார்கள்.

துரியோதனனுடன் இருந்த வீரர்கள் ஒவ்வொருவராய் வீழ்ந்து போக, திருதராஷ்டிரனுக்கு யுத்தக் காட்சியை, வியாசர் அருளால், ஞானப் பார்வை பெற்று, நேரடியாக விவரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சஞ்சயன், துரியோதனன் மேல் எழுந்த கரிசனத்தால், தானும் போரில் பங்கு பெற்றான்.
‘நாற்புறத்திலும் சூழப்பட்டு, ஆயுதங்கள் எல்லாவற்றையும் இழந்து, நமது வீரர்கள் திக்குத் திசை தெரியாமல் ஓடுவதைப் பார்த்த நான், என்னுடைய உயிரில் ஆசையை விட்டேன். திருஷ்டத்யும்னனை எதிர்ப்பவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். பெரும் போர் நடக்காமலேயே நாங்கள் வெல்லப்பட்டோம். சாத்யகி, என்னை மறித்து, என்னோடு போர் புரிந்து என்னைச் சிறைப் படுத்தினான். என்னைக் கொன்று விட சாத்யகி நினைத்த போது, அங்கு வந்த வியாசரின் ஆலோசனையால், என்னை விடுவித்தார்கள்.

இதற்கிடையில், அஸ்வத்தாமா, கிருபர், கிருதவர்மா மூவரும் துரியோதனனைக் காணாமல், அவனைத் தேடத் தொடங்கினார்கள்’.
- இவ்வாறு யுத்தக் காட்சியை விவரிக்கும் சஞ்சயன், தான் யுத்தத்தில் பங்கு பெற்ற நிகழ்ச்சியையும், திருதராஷ்டிரனுக்கு விவரித்தான்.
சஞ்சயன் சொன்னான், ‘நகரத்திற்கு வருவதற்கு நான் நடந்து வந்து கொண்டிருந்த போது, வழியில் துரியோதனனைக் கண்டேன். மிகவும் காயமுற்று, கையில் ஒரு ‘கதை’யுடன் அவன் நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது. அவனைப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. கிரீடத்தைத் தலையில் அணிந்து கொண்டு, பல மன்னர்களிடம் கப்பம் பெற்ற துரியோதனன், குபேரனுக்கு நிகராக செல்வம் கொண்டு, ஆட்சி புரிந்த துரியோதனன்; இந்திரனுக்கு நிகராக தேஜஸ் உடைய துரியோதனன், ஆயுத சாஸ்திரத்தை நன்றாக அறிந்த துரியோதனன், எல்லாச் சிறப்புக்களையும் பெற்ற உன்னுடைய மகனாகிய துரியோதனன் இருந்த நிலையை என்னால் காணச் சகிக்க முடியவில்லை. நான் சிறைபிடிக்கப்பட்டதை அவனிடம் எடுத்துச் சொன்னேன். இறந்து போன தன் சகோதரர்களைப் பற்றி என்னிடம் விசாரித்தான்’.

- இவ்வாறு வர்ணித்த சஞ்சயன், துரியோதனன் சொன்னதையும், திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்னான். துரியோதனன் சொன்னான், ‘சஞ்சயா! உன்னைத் தவிர வேறு ஒருவனை நமது தரப்பில் இப்போது நான் பார்க்கவில்லை. திருதராஷ்டிரனிடம், அவருடைய மகன் ஒரு மடுவில் பிரவேசிக்கும் நிலைக்கு வந்து விட்டான் என்று கூறுவாயாக! மிகவும் காயப்படுத்தப்பட்ட நிலையில், என் உடம்பு பற்றி எரிகிறது. என்னால் தாங்க முடியவில்லை. தண்ணீர் நிறைந்த இந்த மடுவில், உயிரோடு பிரவேசிக்கப் போகிறேன் என்பதை மன்னனிடம் எடுத்துச் சொல்’.

- இவ்வாறு கூறிய துரியோதனன், அருகே இருந்த மடுவினுள் நுழைந்தான். பல வித்தைகளைக் கற்றறிந்தவனான அவன், ஜலத்தைக் கட்டும் வித்தையைப் புரிந்து, பாதுகாப்பைத் தேடி ஒளிந்து கொண்டான்.

யுத்த களத்தில் என்ன நடக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1