பெண்களால் முடியும் - பாகம் 11
கிருஷ்ணர் : உலகத்தில், மக்களின் நடவடிக்கைகளால், நன்மையும், தீமையும் நடக்கின்றது…. எப்பொழுதெல்லாம், தர்மம் தொலைந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுதெல்லாம், அதர்மத்தை அழிக்க யாராவது ஒருவர் தோன்றுவார்…. இதில் ஆணென்ன, பெண்ணென்ன….
மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… சாதுர்யமான நடவடிக்கை மட்டுமல்ல கிருஷ்ணா…, சிங்கம் போல சீறிப் பாயும் வீரத்திலும், பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை, வீரப் பெண்மணிகள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய, நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு காலக்கட்டத்தில், தங்கள் தேசத்தைக் காக்க போராடியவர்கள் ஏராளம்… அதிலும் குறிப்பாக, மராட்டிய தேசத்தில், 1857-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், ஜான்சிராணி காட்டிய வீரம் அற்புதம் கிருஷ்ணா… அவர் போரிடும் திறமையைக் கண்ட ஆங்கிலேயர் ஒருவர்…, ’குதிரையின் கடிவாளத்தைப் பற்களால் கடித்துக் கொண்டே குதிரையைச் செலுத்தி, சுழன்று சுழன்று வாள் வீச்சால், ராணி லட்சுமிபாய் நம்மை விரட்டிய போது, நான் திகைத்துப் போனேன்’ என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணா…. ‘ராணி லட்சுமிபாய்’ என்ற இவருடைய பெயரைக் கூட, ஜான்சி பிரதேசத்து மக்கள், அன்பின் மிகுதியால், ‘ஜான்சிராணி’ என்று கூப்பிடுமளவுக்கு, மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்… சிறு வயதில் கணவனை இழந்த பிறகு, அரசுப் பொறுப்பைத் தானே ஏற்று நல்லாட்சி கொடுத்தது மட்டுமல்ல கிருஷ்ணா…, ஆங்கிலேயர்களை எதிர்ப்பதிலும் தீவிரம் காட்டியிருக்கிறார். இவர் வாழ்ந்த காலங்களில், ஆங்கிலேயர்கள், ஜான்சி பிரதேசத்தில் ஆக்ரமிக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசங்களிலும், ஒவ்வொரு விதமாக, தந்திரமாக ஆக்ரமித்திருக்கிறார்கள்….
கிருஷ்ணர் : வேதனயான விஷயம் என்றாலும், நம் நாடு.., நம் மக்கள்…, என்ற உணர்வு ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் உண்டு… இன்னும் ஒன்றை யோசித்தாயா மேகலா…. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாகவே…, நம் பாரதத்தில், அரசுப் பொறுப்பை, பெண்களும் ஏற்று நடத்தியிருக்கிறார்கள்... பெண்களால் முடியும் மேகலா….
மேகலா : மகாராஷ்டிராவில், ஜான்சி பிரதேசத்தை, ராணி லட்சுமிபாய் ஆண்டு வந்தார்கள் என்றால், தமிழகத்தில், சிவகங்கை பிரதேசத்தை ஆண்டு வந்தவர் வீர மங்கை வேலு நாச்சியார். இவருடைய காலம், ராணி லட்சுமிபாய் காலத்திற்கும் முந்தையது கிருஷ்ணா…. 1780 – 1790 என்ற காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய வீரப் பெண்மணி… 1772-ல், ஐரோப்பியர் சிவகங்கைச் சீமையில் படையெடுக்கின்றனர். வேலு நாச்சியாருக்கு உருது மொழி தெரியும்… கர்நாடகாவின் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி, ஐரோப்பியர்களை எதிர்க்க உதவி கேட்கிறார். அவரும் உதவி செய்வதாக உறுதி கொடுக்கிறார்…. திண்டுக்கல், விருப்பாச்சி, அய்யம்பாளையம் என்று, தான் இருக்குமிடத்தை யாரும் அறியாவண்ணம், மாறி, மாறி, மாற்றியமைக்கிறார்…. சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, எதிர்ப்புப்படை ஒன்றை உருவாக்கினார். மருது சகோதரர்களுடன் சேர்ந்து, வேலு நாச்சியார், இப்போராட்டத்துக்கு தலமை தாங்கினார்…. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்கிற்கு, தற்கொலைப்படையை அனுப்பி வைத்து, தீ வைத்தார்…. இதையெல்லாம் படிக்கும் போது…, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது கிருஷ்ணா… தன் கணவர் இறந்த பிறகும், தான் அரசுப் பொறுப்பை ஏற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, துணிச்சலுடன் போராடிய வீரப் பெண்…, ராஜ தந்திரங்கள் நிறைந்தவர்… புத்தி சாதுர்யம், தெளிவு, தன்னம்பிக்கை, தைரியம், பல மொழிகளில் புலமை…, என்று அஷ்டலட்சுமியும் நிறைந்தவர்….
கிருஷ்ணர் : வீர மங்கை வேலு நாச்சியார், பெண்களின் pride… முடியும்…, பெண்களால் எதுவும் முடியும் மேகலா….
மேகலா : வீரம், தைரியம், புத்திசாதுர்யம் மட்டுமல்ல கிருஷ்ணா… சபையேறி, நீதிக்காக வாதாடி ஜெயித்த வக்கீல்களிலும், சாதனை படைத்த பெண்கள் இருக்கிறார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஆமாம்…, எமனிடமே வாதிட்டு, புருஷன் உயிரை மீட்டு வந்த சாவித்திரி பிறந்த மண் அல்லவா… சரி, நீ யாரைக் குறிப்பிடுகிறாய்….
மேகலா : பூம்புகாரில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, உலக நடவடிக்கைகள் எதுவும் புரியாத வயதில், செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் மணம் முடிக்கப் பெற்ற ஒரு அப்பாவிப் பெண் கண்ணகியைப் பற்றித்தான் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஓ! ஆமாம்…, தன் வழக்கினைத் தானே வாதாடி, அரசனுடைய தீர்ப்பு தவறானது என்று சுட்டிக் காட்டிய பெண்… ஒன்று நன்றாகப் புரிகிறது மேகலா… அப்பாவியோ…, அமைதியானவரோ…, சிறு வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்று, கணவனைச் சார்ந்து வாழும் பெண்கள் கூட…, தன் கணவனுக்கு ஒரு துன்பம் நேரும் போது…, தனக்குள் இருக்கும் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தி, துன்பப்படுத்தியவர்களை…, ‘உண்டு’, ‘இல்லை’ என்று பண்ணி விடுகிறார்கள். துன்பம் நம்மை நெருக்கும் போது, பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நாம் கடந்து வந்த சரித்திரம் கூறுகிறது…. சரி…, நீ கதையைச் சொல்லு….
(தொடரும்)
Comments
Post a Comment