வழிப்போக்கர்கள் - பகுதி 2

மேகலா : ஆம் கிருஷ்ணா….. ஸ்ரீரங்கத்தில், வைஷ்ணவியாக கோலோச்சிய அன்னையின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, அன்றைய ஜீயர், அன்னையை வேறு இடத்தில் கொண்டு போய் வைக்கச் சொல்ல, மக்கள், திருக்கண்ணபுரத்தில் அன்னையைக் கொண்டு போய் வைக்கின்றனர். வழிப்போக்கர்களால், மாரியம்மனாக வழிபடப்பட்டாள். விஜயநகர மன்னர்கள், சோழ நாட்டுக்குப் படையெடுத்து வந்த சமயம், அன்னையிடம் வேண்டிக் கொண்டார்கள். போரில் வெற்றி பெற்றால், இந்த இடத்தில் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டனர். போரில் வென்ற மன்னர்கள், அன்னைக்கு கோயில் கட்டி, எல்லோரும் வழிபடும்படிச் செய்தார்காள். எல்லாச் சமயங்களிலும், பக்தர்களைக் காப்பாற்றுவதால், அந்த அன்னை, மக்களுக்காக சமயபுரத்தாளாக வணங்கப்பட்டாள்…..

கிருஷ்ணர் : வாவ்…. இந்த வழிப்போக்கர்களுக்கும், நம்முடைய கோயில்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…., கோயில்களில் பிரம்மாண்டமாக கொலு வீற்றிருக்கும் இறைமூர்த்தங்கள், வழிப்போக்கர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்றாலும்…, நம்ம பிள்ளையார், எல்லா ஊர்களிலும், இந்த வழிப்போக்கர்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே, அரச மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார் என்பது எத்தனை சுவார்ஸ்யமானது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஆமாம்…., ஆமாம்…., அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்…, வழிப்போக்கர்களை மட்டுமா வேடிக்கை பார்க்கிறார்…… அரச மரத்தடியில், வேலை வெட்டிக்குச் செல்லாமல், வம்பு அரட்டை பேசுபவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்.

மேகலா : கிருஷ்ணா…., அந்தக் காலங்களில், வீட்டின் முன்புறமாக, திண்ணை வைத்துக் கட்டியிருப்பார்கள். அது, எதற்கு என்று தெரியுமா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : அந்தக் காலங்களில், Star hotels-லாம் கிடையாது. வியாபார நிமித்தமாகவோ, வேறு வேலை காரணமாகவோ வெளியூருக்குச் செல்பவர்கள், எங்கு தங்குவார்கள்? அப்படி வருபவர்கள், இரவு நேரங்களில் இளைப்பாறிச் செல்லட்டும் என்றுதான், அன்றைய காலத்து வீடுகளின் முன்புறம் திண்ணை வைத்துக் கட்டியிருப்பார்கள். இப்படித் தங்கும் வழிப்போக்கர்களுக்கு, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், பசிக்கு உணவு அளித்து உபசரிக்கவும் செய்வார்கள். இதற்கு நம் புராணத்தில் ஒரு கதையும் உண்டு…. உனக்கு ஞாபகம் இருக்குதா மேகலா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. வெளியூரிலிருந்து, மதுரையில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரக் கடவுளை தரிசிக்க வந்திருந்த வழிப்போக்கர் ஒருவர், மதுரை வீதியில், இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது, பாண்டிய மன்னன், இரவு நேரத்தில், மாறுவேடம் பூண்டு ஊர்க்காவலுக்காக ரோந்து வந்து கொண்டிருந்தான். அந்தக் காலங்களில், மன்னர்கள் மாறுவேடத்தில் ஊர்க்காவல் செல்வதுண்டு. நாட்டின் நடப்பு, நிறைகுறைகள், மக்களின் அபிப்பிராயம் இவற்றை அறிவதோடு, இரவு நேரத்துக் குற்றங்களைக் களைவதற்கும்…, ஒற்றர்கள் நடமாடினால், அவர்களைப் பிடித்துத் தீர விசாரிப்பதற்கும், மன்னர்கள் ரோந்து வருவதைக் கடமையாகச் செய்தார்கள். அப்படி வந்த பாண்டிய மன்னன், வெளியூரிலிருந்து வந்திருந்த வழிப்போக்கரைப் பார்த்து, அவரை நலம் விசாரித்தான். ஒரு வேளை வழிப்போக்கன், எதிரி நாட்டின் ஒற்றனாக இருக்கலாம் என்று மன்னனுக்கு சந்தேகமாகக் கூட இருக்கலாம்….. வழிப்போக்கனுடைய பேச்சும், அறிவும், மன்னனுக்கு, அவருடன் பேசுவதில் ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டது. தொடர்ந்து 2, 3 நாட்களாக அந்த வழிப்போக்கனிடம் பேச்சுக் கொடுத்த மன்னன், ‘உணவு சாப்பிட்டீர்களா, பசி நீங்கியதா’ என்று கேட்டான். அதற்கு அந்த வழிப்போக்கன், ‘பாண்டிய மன்னன் ஆட்சியில், எந்த ஜீவராசியும் பசித்திருப்பதில்லை; கோயிலில் பாலன்னம் கொடுக்கப்பட்டது…., நிறைவாக உண்டேன்’ என்று சொன்னான். மன்னன், அந்த வழிப்போக்கன் வாயிலாக, தன் நாட்டில் நடக்க வேண்டிய வேலைகள் எல்லாம் சரிவர நடப்பதை அறிந்து திருப்தியுற்றான்.

கிருஷ்ணர் : வழிப்போக்கர்கள் மூலமாக முக்கியமான தகவல்களைக் கூட அறிந்து கொள்ளலாம்…. அப்படித்தானே…..

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. வழிப்போக்கர்கள், செல்லும் வழியில், தான் அறிவதை, நிறைவாக இருந்தாலும், குறையாக இருந்தாலும் பதிவு செய்பவர்கள்தானே கிருஷ்ணா. பல இடங்களில் இருந்து வரும் யாத்ரீகர்களின் பார்வையில் தான் நம்முடைய கலாச்சாரம், வாழ்க்கை முறை, வியாபாரம், உணவுப் பழக்க வழக்கங்கள், இவையெல்லாம் செய்தியாகப் பார்க்கப் படுகின்றது. தகவல்களாகப் பரிமாறப்படுகின்றன. சொல்லப் போனால், இந்த யாத்ரீகர்கள் தான், உலகத்தின் மறுபக்கத்தை, மக்களிடம் எடுத்துச் சொல்லி தகவல் பரிமாற்றமும் செய்திருக்கிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : எந்தக் காலங்களிலும், புதிய உலகம், புதிய சூழல், புதிய பார்வை என்று அறிவதற்கு மனிதன் ஆவல் மிகுந்தவனாகவே இருந்திருக்கிறான். ஊர் விட்டு ஊர் செல்வதிலும், ஊர் சுற்றிப் பார்ப்பதிலும், இந்தக் காலம் மட்டுமல்ல, அந்தக் காலத்திலும் மனிதன் தயாராகவே இருந்திருக்கிறான். அதனால் தான், போகும் வழிகளில் மன்னர்கள், சத்திரம், சாவடி, ஏற்படுத்தியிருக்கிறார்கள். குடும்பத் தலைவர்கள், வீட்டுக்கு வெளியில் திண்ணையைக் கட்டி, வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

மேகலா : இந்தக் காலத்தில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, போகும் வழியெல்லாம், ‘கும்பகோணம் டிகிரி காபி’ என்று board மாட்டிய காபிக்கடை, 1 கிலோமீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் இருக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’ தமிழ்நாடு முழுக்க, அதைக் கடந்து கர்நாடகாவிலும், ஒரே சுவையுடன் சக்கைப்போடு போடுகிறது. ‘ஸ்டார் பிரியாணிக்கடை’, ‘தலப்பாக்கட்டி பிரியாணி’ என்று, எங்கு சாப்பிட என்று வழிப்போக்கர்களாகிய நாங்கள் தடுமாறித்தான் போகிறோம் கிருஷ்ணா… அன்றைய காலங்கள் மாதிரி சத்திரம், சாவடி என்பது போய், இன்று, தங்குவதற்கு லாட்ஜ்…., இளைப்பாறுவதற்கு ’rest-room’-உடன் கூடிய ’food-court’ என்று சகல சௌகர்யங்களும் இருப்பதால், பிரயாணங்களும், சுவாரஸ்யமாகவும், சௌகர்யமாகவும் இருக்கிறது கிருஷ்ணா…. அந்தக் காலம் மாதிரி, வழியில் கள்வர் தொல்லை இருக்குமோ, தனியாகப் பயணம் செய்வதற்குப் பயமாக இருப்பதால், பாடிக் கொண்டே சென்றோம் என்றெல்லாம் கிடையாது கிருஷ்ணா. பயமாக இருப்பதால், , பாடிக் கொண்டே சென்றார்கள் என்பது போய், வழிப்பயணத்தில் கவலை மறந்து ஜாலியாக இருப்பதற்கு, பஸ்சிலும், காரிலும் சினிமா பார்த்துக் கொண்டே வருகிறார்கள் கிருஷ்ணா. எந்த ஊருக்குச் சென்றாலும், வழி நெடுக கார்களும், வேன்களும் தான்… செல்லும் இடங்களிலெல்லாம் கூட்ட நெரிசல் தான். சாப்பிடும் இடத்திலும், பல சமயங்களில் table கிடைக்காமல் அவதிதான். ‘வழிப் பயணம்’ என்பது எல்லோரும் அனுபவிக்கக் கூடிய ‘உல்லாசப் பயணம்’ என்றாகி விட்டது. இதனால் என்ன ஆச்சு தெரியுமா கிருஷ்ணா….? Travel companies நடத்துபவர்கள்…., 50,000 ரூபாயில் travel package – நான்கு நாட்கள் flight-ல் பயணம், சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் என்று விளம்பரப்படுத்தி, மக்களுக்கு tempt-ஐ ஏற்படுத்துகிறார்கள். இது மாதிரி நிறைய travel agencies, travel package விளம்பரப்படுத்துகிறார்கள். ‘புனித யாத்திரை’ என்று, ‘காசி’, ‘அலஹாபாத்’ என்று பட்டியல் போட்டு, கங்கையைக் காட்டுகிறார்கள்; பனி படர்ந்த இமயமலையைக் காட்டுகிறார்கள்… நெருக்கடியான நகரங்களில் வாழும் மக்களும், புனித யாத்திரை கிளம்பி, நதிகளுக்கு ஆராதனை செய்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள். கங்கோத்ரியைப் பார்த்து, பரமசிவனார் தலைமுடியில் சிக்கிப் பிரவகித்த கங்கையை, பரவசத்துடன் பார்க்கிறார்கள். இந்த புனித யாத்திரைகள் இல்லாமல் இருந்தால், தென் பகுதி மக்கள் பலருக்கு, சிறப்பான பல தரிசனங்கள் கனவாகவே போயிருக்கும். கைலாய மலையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில், பாத யாத்திரையாகப் பயணம் செய்யத் துணிந்த நாவுக்கரசர், நடந்து நடந்து, உடல் இளைத்து, தசைகள் தேய்ந்து, எலும்புகளும் உருகி, இறையனாரால் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு கூட, நாவுக்கரசரின் புனித யாத்திரை கொடுத்த அருமையான தகவல் தானே… கொஞ்ச காலங்களுக்கு முன்பாக, அதாவது travel agencies அதிகமாக வராத காலங்களில், புனித யாத்திரை என்பது, தென் பகுதி மக்களுக்கு, ‘காசி யாத்திரை’; வட பகுதி மக்களுக்கு ‘ராமேஸ்வரம்’ மட்டும் தான். குடும்பம் குடும்பமாக, train-ல் பயணம் செய்வது, அவரவர்களாக தங்கும் வசதி பார்த்து, சாமி தரிசனம் பண்ணி, ஒரு முன்னேற்படு இல்லாமல் பயணம் செய்வார்கள். இப்பொழுது, இது குடும்ப யாத்திரையாக இல்லாமல், 50 பேர் வரை ஒன்று சேர்ந்து travels மூலமாக முன்னேற்பாடு பண்ணி, தங்கும் வசதி முதல் எல்லா வசதிகளையும் plan பண்ணி செல்வதால், இந்திய வரைபடத்தில் இருக்கும் எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும் மக்கள் செல்வது சாதாரணமான நிகழ்ச்சி ஆகி விட்டது. இவையெல்லாம் எப்படி நடந்தது….? வழிப்போக்கர்கள், செல்லும் இடங்களில் தான் கண்ட காட்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதனால்தானே….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2