ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 128
மேகலா : மகாபாரதம் முழுவதுமாக வாசித்துக் கொண்டு வரும் பொழுது, ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்காக, ‘கீதை’ என்னும் வேத மொழியைப் படிக்கும் பொழுது, ‘முக்குணங்களினால் தான் செயல்கள் நடைபெறுகின்றன. இந்த செயல்களினால் தான் உலகம் இயங்குகிறது. இந்த முக்குணங்களும் என்னால் படைக்கப்பட்டனவையே என்றாலும், இந்த முக்குணங்களினால் ஏற்படும் செயல்களுக்கு நான் பொறுப்பாளி கிடையாது’ என்ற வாசகத்தை வாசிக்கும் போது புரிகிறது. கடவுளே எல்லாவற்றையும் கொடுத்து விட்டால், மனிதனின் பொறுமை, திறமை, முயற்சி, முன்னேறுதல், மேன்மையுறுதல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்று உணர்ந்து கொண்டேன். கடவுள், நம்முள் ஆத்மாவாகக் குடியிருந்து நம்மை இயக்குகிறார் என்று உணருகிறேன் கிருஷ்ணா. இந்த உண்மை தெரிந்த பின், கிருஷ்ணரின், பாண்டவர்களுக்குச் செய்யும் உதவிகள் அனைத்திலும், பாண்டவர்களின் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தி தெரிகிறது. துன்பம் நேரும் போது, தெய்வத்தைச் சரணடையும் தன்மை தெரிகிறது. தர்மத்தின் பக்கமே தெய்வம் துணை நிற்கும் என்பது புரிகிறது.
திரௌபதியை, சபா மண்டபத்திற்கு துச்சாசனன் இழுத்து வரும் போது, உறவினன் என்ற காரணம் சொல்லி வராத கிருஷ்ணர், ‘கோவிந்தா, கோபாலா’ என்று திரௌபதி கதறும் பொழுது, பதறி ஓடி வந்து, துச்சாசனன், அவள் சேலையைப் பற்றி இழுக்க இழுக்க, புதுப் புது சேலையால் அவள் மேனி மறைத்து, மானம் காத்து, துச்சாசனனை களைப்புறச் செய்த செயல், என்னை அப்படியே மெய் சிலிர்க்கச் செய்கிறது கிருஷ்ணா. எனக்கு ஒரு பாடல் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா….
”தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்”
திரௌபதியை, சபைக்கு இழுத்து வரும் முன்னமேயே, கண்ணன் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று கேட்பவருக்கு ஒரு வார்த்தை; மனிதன் ஆசைக்கு வசப்பட்டவன். யுதிஷ்டிரன் ஆசையின் வசப்பட்டதால், சூதாடினான். அப்பொழுது கண்ணனை நினைக்கவில்லை; ஏன்…, சான்றோர்கள் கருத்தைக் கூட ஏற்கவில்லை. சூதில் தன் செல்வத்தை இழந்தான்; அப்பொழுதும் கண்ணனை நினைக்கவில்லை. மானத்தை இழந்து கூனிக் குறுகி நின்றான். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் இழந்தான்; அப்பொழுதெல்லாம் கண்ணனை நினைக்கவில்லை.
அந்நியன் ஒருவன் பாஞ்சாலியின் முந்தானையைப் பற்றி இழுக்கும் போது கூட, கையாலாகாத தர்மன், வேதனைப்படக்கூட திராணியில்லாது தலை குனிந்துதான் இருந்தான். பெண்மையின் உந்துதலினால், உதவிக்கு யாரும் இல்லாத அந்தப் பெண்மை, பரிதவித்து கூக்குரலிட்டது. ‘கிருஷ்ணா! கோவிந்தா!’ என்ற குரலைக் கேட்டவுடன், மின்னலாய் வந்து மானம் காத்த கிருஷ்ணனின் செயல், அமானுஷ்யமானது; தெய்வச் செயல் என்று மட்டும் கூறி விட முடியாது. இதுதான் நியாயமும் கூட. இறைவன் கூப்பிட்டால் ஓடி வருவான்.
இயற்கையின் நிகழ்வுகளுக்கு, இறைவனே காரணம்; மனிதனின் செயல்களுக்கு, இறைவன் எப்படி காரணமாக முடியும் என்பது புரிகிறது. கிருஷ்ணா! உன்னைச் சரணடைவதே என் நிம்மதி என்று புரிந்து கொண்டேன்.
ஒரு குழந்தையை, அதனுடைய தாய் வளர்க்கும் பொழுது, அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும், குழந்தை தானாக குப்புற விழும் பொழுதும், தவழும் பொழுதும், எழுந்து நிற்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், அம்மா, கிட்ட இருந்து அதன் செய்கையை ஊக்குவிக்கத்தான் செய்ய வேண்டும். மாறாக, தானே குழந்தையை குப்புறப் போடுவதும், தூக்கிச் செல்வதுமாக இருந்தால், குழந்தை எப்படி வளரும்? கடவுளும் அப்படித்தான். குழந்தைக்கு ஆபத்து என்று வரும் பொழுது, அம்மா ஓடி வந்து அரவணைப்பது போல, கடவுளும், மனிதனுக்கு தேவையான நேரத்தில், ஓடி வந்து மனிதனை அரவணைப்பார். கிருஷ்ணரை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
சோதனையில் மட்டுமல்ல, தர்ம சங்கடத்தில் கூட, கிருஷ்ணர் ஓடி வந்து உதவி செய்ததைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறேன். பாண்டவர்கள், வனவாசத்தின் போது, துரியோதனனின் சதியால், துர்வாசர், பாண்டவர்கள் குடிலுக்கு விருந்தினராக வந்தார். வந்த சமயத்தில், திரௌபதி அனைவருக்கும் உணவளித்து தானும் சாப்பிட்டாள்; அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்தாள். அட்சய பாத்திரம், திரௌபதி சாப்பிட்டு முடித்த பின்பு, அன்றைய தினத்திற்கான அதிகப்படியான சாப்பாட்டைக் கொடுக்காது. அச்சமயத்தில் துர்வாசரைப் பார்த்தவுடன், திரௌபதி செய்வதிறியாது திகைத்து விட்டாள். துர்வாசர், ‘நதியில் நீராடி வருகிறேன்’ என்று கூறி சென்ற பின், திரௌபதி, கிருஷ்ணரை மனதால் நினைக்க, கிருஷ்ணரும் ஓடோடி வந்து விட்டார். வந்தது மட்டுமல்லாமல், ‘எனக்குப் பசிக்கிறதே; சாப்பிட ஏதாவது கொடேன்’ என்று பரபரப்பாய் அடுக்களைக்குள் சென்று, கழுவிக் கவிழ்த்திய அட்சய பாத்திரத்தை எடுத்து, அதில் ஒட்டியிருந்த ஒரு சோற்றுப் பருக்கையை, நிறைவான மனதுடன் உண்ணப் போக, அங்கு துர்வாசருக்கு, புளித்த ஏப்பமே ஏற்பட்டது. இனி சாப்பிட்டால் உணவு வாந்தியாய் வெளியில் வந்து விடும் என்ற நிலையில், பாண்டவர்களைச் சந்திக்காமலேயே கானகத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணரின் நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல, பாண்டவர்களின் மீது அவருக்கிருந்த கரிசனமும் தெரிகிறது. எனக்கு ஒன்று தோன்றுகிறது கிருஷ்ணா! மனிதர்களுக்கு சோதனை காலம் நடக்கும் போது, கடவுளைக் கூப்பிட்டால், சோதனை விலகுமா, விலகாதா என்பதைக் காட்டிலும், சோதனையைத் தாங்கும் தைரியம், மனிதனுக்கு வருகிறது. ‘தைரியமாய்’ கடவுள் நம்முடன் இருக்கும் போது, எத்தனை சோதனையென்றாலும் தாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லத் தோன்றுகிறது…. மேலும் நமக்கு ஏற்பட்ட சோதனையை, நாம் தான் விலக்க முடியும். இறைவனின் பேரருள், அந்தச் சோதனையைக் கடக்கும் தைரியத்தையும், வலிமையையும் கொடுக்கும். அப்படி கடக்கும் போது, மனிதனுக்கு தைரியத்தோடு, பக்குவமும், ஆற்றலும் வளர்கிறது என்பது நிஜம். இந்த நுணுக்கமான வாழ்க்கைத் தத்துவத்தை மகாபாரதம் முழுவதும், கிருஷ்ணர், மனிதர்களோடு வாழ்ந்து கற்றுக் கொடுக்கிறார் என்பதே நிஜம். ஓரிடத்திலாவது அழைத்த குரலுக்கு வராமல் இருந்ததுமில்லை; ஓரிடத்திலாவது, மனிதனின் செயல்களுக்கு மீறிய magic என்பதுமில்லை….
(தொடரும்)
Comments
Post a Comment