வலிமை - பாகம் 2

கிருஷ்ணர் : உனக்கு ஒண்ணு தெரியுமா…. அகம்பாவத்தோடு…, ‘நான் அதைச் செய்தேன்…, இதைச் செய்தேன்…, எனக்கு இந்திரன் பயப்படுவான்…, எமனே என் முன்னே கை கட்டி நிற்பான்…, என்னைக் கொல்ல, மூவுலகிலும் எவனும் கிடையாது’ என்று பேசிப் பேசியே, ராவணன் வலுவிழந்தான்… இப்படி எதுவும் பேசாமலேயே, ராவணனை, ராமர் வதம் செய்தார்…. ‘வலிமை’ எப்பவும் ரொம்பப் பேசாது. பேசுபவன், அடக்கமில்லாதவன்… ‘ஒரு இல்…, ஒரு சொல்…, ஒரு வில்’ என்று பரிசுத்தமாய் வாழ்ந்த ராமர், நிச்சயமாக வலிமையானவர்தான் மேகலா….

மேகலா : கிருஷ்ணா; நீ சொன்னாயே, வலிமையானவர்கள் ரொம்பப் பேச மாட்டங்க என்று; ஆனால், இங்கு ஒருவர்,

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’

‘வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்’

என்று சொல்லியிருக்கிறாரே…, அது அடக்கமின்மையா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! நம்ம ‘பாரதரத்னா’ அப்துல் கலாம் ஐயாவை சொல்றியா… ‘வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்’ என்ற இந்த வார்த்தையில், நீ என்ன குறை கண்டாய்… அவர் எந்த இடத்தில் நின்று பேசுகிறார்…. தீவிரவாதத்தால், இரு நாடுகளுக்கிடையில், பிரச்னை தலையெடுக்கும் போது, அதைத் தடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு வல்லவன்; ’நான் வலிமையானவன், எங்கிட்ட மோதாதே’ என்றுதான் பேசுவான். வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்… தீவிரவாதிகள்…, அவர்கள் செய்யும் வன்முறையால்…, அவர்களுக்கான விதியை அவர்களே தீர்மானம் செய்கிறார்கள்…. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’… தீவிரவாதத்தை எங்கள் ராணுவம் கொண்டு அடக்குவோம்…, என்று தீவிரவாதத்திற்கு பதில் சொல்பவன், வலிமையானவர்களில், நேர்மையானவன்…. ‘வலிமை’, ச்சும்மா வளவளன்னு பேசாது; ஆனால், ஒரு வார்த்தை பேசினாலும்.., நச்சுனு மூஞ்சில குத்துற மாதிரி பேசுவார்கள்… சரி…, இன்னொரு டயலாக்கைப் பார்ப்போம்… ‘நாங்கள் கிருஷ்ணரை வழிபடுபவர்கள்; அவர் கையில் புல்லாங்குழல் இருக்கிறது…, நட்பு நாடி வந்தால், நாங்கள், இன்னிசை இசைத்து, நட்பு பாராட்டுவோம்… அதை விடுத்து, ‘நில அபகரிப்பு’ என்ற முறையில் அத்துமீறல் நடந்தால், …, கிருஷ்ணர் கையில் ‘சக்ராயுதம்’ இருக்கிறது…. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்…’ என்று யார் பேசியது… அவர் வலிமையானவரா…, மென்மையானவரா…..

மேகலா : இந்த அருமையான வீர மொழியைப் பேசியவர்…, நம்முடைய பாரதப் பிரதமர், மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள்தான் கிருஷ்ணா…. அதுவும், ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பேசியது…, நம் நாட்டு வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்குமிடையில் கை கலப்பு நடந்த போது… அதுவும், நம்ம நாட்டு எல்லையில், அத்துமீறி நுழைந்ததுமல்லாமல், நம்ம நாட்டு வீரர்களைக் கையாலேயே கொன்று விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு, கைகலப்பில் ஈடுபட்ட போது…, நம்ம நாட்டு வீரர்கள் அவர்களைக் கொன்று விரட்டியடித்த பின் பாரதப் பிரதமர் பேசிய பேச்சு… உலக அளவில் நாம் சாதிக்க வேண்டிய நேரம் இது… நில அபகரிப்பை விட்டு விட்டு, நாட்டு வளர்ச்சியில் ஈடுபடுங்கள் என்று அறிவுரை கூறி…, மீறினால்…, என்று தோளைத் தட்டி பலம் காட்டினார் கிருஷ்ணா… சொல்லி அடிப்பதிலும்…, சொல்லாமல் அடிப்பதிலும் மோடிஜி…, கில்லி…, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கில்லியா…., அப்படீன்னா…

மேகலா : என்ன கிருஷ்ணா…. இது தெரியாதா…. ‘வலிமையானவர்’…,

கிருஷ்ணர் : Oh! பார்த்தாயா…, ராமர் பேசாமல், தன் வலிமையைக் காட்டினார்… இங்கு, பாரதரத்னாவும்…, பாரதப் பிரதமரும், பேச வேண்டிய இடத்தில் வலிமையாகப் பேசினதால்தானே…, பாரதம் விழித்துக் கொண்டது…. தீவிரவாதமும், படையெடுப்பும் இனி வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்டார்கள். சிலரிடம் பேசக் கூடாது…, பலம் காட்ட வேண்டும்… சில இடங்களில், பேசியே ஆக வேண்டும்… என்றாலும், வலிமையானவர்கள், சும்மா உதார் விடுற வேலையெல்லாம் செய்வதில்லை… முரட்டுப் பிடிவாதமும், முட்டாள்தனமான வீரவசனமும்…, வீரம் கிடையாது…, வலிமையும் கிடையாது…..

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சினிமாலெல்லாம், வில்லன் ஆட்கள் பலப்பல ஆயுதங்களுடன், hero-வைச் சுற்றி நின்று மிரட்டுவாங்க… ஆனால், hero-வோ, ஒரு ஆயுதமும் கையில் இல்லாமல்…, தொடையைத் தட்டி…, ‘கண்ணா, பண்ணிங்கதான் கூட்டமா வரும்…, சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று பஞ்ச் டயலாக் பேசி, சண்டை போடுவாங்க…. அத்தனை ஆயுதத்தையும், புறங்கையாலேயே தட்டி…, பறந்து பறந்து அடிப்பாங்க கிருஷ்ணா… Hero-வுக்கு ஒரு அடி கூட விழாது… Make-up கலையாம ஜெயிச்சிருவாங்க….

கிருஷ்ணர் : அதான் நானும் பார்க்கிறேனே. வலிமையானவன் என்பவன் தோற்கவே மாட்டான் என்று நினைக்கிறாயா…

மேகலா : எனக்குத் தெரியல கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஒரு மனிதனுக்கு, வைராக்கியம் வர வரத்தான் வலிமை வருகிறது. அவனுக்குள் எப்போ வைராக்கியம் வருகிறது? ஒரு செயலோ…, ஒரு project-ஓ…, அல்லது ஒரு போரோ…, அதில் தோற்றுப் போகும் பொழுது…, அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்று வைராக்கியம் வருகிறது… தான் அடைந்த தோல்வியில்…, தான் சந்தித்த அவமானத்தில், தடைகளில், வெற்றிக்கான வழியைத் தேடுகிறான். அவனுக்கு வைராக்கியம் உறுதியாகிறது.., வலிமையும் பெருகுகிறது… வலிமையானவர்கள், பஞ்ச் டயலாக் எல்லாம் பேச மாட்டார்கள்… உள்ளுக்குள், ஜெயிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான், சர்வ காலமும், அவனுக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்….

மேகலா : நீ சொன்ன பிறகுதான் யோசித்துப் பார்த்தேன் கிருஷ்ணா… தடைகளைத் தாண்டி, தோல்வியை முறியடித்து ஜெயிக்கும் சாதனையாளர்கள், சாதாரணமாக, புகழுக்கும் மயங்குவதில்லை…, யாருக்கும் தலை வணங்குவதுமில்லை கிருஷ்ணா…. இது மாதிரி வலிமையானவர்கள், சரித்திரம் படைப்பார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்படி யாரையாவது உனக்குத் தெரியுமா மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2