ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 117

                                         யுதிஷ்டிரருக்கு பட்டாபிஷேகம்

மேகலா : ராஜ நீதியையும், மற்ற தர்மங்களையும் விவரித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரரைப் பார்த்து, வியாசர் சொன்னார், ‘எல்லா தர்மங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உனக்கு இருந்தால், எல்லோருக்கும் மூத்தவரான பாட்டனார் பீஷ்மரிடம் போய்க் கேள். பீஷ்மர், இந்திரன் முதலிய தேவர்களை எல்லாம் நேரில் கண்டவர். பிரகஸ்பதியிடமிருந்தே ராஜ நீதியை அறிந்து கொண்டவர். சுக்ராச்சாரியார் அறிந்த நீதி சாத்திரத்தை பீஷ்மரும் முழுமையாக அறிந்திருக்கிறார். வசிஷ்டரிடமிருந்தே வேதங்களையெல்லாம் கற்றவர் அவர். மார்க்கண்டேயரிடமிருந்து சந்நியாச தர்மத்தை அறிந்து கொண்டவர் அவர். பரசுராமரிடமிருந்தும், இந்திரனிடமிருந்தும் ஆயுதக் கலையை அறிந்தவர். தான் விரும்பிய போது மரணம் தன்னை வந்து சேரும் என்ற நிலையைப் பெற்றவர், மனிதர்களுள் பீஷ்மர் ஒருவரே! அவர் உயிரை விடுவதற்கு முன் அவரை அணுகி உனது சந்தேகங்களைக் கேட்டால், அவர் அவற்றைத் தெளிவிப்பார்.

இப்படி வியாசர் கூறிய போது தருமபுத்திரர், ‘நேர்மையாக யுத்தம் புரிந்த பீஷ்மரை, தந்திரமாக வெல்லும் வழி தேடிய நான், அவரை இந்த நேரத்தில் அணுகி எப்படி உபதேசம் கேட்பது‘ – என்று மனதில் சங்கடமாக நினைத்தார். அப்பொழுது கிருஷ்ணர், ‘அரசனாகப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட பின்னர், தயங்காமல் பீஷ்மரை அணுகி தர்மங்களை அறிவதுதான் நல்லது என்று எடுத்துக் கூற, தருமபுத்திரர் சம்மதித்தார்.

அதன் பின்னர், பதினாறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் தருமபுத்திரர் ஏறினார். பீமன் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்தான். அர்ஜுனன் வெண்குடை தாங்கினான். நகுல-சகதேவர்கள் சாமரங்களை வீசினார்கள். இப்படிப் பஞ்ச பாண்டவர்களும் அந்த ரதத்தில் ஏறிய போது, பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்ந்தது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. யுதிஷ்டிரருடைய ரதம் ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றது. அவர்களை மற்றொரு ரதத்தில் கிருஷ்ணர் பின் தொடர்ந்தார். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி போன்ற பலரும் நகரை நோக்கிச் சென்றார்கள்.

ஹஸ்தினாபுரத்து மக்கள், யுதிஷ்டிரர் வரவை எதிர்பார்த்து நகரை அலங்கரித்தார்கள். அரண்மனையும் அலங்கரிக்கப்பட்டது. நகரத்து மக்கள் எல்லோரும், தெருக்களில் குவிந்தார்கள். பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்ட யுதிஷ்டிரரும், அவருடைய சகோதரர்களும் பெரியவர்களை வணங்கினார்கள். வேத கோஷங்கள் ஒலிக்க, வாத்தியங்கள் முழங்க, கட்டியம் கூறுவோரின் வெற்றி முழக்கங்கள் பேரோசையாக எழும்ப, யுதிஷ்டிரர் அரச சபையில் நுழைந்தார்.

அப்போது, ‘சார்வாகன்’ என்ற அந்தணன், கூட்டத்திலிருந்து, யுதிஷ்டிரரைப் பார்த்து, ‘குந்தியின் மகனே! உறவினர்களைக் கொலை செய்த நீ, உலகினால் இழிவாகக் கருதப்படுகிறவன். பெரியோர்களை எல்லாம் நேர்மையில்லாத வகையில் யுத்தத்தில் கொன்று குவித்த நீ, ஆட்சிப் பொறுப்பை ஏற்க அருகதையற்றவன். நீ வாழ்வதை விட, சாவதே மேல்’ என்று உரக்கக் கூவினான்.

இதைக் கேட்டு, எல்லோரும் அதிர்ச்சியுற்று நிற்க, தருமபுத்திரர், ‘நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும். நான் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சிப் பீடத்தில் அமரவில்லை. மிகவும் துக்கத்தோடுதான் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று மனம் நொந்து கூறினார்.

உடனே, அந்த அந்தணர் கூட்டத்தில் இருந்த பலரும், ‘அரசே! சார்வாகன், துரியோதனனுக்கு நண்பனாக இருந்தவன். அதனால் அப்படிப் பேசினான். யுத்தத்தில் ராஜ்ஜியத்தை அடைந்திருக்கும் நீர், எல்லா மக்களுக்கும் நல்லதைச் செய்து, பெரும் புகழுடன் விளங்கப் போகிறீர்’ என்று கூறி, சார்வாகனை சபித்தார்கள். அவன் அங்கேயே எரிந்து வீழ்ந்தான். கிருஷ்ணரும், ’சார்வாகன் கூறியதை நினைத்து வருந்தத் தேவையில்லை’ என்று எடுத்துக் கூறினார்.

அதன் பின்னர், யுதிஷ்டிரர், தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு மேடையில், கிழக்கு நோக்கி அமர்ந்தார். அவருக்கு நேர் எதிராக, கிருஷ்ணரும், சாத்யகியும் மற்றொரு பொன் மேடையில் அமர்ந்தார்கள். யுதிஷ்டிரருக்குப் பின்புறமாக அர்ஜுனனும், பீமனும் பல ரத்தினங்களினால் ஆன மேடையில் அமர்ந்தார்கள். யானைத் தந்தத்தினால் ஆன பீடத்தில், நகுலனும், சகாதேவனும், குந்தியும் அமர்ந்தார்கள். அருகில் மற்றொரு மேடையில், திருதராஷ்டிரனும், காந்தாரியும் அமர்ந்தார்கள்.

பட்டாபிஷேகத்திற்குரிய மண், பொன், வெள்ளி, தாமிரம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட பூரண கலசங்களும், பூ, பால், தயிர், நெய் முதலிய பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. பிறகு, பாண்டவர்களுக்குப் புரோகிதரான தௌமியர், புலித்தோலினால் மூடப்பட்ட ஒரு மேடையை அமைத்தார். அதன் மீது, தருமரும், திரௌபதியும் அமர்ந்தார்கள். கிருஷ்ணர், தமது சங்கினால், யுதிஷ்டிரருக்கு அபிஷேகம் செய்வித்தார். அதைத் தொடர்ந்து திருதராஷ்டிரனும், மற்றவர்களும் அபிஷேகம் செய்தார்கள். வாத்தியங்கள் முழங்கின. வேத கோஷம் முழங்கியது. அரசனாகப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட யுதிஷ்டிரர், எல்லோராலும் வாழ்த்தப்பட்டார்.

வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்ட தருமபுத்திரர், எல்லோரையும் பார்த்து, ‘எங்களுக்கெல்லாம் இப்போது தெய்வமாக விளங்குகிறவர் திருதராஷ்டிர மன்னர். எல்லோரும் திருதராஷ்டிரரின் உத்தரவுப்படியே நடந்து கொள்ள வேண்டும். அரசனாக நான் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டாலும், உங்களுக்கும் எனக்கும் திருதராஷ்டிர மன்னரே அரசராவார்’ என்று கூறி விட்டு, அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார்.

அதன் பிறகு, இளவரசுப் பட்டத்தை பீமனுக்கு சூட்டினார். விதுரர், அரசரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். வரவு செலவுகளைக் கவனிக்கும் பொறுப்பு, சஞ்சயனிடம் ஒப்படைக்கப்பட்டது. சேனைகளை கவனிக்கும் பொறுப்பு, நகுலனிடமும், அந்நியப் பிரதேசங்களோடு கொள்ள வேண்டிய உறவுமுறைகளைக் கவனிப்பதற்கும், அங்கு ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காகவும், அர்ஜுனனுக்கு அதிகாரம் தரப்பட்டது. சகாதேவன், அரசனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். வைதிக காரியங்களை நடத்தும் பொறுப்பு, தௌமியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும் வெவ்வேறு அரண்மனைகளை ஒதுக்கி விட்டு, யுதிஷ்டிரர், நிர்வாகக் காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

அதன் பின்னர், கிருஷ்ணரைக் காண வேண்டி, அவர் இருக்குமிடத்திற்குச் சென்ற போது, அங்கே கிருஷ்ணர், மௌனமாக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். யோக நிலையில் கிருஷ்ணர் அமர்ந்திருப்பது யுதிஷ்டிரருக்கு வியப்பைத் தந்தது. ‘நீங்கள் தியானத்தில் அமர்ந்திருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. தியான நிலையில் நீர் அமர்ந்திருப்பது ஏன் என்ற காரணத்தை எனக்கு விளக்குவீராக. இந்த உலகத்தைப் படைப்பவரும் நீரே; இந்த உலகத்தை அழிப்பவரும் நீரே! ஆரம்பமும், முடிவும் இல்லாத நீர், அதன் காரணத்தை விளக்குவீராக’ என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், ”அணையப் போகும் நெருப்புப் போல ஜொலித்துக் கொண்டு, அம்புப் படுக்கையில் படுத்திருக்கிற பீஷ்மர், தன்னுடைய மனதில் என்னை நினைக்கிறார். என் மனம் அவரிடம் சென்றது. அதுதான் என் நிஷ்டைக்குக் காரணம். நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்தவரும், கல்விக்கெல்லாம் இருப்பிடமாக இருப்பவரும், மனதைக் கட்டி என்னைச் சரணடைந்தவருமான பீஷ்மரின் பால் என் மனம் சென்றது. மனிதர்களில் உயர்ந்தவரான பீஷ்மர், மரணமடைந்தால், இந்த பூமியானது, சந்திரன் இல்லாத இரவு போல இருளடைந்து விடும். கல்வியின் தரம் குறையும். ஆகையால், இப்போதே அவரிடம் சென்று, அவரை வணங்கி நின்று, க்ஷத்திரிய தர்மத்தையும், வைதிக தர்மத்தையும், ராஜ நீதியையும், மற்ற எல்லா தர்மங்களையும் உபதேசிக்குமாறு கேட்டுக் கொள்ளும்’

  • என்று கிருஷ்ணர் கூறவும், அதனை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரர், கிருஷ்ணரையும் உடன் வருமாறு அழைத்தார். கிருஷ்ணர், யுதிஷ்டிரர், அவரது சகோதரர்கள், கிருபர் போன்றவர்கள் ரதத்தில் ஏறி, குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்கள்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1