ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 114

                         யுதிஷ்டிரரின் மனக் குழப்பம் (சாந்தி பர்வம்)

மேகலா : இறந்தவர்களுக்கெல்லாம் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த பிறகு, திருதராஷ்டிரன் முதலானோர், நகரத்திற்கு வெளியே, கங்கைக் கரையிலேயே ஒரு மாத காலம் தங்கினார்கள். அந்த சமயத்தில், வியாசர், நாரதர், கண்வர் போன்ற பல மஹரிஷிகளும் அங்கே வந்தார்கள். பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த தருமபுத்திரருக்கு ஆறுதல் கூறினார்கள். நாரதர், தருமபுத்திரரைப் பார்த்து, ‘தர்மத்தின் வழியில் நின்று, இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. பாண்டவனே! நீ மனமகிழ்ச்சியுடன் இருக்கிறாயா, அல்லது உன்னைச் சோகம் பீடித்திருக்கிறதா?’ என்று கேட்டார்.

அதற்கு தருமபுத்திரர் சொன்னார், ‘கிருஷ்ணருடைய கருணையினாலும், பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தினாலும் இந்தப் பூமி என்னால் வெல்லப்பட்டது. ஆனால், என் மனதில் துக்கம் தான் மிஞ்சியிருக்கிறது. பிள்ளைகளையும், உறவினர்களையும் இழந்து நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, ஒரு தோல்வியாகவே எனக்குக் காட்சி தருகிறது. எங்களால் யுத்தத்தில் கொல்லப்பட்ட கர்ணன், எங்களுக்கெல்லாம் மூத்தவன் என்பதை அறிந்து, என் மனம் வேதனையை அனுபவிக்கிறது. கர்ணன் எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரன் என்பதை நானோ, பீமனோ, அர்ஜுனனோ, நகுலனோ, சகாதேவனோ அப்போது உணரவில்லை. இப்போது அண்ணனைக் கொன்று பெரும் பாவச் சுமையைச் சுமந்து கொண்டு நான் நிற்கிறேன்’.

தருமபுத்திரர் பேசியதைக் கேட்ட நாரதர், கர்ணனுக்குப் பரசுராமர் கொடுத்த சாபத்தையும், அவனுடைய வீரத்தையும், எவராலும் வெல்ல முடியாத திறமையையும், இந்திரன், பாண்டவர்களுக்காக கவச குண்டலத்தைப் பறித்து, அவன் திறமையைக் குறைத்ததையும், பீஷ்மர், அவனுடைய தன்னம்பிக்கை குறையும் விதமாக அவமானப் படுத்தியதையும் எடுத்துரைத்து, கர்ணன் மாண்டு போனதற்கு நீ காரணமல்ல; பல நிகழ்ச்சிகள் ஒன்றாகச் சேர்ந்து, அவனுக்கு அந்த முடிவை ஏற்படுத்தின. நீ சோகமுறுவதில் அர்த்தமில்லை’ என்று கூறினார்.

குந்தியும், ‘மகனே! கர்ணனின் மரணம் குறித்து நீ துயரப்படுவது தேவையற்றது. உங்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்வது என்ற எண்ணத்தை ஏற்படுத்த என்னால் முடியவில்லை. யுத்தத்தில் அவன் மடிய நேரிட்டது. அது உன்னுடைய தவறு அல்ல’ என்று குந்தி கூறியும் கூட, தருமபுத்திரர் மனம் சமாதானத்தை அடையவில்லை.

‘அர்ஜுனா! ஒரு மனிதன் செய்த பாவமானது, அவன் அதை மனதார உணர்ந்து வெளியே சொல்வதனால் நீங்கும். நான் காட்டில் போய் வசிக்க விரும்புகிறேன். ஒரு முனிவருடைய வாழ்க்கையை மேற்கொள்ள நான் விரும்புகிறேன். இந்த பூமியை, இந்த ராஜ்ஜியத்தை நீங்களே ஆண்டு கொள்ளுங்கள்’ என்று விரக்தியாக யுதிஷ்டிரர் பேசினார்.

இப்படிக் கூறிய தருமபுத்திரரைப் பார்த்து அர்ஜுனன், ‘சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத காரியத்தைச் சாதித்து விட்டு, இப்பொழுது உமது மனதின் களைப்பு எனக்கு விநோதமாகத் தோன்றுகிறது. உமது துக்கம் எனக்கு வியப்பைத் தருகிறது. உம்முடைய கூற்றைக் கேட்டு இந்த உலகம் உம்மைப் பழி கூறும்’ என்றான். பீமன் கோபத்துடன், ‘குருட்டுப் பாடமாக வேதத்தைக் கற்று ஒப்பிக்கிறவன், அதன் பொருளை அறியாதது போல, நீர் தர்மத்தின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்! இதுதான் உம்முடைய முடிவு என்று முன்னமேயே அறிந்திருந்தால், நாம் வனவாசம் முடிக்காமல், காட்டிலேயே, பிச்சை எடுத்தே வாழ்ந்திருக்கலாமே! இந்த யுத்தம் நிகழாமலே போயிருக்குமே!’ என்று கோபப்பட்டான்.

நகுலன் சொன்னான், ’வெறும் விரக்தியினாலோ அல்லது பெருமை கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தினாலோ தூண்டப்பட்ட ஒருவன் சந்நியாசத்தை மேற்கொண்டால், அது அவனுக்குப் பலனை அளிப்பதில்லை’. ராஜ்ஜியத்தை ஏற்கச் சொல்லி சகதேவனும் மன்றாடிய பின்னர், திரௌபதி, தருமபுத்திரரைப் பார்த்துச் சில வார்த்தைகளைச் சொன்னாள். ‘முன்பு நாம் காட்டிலே வசித்த போது, ‘பகைவர்களை வென்று, ராஜ்ஜியத்தைப் பெற்று, மக்களை ரட்சித்து, யாகங்களை நடத்தி, நற்காரியங்களைச் செய்வோம்’ என்று நீங்கள் சொன்னீர்கள். அதை இப்போது ஏன் மறந்து விட்டீர்கள்?’

’சூதை விரும்பியதாலும், தீமையையே செய்து வந்ததினாலும், திருதராஷ்டிர மன்னருடைய மகன்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். அதில் உமக்கு ஒரு பாவமும் கிடையாது. தீயவர்களை ஒழிப்பதும், நல்லவர்களைக் காப்பதும் தான் க்ஷத்திரியர்களுக்குரிய தர்மம். பொறுமை – கோபம்; கொடுப்பது – பெறுவது; அஞ்சுவது – அஞ்சாமல் இருப்பது; தண்டனை அளிப்பது – பரிசு தருவது என்ற இரட்டை நடைமுறை தான் அரசனுக்குரிய தர்மம். இதை உணராமல், பெற்ற வெற்றியை நாசமாக்கி விட நீங்கள் முனைவது வியப்புத்தான்.

‘உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. உங்களுடைய பைத்தியத்தினால், உங்களை அண்டிய உங்களுடைய தம்பிமார்களும் பைத்தியக்காரர்களாக நிற்கிறார்கள். இல்லையென்றால் இந்நேரம் அறிவிழந்து பேசும் உங்களைச் சிறையினுள்ளே தள்ளி, அவர்கள் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றிருப்பார்கள். மந்த புத்தியின் காரணமாக, கடமையிலிருந்து தவறுகிற மனிதன், என்றுமே செல்வத்தை அடைய மாட்டான். பெரும் ராஜ்ஜியத்தைப் பெற்ற நீர், அதன் மக்களைக் காப்பாற்ற மறுத்து, காட்டுக்குப் போய் விடுகிறேன் என்று கூறுவது சற்றும் ஏற்கத்தகாத செயல். பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்; கடமையைச் செய்யுங்கள்’ என்று கூறினாள்.

மேகலா : யுதிஷ்டிரருக்கு வரும் இந்த மனக் குழப்பம், இயல்பானது தானே கிருஷ்ணா! கர்ணன், தன் சகோதரன் என்று அறிகிறான்; அபிமன்யுவின் இழப்பு…., திரௌபதியின் மகன்களின் இழப்பு…., கர்ணனின் இழப்பு…. அவனை ரொம்பவும் கலங்கச் செய்வது நியாயம் தானே கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : விரக்தியில் பேசுவது சரிதான்…. அதற்காக, இத்தனை பேர் ஆறுதல் கூறியும், காட்டுக்குப் பொகிறேன் என்று புறப்பட்டால்….? திரௌபதி கூறியது போல, சுத்த…. பைத்தியக்காரத்தனம் அல்லவா…? காட்டில் தானே திரிந்தார்கள்… எல்லாவற்றையும் கௌரவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, அங்கேயே காலத்தைக் கடத்தியிருக்கலாமே….! பீமன் கூறியது போல….., எதற்காக தன்னுடைய பங்கைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டு…., தூது சென்று…. ஊசி குத்தும் அளவு இடம் கூடத் தர முடியாது என்று அவமானப்படுத்தி, திருப்பி அனுப்பப்பட்டு போர் தான் முடிவு என்று தீர்மானித்து, இரு புறத்து வீரர்களும், கொத்துக் கொத்தாய் செத்து மடிவதைப் பார்த்தும், யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி, பல உயிர்களின் மரணத்தின் மீது வெற்றியைக் கொண்டாடி, இப்போது, ‘எனக்கு தர்மம் செய்ய வேண்டும்….. காட்டுக்குப் போகிறேன் என்றால்….., இது பைத்தியக்காரத்தனம் இல்லையா….. க்ஷத்திரியனாயும் இல்லாமல், சந்நியாசியாகவும் இல்லாமல் ஊசலாடும் மனது மேகலா, இவருக்கு….. நகுலன் சொன்னது போல, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் இவரது ஒரே நோக்கம்…. சரி! அடுத்து நீ கதையைச் சொல்லு…..

(காலத்தின் வலிமை பற்றி வியாசர் சொல்வதிலிருந்து அடுத்த பகுதி ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2