ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 115

                                   காலத்தின் வலிமை பற்றி வியாசர்

மேகலா : திரௌபதி பேசிய பிறகு, அர்ஜுனன், ‘உலகிலுள்ள மக்களையெல்லாம் காப்பாற்றுவது தண்டனை நீதியே! தண்டனை சாத்திரம் இல்லையென்றால், உலகில் நியாயம் இருக்காது. குற்றங்களுக்குரிய தண்டனையை தீர விசாரித்து அளிக்கும் அரசன் இல்லாவிட்டால், மக்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்களுக்குள்ளும் அடங்க மாட்டார்கள். கல்வி கற்றல், ஒரு வேலையை முழுமையாகச் செய்து முடித்தல் என்பதற்குக் கூட, அரசனின் கண்டிப்பு அவசியம் தேவை.

அரசே! முழுமையான சிறப்புப் பெற்ற காரியம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. நன்மையும், தீமையும் கலந்ததாகத்தான் எல்லாக் காரியங்களுமே இருக்கின்றன. பெரியவர்கள் சென்ற பாதையில் செல்வதுதான் நமக்கிருக்கும் வழி. எனவே, ஆட்சியை நடத்துங்கள். மக்களைக் காப்பாற்றுங்கள். தவறு செய்பவர்களைத் தண்டியுங்கள். யாகங்களை நடத்துங்கள். தானங்களை வழங்குங்கள். பகைவர்களைக் கொல்லுங்கள். ஆயுதமேந்தி ஒருவன் நம்மைத் தாக்க வந்தால், அவனை நாம் தாக்குவதாலோ, கொலை செய்வதாலோ, எந்த விதமான பாவமும் நமக்கு வராது என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. உமது சந்தேகங்களையும், குழப்பங்களையும் விட்டு விட்டு ராஜ்ஜிய பாரத்தை மேற்கொள்ளுங்கள்’ என்று அர்ஜுனன் கூறிய பிறகு, தேவஸ்தானர் என்ற தபஸ்வி சில கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

‘ஒரு மன்னன் தர்மத்தின் பாதையில் சென்று, ராஜ்ஜியத்தை ஒழுங்காக நடத்தி, சீராக நிலை பெறச் செய்து, மக்களைக் காப்பாற்றி, அதன் பிறகு, தன்னுடைய வயோதிக பருவத்தில் மகனிடம் ராஜ்ஜிய பாரத்தை ஒப்படைத்து விட்டுக் கானகம் செல்வது, அவனுக்குப் பெருமை சேர்க்கும். அதை விடுத்து, உடனேயே ராஜ்ஜிய பாரம் என்னும் பொறுப்பைச் சுமக்க மறுத்து, காட்டிற்குச் சென்று விடுவது, அவனுக்குப் புகழைத் தராது’ என்று அவர் விளக்கினார்.

அதன் பிறகு, வியாசர் பேசத் தொடங்கினார். ‘தருமபுத்திரனே! இல்லற தர்மத்தை நீ தாழ்வாகக் கருதக் கூடாது. பிரம்மச்சரியம், இல்லறம், வனத்தில் வாழ்தல், சந்நியாசம் – என்ற நான்கு நிலைகளில் இல்லற தர்மத்தைப் பின்பற்றுகிறவன் தான், மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களைக் காப்பாற்றுகிறான். இல்லற தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாவிட்டால், மற்ற மூன்று தர்மங்களும் நசித்துப் போகும். ஆகையால், இல்லற தர்மம் மிகவும் உயர்வானதே!

‘செய்து விட்ட முயற்சியில் திருப்தியடையாமல், மேலும் மேலும் முயற்சி செய்வது, யாகங்களை நடத்துவது, பாரபட்சமின்றி நீதி வழங்குவது, நன்னடத்தையிலேயே நிலைத்து நிற்பது, தயை தாட்சண்யமின்றி குற்றங்களுக்கு நீதி வழங்குவது; இவற்றைக் கடைப் பிடிக்கும் அரசர்களுக்கு, இவ்வுலகிலும், மேலுலகிலும் மேன்மை கிட்டும்.

‘தருமபுத்திரனே! ராஜ்ஜிய பாரத்தை எந்த வகையில் நடத்திச் சென்றால், உனக்கு ஒரு பாவமும் சேராதோ, அந்த வழியைச் சொல்கிறேன் கேள்!

சாட்சியங்களின் மூலமாகவும், அனுமானத்தின் மூலமாகவும் உண்மையை அறிந்து, குற்றங்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும். மக்கள் சம்பாதிக்கும் தொகையில் ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த வரியைப் பெற்றுக் கொண்டு, மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆசையையும், கோபத்தையும் துறந்தவனாக, எல்லோருக்கும் தகப்பன் போல இருந்து பாரபட்சமின்றி ஆட்சியை நடத்துகிற அரசனுக்கு எந்தப் பாவமும் வந்து சேராது.

‘நீதி சாத்திரத்தையும், தர்க்க சாத்திரத்தையும் நன்றாகக் கற்றறிந்தவர்களையும், அனுபவ அறிவு உள்ளவர்களையும் ஆலோசகர்களாக ஒரு அரசன் நியமிக்க வேண்டும். வேதங்களை நன்கு அறிந்தவர்கள் மூலமாக, யாகங்களைச் செய்விக்க வேண்டும். மதிக்கத் தகுந்தவர்களை மதிக்காமலும், தன்னடக்கமில்லாமலும், அகங்காரம் கொண்டு செயல்படும் அரசனை, உலகம் இகழும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, நீ ஆட்சி புரிந்தாயானால், அது உனக்கு மேன்மையைத்தான் தரும். ஆகையால் தர்மம் அறிந்த நீ, ராஜ்ஜிய பாரத்தை ஏற்று, நல்ல முறையில் ஆட்சி செய்வாயாக!’

இவ்வாறு வியாசர் அறிவுரை கூறிய பிறகும் கூட, தருமபுத்திரர் மனம் சமாதானம் ஆகவில்லை. ‘ராஜ்ஜிய பாரத்தை நினைத்து, அதனால் கிட்டும் புகழை நினைத்து, என் மனம் மகிழ்ச்சி அடையவில்லை. கதறி அழுகின்ற பெண்களின் அழுகுரல் தான் என் மனதில் நிற்கின்றது. இதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை’ என்று அவர் கூறினார்.

தர்மத்தை அறிந்த வியாசர் மீண்டும் பேசினார். ‘தருமபுத்திரா! மரணம் என்பது தெய்வத்தால் விதிக்கப்படுவது. அதை மாற்றக் கூடிய திறன் மனிதனுக்கு இல்லை. மனிதன், கல்வியினாலோ, உடல் வலிமையினாலோ, ஒரு காரியத்தை, அதற்குரிய நேரம் கிட்டாத போது செய்து முடித்து விட முடியாது. யாராலும் மாற்ற முடியாத காலத்தின் நடமுறையினால், இந்த யுத்தம் நேரிட்டது. அதில் பலர் மடிந்தார்கள். அதற்கு நீ காரணம் என்று நினைத்து வருந்துவதில் அர்த்தமில்லை.

தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பைச் செவ்வனே செய்து முடிப்பது தன்னுடைய கடமை என்று உணர்ந்து, அதை ஒழுங்காக நிறைவேற்றுவதால் ஒரு மனிதன் மேன்மை பெறுகிறான். ராஜ்ஜிய பாரத்தை ஒழுங்காக நடத்தி, எல்லா மக்களுக்கும் முறையான நீதி வழங்கி, தான தர்மங்களைச் செய்து, நீ மேன்மை பெறுவாயாக!’

வியாசர் கூறிய மொழிகளைக் கேட்ட தருமபுத்திரர், ‘பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலானோர் இறப்பதற்குத் தானே காரணமாகி விட்டதை நினைத்து மனம் வருந்திப் பேசினார்.

தருமபுத்திரரின் துக்கம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட வியாசர் மீண்டும் சொன்னார். ‘யுதிஷ்டிரா! பிள்ளைகள் வேண்டாம் என்று நினைக்கிற ஏழைக்கு பல பிள்ளைகள் பிறந்து விடுகின்றன. பிள்ளைச் செல்வம் வேண்டும் என்று பரிதவிக்கும் ஒரு பணக்காரனுக்கு, குழந்தை பிறப்பதில்லை. பெருஞ்செல்வம் படைத்தவனுக்குப் பசி ஏற்படுவதில்லை. அதனால், விரும்பிய உணவை உட்கொள்ள முடிவதில்லை. ஒரு ஏழைக்கு பெரும் பசி ஏற்படுகிறது. எதைத் தின்றாலும் அது அவனுக்கு ஜீரணமாகி விடுகிறது. இவையெல்லாம் விதியின் அற்புதமான செயல்கள்! விதிக்கு வசப்படாத மனிதனே கிடையாது.

’காற்று, ஆகாயம், சந்திரன், சூரியன், பகல், இரவு இவற்றையெல்லாம் எவன் படைக்கிறான். குளிரும், மழையும், வெயிலும் யாரால் உண்டாகின்றன. காலத்தால் நடக்கும் இவை போலவே, மனிதர்களுக்குச் சுகமும், துக்கமும் காலத்தால் ஏற்படுகின்றன. மனிதனால் மரணத்தைத் தவிர்த்து விட முடியாது. இந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு, உன்னுடைய சோகத்தை விட்டு விடு. உன்னால் ஜெயிக்கப்பட்ட பூமியை ஒழுங்காக நிர்வகித்து, ராஜ்ஜிய பரிபாலனம் செய். ராஜ்ஜியத்தையே அவமதிப்பது போல் காட்டுக்குச் சென்று விடாதே! உன்னுடைய கடமையிலிருந்து நழுவி விடாதே’.

இப்படி வியாசர் கூறியதைத் தொடர்ந்து, அர்ஜுனன் கேட்டுக் கொண்டதன் பேரில், கிருஷ்ணரும், தருமபுத்திரருக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். மாபெரும் வீரர்களும், தர்மம் தவறாதவர்களுமாகிய பல மன்னர்களின் கதைகளை விவரமாகக் கூறிய கிருஷ்ணர், அவர்களுக்கெல்லாமே மரணம் நேரிட்ட போது, துரியோதனாதிகள் மரணமடைந்ததை நினைத்து யுதிஷ்டிரர் துக்கிக்கக் கூடாது என்று எடுத்துரைத்தார். இப்படி, சகோதரர்களும், தேவஸ்தானரும், வியாசரும், கிருஷ்ணரும், பல முறை சொன்ன அறிவுரைகளைக் கேட்ட பிறகு, தருமபுத்திரரின் மனம் துக்கத்திலிருந்து விடுபடத் தொடங்கியது. தனது பொறுப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை அடுத்த பகுதியில் காணலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2